சீமான் பாலியல் குற்றவாளி என ஆயிரம் முறை சொல்வேன்!

எகிறி அடிக்கும் ஜோதிமணி எம்.பி
ஜோதிமணி
ஜோதிமணி

பேரறிவாளன் விடுதலை விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கே குண்டு வைத்துவிடுமோ என சிலர் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் காங்கிரஸ் எம்.பி-யான ஜோதிமணியும் தனி ரூட்டில் அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்...
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்...

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழகம் முழுவதும் மே 19-ல், வாயில் வெள்ளைத் துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது காங்கிரஸ் கட்சி. அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ''ராஜீவ் காந்தியோடு சேர்த்து 9 போலீஸார் உள்ளிட்ட 17 பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. தலைவர் ராஜீவ் காந்திக்கும் குடும்பம் இருக்கிறது. பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் மனநிலையை நான் நன்கு அறிவேன். அதுபோல அனைவருக்கும் தாய், மனைவி, குழந்தைகள் உள்ளனர். அவர்கள் மனநிலையை நாம் பார்க்க வேண்டும். சமூகம் இதை ஏற்றுக் கொள்ளுமா? கன்றுக்குட்டி மீது தேரை ஏற்றியது தவறு எனக் கூறி தனது மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த பூமி இது. கொலைகாரர்களுக்குப் பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? " என்று பேசினார்.

இந்த நிலையில், ராஜீவ் நினைவு தினத்தையொட்டி மே 21-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், தமது தந்தை தங்களுக்கு மன்னிக்கக் கற்றுக் கொடுத்துள்ளார் என்று பதிவிட்டார் ராகுல் காந்தி.

இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா ? அவரும் 400 கோடி பீரங்கி ஊழலில் சம்பந்தப்பட்டவர் தான். ஒரு ராணுவத்தை அனுப்பி 26 ஆயிரம் பேரை அழித்தவர். ராகுல் காந்தி தனது தந்தையை கொலை செய்த குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் என்று தெரிவித்தார். ஆனால் அவர் யார் எங்களை மன்னிக்க?” என்று சூடாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் எம்பி-யான ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் சீமானை கடுமையான விமர்சனம் செய்தார். அதில், ‘சீமான் ஒரு பாலியல் குற்றவாளி. சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர், தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயகன் தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சனம் செய்கிற அருகதை கிடையாது’ என அதிரடியாய் பதிவு செய்தார். இதற்குச் சீறிய சீமான், “பாலியல் குற்றத்தை பக்கத்தில் இருந்து ஜோதிமணி பார்த்தாரா?" என கேள்வி எழுப்பினார். இதன் தொடர்ச்சியாக இருவருக்குள்ளும் வார்த்தைப் போர் இன்னமும் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.

இதுகுறித்து சீமானிடம் பேசினோம். “அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தகர்த்த ஒசாமா பின்லேடன் பயங்கரவாதி என்றால், இலங்கையில் என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜீவ்காந்தியை நான் சர்வதேச பயங்கரவாதி என்கிறேன். இதற்கு கருத்தியல் ரீதியாக பதில் சொல்வதற்குப் பதில், ஜோதிமணி தரம் தாழ்ந்த முறையில் பேசி வருகிறார். சீமானை இப்படி பேசுவது மூலம் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகி விடலாம் என ஜோதிமணி நினைக்கிறார்” என்ற அவர், " பாஜக நிர்வாகி கே.டி.ராகவன் விவகாரத்தில் நான் அவருக்கு ஆதரவு குரல் கொடுத்ததாக ஜோதிமணி கூறுகிறார். கே.டி.ராகவன் செயலை நான் ஆதரிக்கவில்லை. அவர் செய்தது தவறு தான். ஆனால், சமூக ஒழுக்கக்கேட்டை ஏற்படும் இந்த மோசமான சம்பவத்தை வீடியோவாக பரப்ப என்ன அவசியம் ஏற்பட்டது?

சீமான்
சீமான்

இதைக்கேட்டால், நான் பாஜக பீ டீம் என்கிறார். பாலியல் குற்றவாளி என்கிறார். எனக்கும் மனைவி, குழந்தை குடும்பம் உள்ளது. இந்த நிலையில், நான் தினமும் நான்கு பேரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வது போல ஜோதிமணி தொடர்ந்து பேசி வருகிறார். எங்களுக்கான லட்சிய பயணத்தி்ற்கு இடையே இப்படியான அவதூறை எப்படிச் சகித்துக் கொள்வது? தனித்து நின்றால் 10 ஆயிரம் வாக்குகள் கூட வாங்க முடியாத ஜோதிமணி இப்படி பேசிக் கொண்டிருக்கிறார். அவர் ரெடி என்றால் நான் பிரபாகரன் பெயரைச் சொல்லி தேர்தலில் நிற்கிறேன். அவர் ராஜீவ்காந்தி பெயரைச் சொல்லி தேர்தலில் நிற்கட்டும். யார் அதிக வாக்குகள் வாங்குகிறோம் என பார்க்கலாம். இப்போது இருக்கிற தலைமுறை பிள்ளைகளுக்கு ராஜீவ்காந்தியைத் தெரியாது. ஆனால், பிரபாகரனைத் தெரியும். எனவே, ஜோதிமணி அவதூறு பிரச்சாரத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளட்டும்" என்றார்.

சீமானின் குற்றச்சாட்டுகள் குறித்து ஜோதிமணியிடம் பேசினோம். "சீமானை விமர்சிப்பதற்காகவெல்லாம் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியைத் தருவார்களா? அதற்கான வொர்த் சீமானுக்கு இல்லை. சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என்ற குற்றச்சாட்டை நான் வைக்கவில்லை. அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணே வைத்துள்ளார். அவரின் குற்றச்சாட்டு பொய் என்றால், அதை ஏன் சீமான் முடிவுக்குகொண்டு வரவில்லை? அப்படி வரும் வரை நான் அதைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு தான் இருப்பேன். எனவே, சீமான் என் வாயை அடைக்க முடியாது. சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது ஏன் சீமான் புகார் செய்யவில்லை? கோர்ட்டுக்குப் போய் மானநஷ்ட வழக்கு போட வேண்டியது தானே?" என்று கேள்வி எழுப்பினார் ஜோதிமணி.

தொடர்ந்து அவர் பேசுகையில், " கே.டி. ராகவன் பாலியல் புகாரின் போது அவரை பாஜக தலைவர்கள் கூட ஆதரிக்கவில்லை. ஆனால், தன்னைப் போல இருக்கும் ராகவனை சீமான் பாதுகாக்க நினைக்கிறார். இதைக் கேட்டால், கையைப் பிடிச்சு இழுத்தேனா என்று கேட்கிறார். இப்படியெல்லாம் பாலியல் வக்கிரம் நிறைந்தவரால் மட்டுமே பேச முடியும். அதுவும் ஒரு பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு சீமானால் எப்படி இப்படி பேச முடிகிறது? சீமான் பாலியல் குற்றவாளி என ஆயிரம் முறை சொல்வேன். அவர் அநாகரிகமாக என்னைப் பேசுவதால் நான் பின்வாங்கி விட மாட்டேன்.

நான் ஒன்றும் சீமானைப் போல ஊரை அடித்து உலையில் போட்டு உல்லாச வாழ்க்கை வாழவில்லை. முழு நேர மக்கள் சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையே, கையைப் பிடித்து இழுத்தேனா எனக் கேட்கும் போது சாமானியப் பெண்களை இவர் எப்படி நடத்திருப்பார் என்ற கேள்வி எழுகிறது. பெண் என்றால் உடலாகத்தான் சீமான் பார்க்கிறார். ஒரு பெண்ணை பொது வெளியில் இப்படி பேசுவதன் மூலம் மற்ற பெண்கள் என்ன நினைப்பார்கள் என்கிற உணர்வுகூட சீமானுக்கு இல்லை” என்று ஆவேசப்பட்டார்.

சீமானுக்கும் ஜோதிமணிக்கும் இடையே நடக்கும் இந்த அறிக்கை யுத்தம் எதைச் சாதிக்கப் போகிறதோ தெரியவில்லை. ஆனால், வலைதளத்தில் வலம்வருபவர்களுக்கு நன்றாகவே நொறுக்குத் தீனி போடுகிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in