ஒரு கிறிஸ்தவர் குண்டை வெடிக்கச் செய்திருப்பாரா..? சந்தேகம் கிளப்பும் ஜார்கண்ட் ஆளுநர்!

ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஒரு கிறிஸ்தவர் வெடிகுண்டை வெடிக்க செய்திருப்பார் என்பது சந்தேகத்திற்குரியது எனவும், கேரள அரசு உரிய விசாரணை மேற்கொண்டு, உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமச்சேரியில் யேகோவா விட்னஸஸ் எனப்படும் கிறிஸ்தவ வழிபாட்டுக் கூடத்தில் நேற்று காலை 3 சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 2 பெண்கள், ஒரு சிறுமி என இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 45க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக டோமினிக் மார்ட்டின் (48) என்பவர் போலீஸில் சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கருத்து வேறுபாடு காரணமாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் செய்த நேரலை வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தொடங்கியுள்ளது.

கேரள வெடிகுண்டு சம்பவம்
கேரள வெடிகுண்டு சம்பவம்

இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், “கேரளமும், தமிழகமும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பல்வேறு கட்டங்களில் ஆபத்தை எதிர்கொண்டு இருக்கிறது. பல உயிர்களை இழந்திருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இரண்டு மாநில அரசுகளும், பயங்கரவாதத்தை ஆதரிப்பதுதான் இஸ்லாத்தை ஆதரிப்பது என நினைத்துக் கொண்டிருக்கின்றன.

கேரளாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் அரசாங்கமும் சரி, தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசாங்கமும் சரி, வெடிகுண்டு வைப்பவர்களையும், கொலைகாரர்களையும் பாதுகாக்கும் அரசாங்கமாக இருக்கின்றன. இதனால்தான் இதுபோன்ற வன்முறைகளை கட்டுப்படுத்த முடிவதில்லை.

நிச்சயமாக ஒரு கிறிஸ்தவர், தனது கிறிஸ்தவ வழிபாட்டுக் கூட்டத்தில் வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கச் செய்திருப்பார் என்பதை நம்ப முடியவில்லை. கேரளா அரசு முனைப்புடன் செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், என்ஐஏ இதில் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in