
நீதிமன்றங்களில் தீர்ப்புகள் தான் வழங்கப்படுகிறது. நீதி வழங்குவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் சீமான் இன்று சாமி தரிசனம் செய்தார். இதன் பின், அதிமுகவினருக்கு உயர்நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, " இது நீதிபதிகளின் விளையாட்டு. ஒரு வழக்கு, ஒரே நாடு, ஒரே சட்டம் என்று அப்பாவி மக்கள் சொல்வதை நாம் பார்க்கிறோம், ஆனால் எத்தனை தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன, கீழ் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு, உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு என வழங்கப்படுகிறது. நீதிமன்றங்களில் தீர்ப்புகள் தான் வழங்கப்படுகிறது. நீதி வழங்குவதில்லை. மேலும் இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். இதுகுறித்து கருத்துக் கூற விரும்பவில்லை" என்று பதிலளித்தார்.
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தாயகம் திரும்பியது குறித்த கேள்விக்கு," இலங்கைக்கு உலக நாடுகள் 30 ஆயிரம் கோடி நிதியை வழங்க உள்ளன. இந்த நிலையில் கோத்தபயவிற்கு ஆதரவான நிலையும் உருவாகியுள்ளது. அதனால் அவர் நாடு திரும்பியுள்ளார். இதில் எனக்கு எந்த கருத்தும் இல்லை" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று கூறும் அரசு, எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூற வேண்டும். உதாரணமாக கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வசிக்கிறார்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமானால் தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்தியாவின் முதன்மை மொழி தமிழ் என்று கூறும் பிரதமர் மோடி, அதற்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும்" என்றார்.