`ஜெயலலிதா மரணத்தில் பிரச்சினை இருக்கிறது'- முதல்வர் ஸ்டாலின் வைக்கும் சஸ்பென்ஸ்

`ஜெயலலிதா மரணத்தில் பிரச்சினை இருக்கிறது'- முதல்வர் ஸ்டாலின் வைக்கும் சஸ்பென்ஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பிரச்சினை இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.

கோவையில் இன்று நடைபெற்ற திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மிகவும் சஸ்பென்ஸ் ஆகவே இருப்பதாக நாம் சொல்லவில்லை, அவரது கட்சியினரே சொல்கிறார்கள். அன்று முதல்வராக இருந்தவர், ஒரு கட்சியில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர், ஜெயலலிதா இருக்கும்போதெல்லாம் முக்கிய பொறுப்பு வகித்தவர், அவரை கட்சியிலிருந்து நீக்கி வைக்கிறார்கள். அவர்தான் ஓ.பன்னீர்செல்வம். அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளில் அதை கோபத்தோடு ஆத்திரத்தோடு ஜெயலலிதா நினைவிடத்தில் உட்கார்ந்து தியானம் செய்தார் ஓ.பன்னீர்செல்வம். நீதி கேட்டார். இதெல்லாம் நடந்தது உங்களுக்கு தெரியும்.

அவரை சரி செய்ய வேண்டும் என்பதற்காக ஒப்புக்காக ஒரு கமிஷனை அன்றைக்கு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அமைத்தார். ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் எவ்வளவு வருஷம் விசாரணை நடத்தியது என்று உங்களுக்கு தெரியும். சும்மா ஒப்புக்காக இந்த கமிஷனின் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் சொன்னோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கமிஷனை முறையாக நடத்தி, முறையான அறிக்கை பெற்று, முறையான நடவடிக்கையை எடுக்கும் என்று உறுதி அளித்திருந்தேன்.

சில நாட்களுக்கு முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அந்த அறிக்கையை என்னிடத்தில் கொடுத்தார். அந்த அறிக்கையில் பல பிரச்சினைகள் இருக்கிறது. அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். சட்டமன்றத்தில் நாங்கள் வெளிப்படையாக வைக்கிறோம். எங்களுக்குள் வைத்து நாங்கள் முடிவு எடுக்கப்போவதில்லை. சட்டமன்றத்தில் அறிவித்து வெளிப்படையாக வைத்து அதற்கு உரிய நடவடிக்கையை சட்டமன்றத்தின் மூலமாகவே நிறைவேற்றி காட்டுவோம்.

அடுத்து தூத்துக்குடி சம்பவம். தூத்துக்குடியில் நடந்த சம்பவம் உங்களுக்கு தெரியும். அதுவும் எடப்பாடி ஆட்சிக் காலத்தில்தான் தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் குறித்து கேட்டபோது அப்படியா என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி. அதன் பிறகு டிவி பார்த்து தெரிந்துகொண்டேன் என்று கூறியவர் இந்த எடப்பாடி பழனிசாமி. அந்த அறிக்கையும் தற்போது என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சட்டமன்றத்தில் வைக்கப்படும். நான் ஏன் சொல்கிறேன் என்றால், சட்டமன்ற தேர்தலின் போது நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை எதுவும் நிறைவேற்றவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இவைகளை சொல்லிக் கொண்டிருக்கிறேன். வரும் 5-ம் தேதி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்க இருக்கிறோம். இப்போது வருகிறபோதுகூட சில தாய்மார்கள் உரிமைத் தொகை என்ன ஆனது என்று கேட்டார்கள். அரசின் நிதியை ஓரளவுக்கு சரி செய்து கொண்டிருக்கிறோம். அதுவும் விரைவில் நிறைவேற்றப்படும். அதில் எந்த சந்தேகப்படவும் வேண்டாம். சொன்னதை செய்வான் இந்த ஸ்டாலின். அந்த நம்பிக்கையோடு இருங்கள். அந்த நம்பிக்கையோடு தான் மக்கள் இன்று இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in