பேருந்துகளில் புறப்பட்ட எம்எல்ஏக்கள்; மகிழ்ச்சியுடன் செல்ஃபி எடுத்த ஹேமந்த் சோரன்: ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு!

பேருந்துகளில் புறப்பட்ட எம்எல்ஏக்கள்; மகிழ்ச்சியுடன் செல்ஃபி எடுத்த ஹேமந்த் சோரன்: ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு!

ஜார்க்கண்டில் ஆளும் ஜேஎம்எம் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேருந்துகளில் குந்தி மாவட்டத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநில முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் தலைமையில் சுமார் 45க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலத்த பாதுகாப்புடன் கூடிய பேருந்துகளில் குந்தி மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

ஜேஎம்எம், காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் மூன்றாவது சுற்று ஆலோசனைக்கு பிறகு, எம்எல்ஏக்களை இடம் மாற்றும் வியூகத்தை ஹேமந்த் சோரன் எடுத்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டமன்ற உறுபினர்கள் பேருந்துகளில் செல்லும் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ஒன்று ஹேமந்த் சோரன் எம்எல்ஏக்களுடன் மகிழ்ச்சியுடன் பேருந்தின் உள்ளே இருந்து செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆகும்.

ஆளும் கூட்டணியின் கூட்டத்திற்கு எம்எல்ஏக்கள் தங்கள் பொருட்களுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் தெரிவித்தார். ஜார்க்கண்ட் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் கூட்டம் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தலைமை தாங்குகிறார்.

சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசி ஆட்சியைக் கவிழ்க்கும் செயலை முறியடிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜேஎம்எம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டதாக 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனர்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ தகுதி நீக்க உத்தரவை ஆளுநர் ரமேஷ் பைஸ் இன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in