`திருக்குறளை வைத்து மத வெறியை தூண்டப் பார்க்கிறார்' - ஆளுநர் ரவிக்கு எதிராக சீறும் ஜோதிமணி எம்பி

டெல்லி விழாவில் ஆளுநர் ரவி
டெல்லி விழாவில் ஆளுநர் ரவி

'திருக்குறளை மொழி பெயர்த்த ஜி.யு. போப் திருக்குறளில் உள்ள ஆன்மிக சிந்தனைகளை நீக்கிவிட்டார்' என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி 'திருக்குறளை வைத்து ஆளுநர் மதவெறியை தூண்ட பார்க்கிறார்' என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

டெல்லியில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். அவ் விழாவில் பேசிய அவர், "திருக்குறளின் முதல் குறளில் ஆதிபகவன் என்று திருவள்ளுவர் எழுதி இருக்கிறார். ஆதி பகவன் தான் இந்த உலகத்தை படைத்தார். அதைத்தான் திருவள்ளுவர் கூறுகின்றார்.

ஆனால் ஜி.யு.போப் தனது மொழிபெயர்ப்பில் ஒரு அவமதிப்பை செய்திருக்கிறார். ஒட்டுமொத்த திருக்குறளையும் அவர் ஆன்மிகமற்றதாக ஆக்கியிருக்கிறார். தனது மொழிபெயர்ப்பில் திருக்குறளில் இருந்த ஆன்மிக தாக்கத்தை அவர் தவிர்த்திருக்கிறார். ஜி.யு. போப் ஒரு மதபோதகர். அவர் சுவிஷேசத்தை பரப்பும் சொசைட்டியின் உறுப்பினர். 1813-ல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம், ஒரு சட்டத்தை இந்திய சாசனம் என்ற பெயரில் நிறைவேற்றியது. அதில், இந்தியாவில் கிறிஸ்துவ இறை நம்பிக்கையை பரப்பும் நோக்கம் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படியே ஜி.யு.போப் இந்தியாவுக்கு ஊழியம் செய்வதற்காக வந்தார், தமிழை பயின்றார், திருக்குறளை தேர்ந்தெடுத்து அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதில் இருந்த ஆன்மாவையை பிரித்தெடுத்தார்.

மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த ஜி.யு.போப் தந்திருக்கும் திருக்குறளின் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல இருக்கிறது. திருக்குறளில் உள்ள பக்தி ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளது. ஜி.யு. போப் தனது மொழி பெயர்ப்பில் ஆதி பகவன் என்பதை தவிர்த்துள்ளார். அப்படிப்பட்ட பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பை விடுத்து உண்மையை வெளிக்கொணர வேண்டும்" என்று பேசியிருந்தார்.

கனடாவில் பிறந்து கிறிஸ்தவ மிஷனரியாக இந்தியா வந்து 40 ஆண்டுகாலம் தமிழுக்கு சேவை செய்த பெருமைக்குரிய ஜி.யு.போப், திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தமிழ் இலக்கியத்தின் மேன்மையை உலக அரங்குக்கு கொண்டு என்றவர் என்று போற்றப்படுகிறார். இந்நிலையில் அவரை குற்றம்சாட்டும் வகையில் ஆளுநர் ரவி பேசி இருப்பதற்கு தமிழறிஞர்கள் மத்தியிலும், மத அமைதியை விரும்புகிறவர்கள் மத்தியிலும் பெரும் கண்டனம் எழுந்துள்ளது.

ஜோதிமணி எம்.பி
ஜோதிமணி எம்.பி

அதுமட்டுமில்லாமல் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஜி.யு.போப் திருக்குறளை மொழிபெயர்த்த விதம் குறித்தும் அவர் இந்தியாவுக்கு வந்த நோக்கம் குறித்தும் ஆளுநர் பேசியிருக்கும் கருத்துக்கள் கிறிஸ்துவ சமூகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்த தமது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டிருக்கிறார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. "தமிழக ஆளுநர் திருக்குறளை வைத்து மதவெறியை தூண்டலாம் என்று நினைப்பது தமிழகத்தைப் பற்றியும், உலகப் பொதுமறையான திருக்குறளைப் பற்றியும் அவருக்கு எந்தப் புரிதலும் இல்லை என்பதையே காட்டுகிறது. இது அன்பின் நிலம், பகுத்தறிவின் நிலம். ஒற்றுமையின் நிலம். பிரிவினைக்கு இங்கே வேலையில்லை.

மாண்புமிகு தமிழக ஆளுநருக்கு கீழ்க்கண்ட குறளைப் பரிந்துரை செய்கிறேன். "புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற" ஒற்றுமையைப் போல் வேறொன்றை கடவுளர் உலகம் சென்றாலும் பெற இயலாது என்பது அதற்கு பொருள். திருக்குறளை முழுக்க படியுங்கள். அறிவும், மனதும் விசாலமாகும்" என்று ஜோதிமணி தெரிவித்திருக்கிறார்.

அண்மைக் காலமாக ஆளுநர் ரவியின் பேச்சுக்கள் தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் தமிழகம் தாண்டியும் தனது கருத்துக்களை தெரிவித்து சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் ஆளுநர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in