திரௌபதி முர்முக்கு திடீரென ஆதரவளிக்கும் காங்கிரஸ் கூட்டணி கட்சி: என்ன காரணம்?

ஹேமந்த் சோரன்.
ஹேமந்த் சோரன்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன் 2015 முதல் 2021 வரை ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருந்த திரௌபதி முர்முவுக்கு வாக்களிக்குமாறு ஜேஎம்எம்மின் மூன்று எம்.பி.க்கள் மற்றும் 30 எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிட்டார்.

ஜூன் 21 அன்று ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை 17 கட்சிகளின் தலைவர்களுடன் சேர்ந்து ஜார்க்கண்ட் முதலமைச்சரும் ஜேஎம்எம் கட்சியின் நிர்வாகத் தலைவருமான ஹேமந்த் சோரன் பரிந்துரை செய்த நிலையில் தற்போது அந்த கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.

பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்க கட்சி முடிவு செய்துள்ளதாகவும், சோரன் மற்றும் முர்மு இருவரும் ஜார்கண்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆதிவாசி சமூகமான சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஷிபு சோரன் எழுதியுள்ள கடிதத்தில், “சுதந்திரத்திற்குப் பிறகு ஆதிவாசிப் பெண் ஒருவர் குடியரசுத் தலைவராகப் பதவியேற்பது இதுவே முதல்முறை. இது நமக்கு பெருமைக்குரிய தருணம். எனவே நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு, அவருக்கு ஆதரவாக வாக்களிக்க கட்சி முடிவு செய்துள்ளது. எனவே, அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஜூலை 18-ம் தேதி அவருக்கு வாக்களிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் ராய்ராங்பூர் பகுதியைச் சேர்ந்த திரௌபதி முர்முவுக்கும், சோரன் குடும்பத்துக்கும் நெருக்கமான உறவு உள்ளது. ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா மயூர்பஞ்ச் பகுதியை சேர்ந்தவர். ஹேமந்த சோரனின் சகோதரி அஞ்சலியும் மயூர்பஞ்ச் சேர்ந்த ஒருவரையே திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நிலக்கரி சுரங்க வழக்குகள் காரணமாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடும் நெருக்கடியில் உள்ளார். எனவே ஜார்க்கண்டில் காங்கிரஸை கழட்டிவிட்டு பாஜக ஆதரவுடன் அவர் ஆட்சியமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஜேஎம்எம் பாஜகவின் குடியரசுத்தலைவர் வேட்பாளரை ஆதரித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in