மாவட்ட ஆட்சியர்களோடு மோதும் ஜோதிமணி!

மாவட்ட ஆட்சியர்களோடு மோதும் ஜோதிமணி!
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஜோதிமணி போராட்டம்

2019 நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியபோது, அப்போதைய கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மோதல் போக்கைக் கடைபிடித்தார் ஜோதிமணி. அதன்காரணமாக ஆட்சியர் அன்பழகன் கொடுத்த புகாரின்பேரில், ஜோதிமணி மற்றும் செந்தில்பாலாஜி மீது அப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு, தற்போதைய கரூர் மாவட்ட ஆட்சியருடன் மோதல்போக்கை மேற்கொண்டிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. இப்போதைய போராட்டத்தில் ஜோதிமணியுடன் செந்தில்பாலாஜி இல்லை என்பதுதான் ஒரே வித்தியாசம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.25) உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான தன்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து இந்த உள்ளிருப்புப் போராட்டதை நடத்துவதாகக் கூறியிருக்கிறார்.

கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில், மாற்றுத் திறனாளி மக்களுக்கு அலிம்கோ நிறுவனம் வாயிலாக செயற்கை உடல் உறுப்புகள் வழங்கிட மத்திய அரசு மூலம் தான் அனுமதி பெற்றிருப்பதாகவும், ஆனால் கரூர் மாவட்ட ஆட்சியர் அதற்கான முகாம்களை நடத்த மறுக்கிறார் என்பது அவரது குற்றச்சாட்டு. தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ஜோதிமணியிடம் ஆட்சியர் பிரபுசங்கரும் தரையில் அமர்ந்து சமாதானப்படுத்தினார்.

மாநில அரசின் மாற்றுத்திறனாளிகள் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக அவர் விளக்கம் கூறினாலும், அதை ஜோதிமணி ஏற்கவில்லை. அலிம்கோ சார்பில் சிறப்பு முகாம்களை நடத்துவதாக உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவதாக அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

தரையில் அமர்ந்து பேச்சு நடத்தும் ஆட்சியர் பிரபுசங்கர்
தரையில் அமர்ந்து பேச்சு நடத்தும் ஆட்சியர் பிரபுசங்கர்

இந்தப் போராட்டம் குறித்து ஜோதிமணி கூறியதாவது:
“கரூர் பாராளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி ஆற்ற விடாமல் மாவட்ட ஆட்சியர் தடுக்கிறார். தூத்துக்குடி உட்பட மற்ற நாடாளுமன்றத் தொகுதியில் இந்தச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருக்கும் ஆட்சியர்கள் சிறப்பு முகாம்களை நடத்தினார்கள். அங்கு ஆயிரம் பேருக்கும் மேல் செயற்கை உடல் உறுப்புகளை பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

கரூர் மாவட்டத்திலும் அப்படிப் பயனாளிகளை தேர்ந்தெடுத்தால், அந்நிறுவனம் உடனடியாக அனைவருக்கும் செயற்கை உறுப்புகளை வழங்கிவிடும். ஆனால் கமிசன் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்தத் திட்டம் மூலமாக பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய உபகரணங்களை கிடைக்கவிடாமல் மாவட்ட ஆட்சியர் தடுக்கிறார்” என்று ஜோதிமணி குற்றம்சாட்டினார்.

திமுகவுடன் மிகவும் இணக்கமான கூட்டணிக்கட்சியான காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜோதிமணி, இதை ஆட்சியாளர்களிடம் எடுத்துக்கூறியே சரிசெய்திருக்கலாம். என்றாலும் ஜோதிமணியின் கோபம் உண்மையில் ஆட்சியர் மீதுதானா அல்லது ஆட்சியாளர்கள் மீதா என்ற கேள்வி கரூர் மக்களிடம் எழுந்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in