
நாகாலாந்தில் நெய்பியூ ரியோ முதலமைச்சராக உள்ள என்டிபிபி-பாஜக கூட்டணி அரசாங்கத்திற்கு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் செஞ்சுமோ என்எஸ்என் லோதா தனது ஆதரவுக் கடிதத்தை சமர்ப்பித்தார். இந்த நிலையில் நாகாலாந்தில் ஜேடியு அமைப்பு கலைக்கப்பட்டதாக மத்திய தலைமை தெரிவித்துள்ளது.
நாகாலாந்தில் என்டிபிபி-பாஜக கூட்டணி 37 இடங்களில் வென்று முதல்வராக நெய்பியூ ரியோ பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் அம்மாநிலத்தில் வெற்றிபெற்ற தேசிய வாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், குடியரசுக்கட்சி(அத்வாலே), எல்ஜேபி போன்ற பல கட்சிகள் அம்மாநில அரசுக்கு ஆதரவளித்ததால், அங்கே எதிர்க்கட்சியே இல்லாத சட்டமன்றம் அமைந்துள்ளதாக சொல்லப்பட்டது. மத்தியில் என்சிபி மற்றும் ஜேடியு தலைவர்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நாகாலாந்தில் அவர்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்தது பெரும் சலசலப்பை உருவாக்கியது.
இந்த நிலையில்தான் மத்திய தலைமையுடன் கலந்தாலோசிக்காமல், மாநிலத் தலைமையால் ஆதரவுக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டதாக ஜேடியு பொதுச் செயலாளர் அஃபாக் அகமது கான் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் நாகாலாந்து தலைவர் செஞ்சுமோ என்எஸ்என் லோதா கட்சி விதிமுறைகளுக்கு புறம்பாக ஆதரவுக் கடிதம் அளித்துள்ளார். எனவே நாகாலந்து மாநில கட்சி அமைப்பு கலைக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய ஜேடியு செய்தித் தொடர்பாளர் சுனில் சிங், “நாடு முழுவதும் பாஜக திணிக்க விரும்பும் "எதிர்ப்பற்ற அரசியலுக்கு" நாகாலாந்து ஒரு எடுத்துக்காட்டு. கட்சி மேலிடத்துடன் முன் ஆலோசனையின்றி ஒருதலைப்பட்சமான முடிவை செஞ்சுமோ என்எஸ்என் லோதா எடுத்துள்ளார்” என்று அவர் கூறினார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி இந்த தேர்தலில் ஏழு இடங்களில் போட்டியிட்டு 3.3 சதவீத வாக்குகளைப் பெற்று ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.