ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு: எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு: எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற சலசலப்பு எழுந்துள்ள நிலையில், இன்று அவர் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சுரங்க குத்தகையை தனக்குத்தானே ஒதுக்கீடு செய்ததன் மூலம் தேர்தல் சட்டத்தை மீறியதற்காக முதல்வர் ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தனது கருத்தை தேர்தல் ஆணையம் ஜார்கண்ட் ஆளுநர் ரமேஷ் பைஸுக்கு நேற்று அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதன் மூலமாக ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவி பறிபோகலாம் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஹேமந்த் சோரன் இன்று ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி அரசின் பதவிகாலம் 2024 வரை உள்ள நிலையில், ஹேமந்த் சோரன் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் ஜார்க்கண்டில் ஆட்சியை கலைத்துவிட்டு பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்து வருகிறது.

தகுதி நீக்கம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்தோ அல்லது கவர்னர் ரமேஷ் பைஸிடமிருந்தோ எந்த தகவலும் வரவில்லை என ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

மேலும், "ஒரு பாஜக எம்பி உட்பட பாஜக தலைவர்கள் தாங்களாகவே தேர்தல் ஆணைய அறிக்கையை தயாரித்துள்ளனர். இல்லையெனில் சீல் வைக்கப்பட்ட கவரில் உள்ள தேர்தல் ஆணைய கடிதத்தின் விவரங்கள் இவர்களுக்கு எப்படி தெரியும். அரசியலமைப்பு அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புகள் இப்படி தவறாக பயன்படுத்தப்படுவதுடன், அவை முழுவதுமாக பாஜக தலைமையகத்தால் வெட்கக்கேடான முறையில் முழுமையாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய ஜனநாயகத்தில் காண முடியாதது" என்று ஹேமந்த் சோரன் கூறினார்.

ஹேமந்த் சோரன்.
ஹேமந்த் சோரன்.

ஒருவேளை ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தெரிவித்துள்ளது. அதுபோல ஹேமந்த் சோரன் தகுதிநீக்கம் செய்யப்பட்டால், அவரின் மனைவி கல்பனா சோரன் முதல்வராகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையில், ஜேஎம்எம் கட்சிக்கு 30 உறுப்பினர்கள், காங்கிரஸ் 18, ஆர்ஜேடி 1, என்சிபி 1, சிபிஐ எம்-எல் 1 என மொத்தம் 52 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் ஆட்சியில் உள்ளார். ஒரு காங்கிரஸ் நியமன உறுப்பினரும் சட்டசபையில் உள்ளார். ஜார்க்கண்டில் பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in