`உங்கள் ஆசியோடு பயணிக்க விரும்புகிறேன்'- புது அமைப்புத் தொடங்கினார் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்

புது அமைப்பு தொடங்கிய பூங்குன்றன்
புது அமைப்பு தொடங்கிய பூங்குன்றன்

அதிமுகவில் இரட்டைத் தலைமையை முடிவுக்குக் கொண்டுவந்து, ஒற்றைத் தலைமையை உருவாக்கும் காய் நகர்த்தல்களைத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ.பன்னீர் செல்வமோ இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதற்கு மத்தியில், ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தனி அமைப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

அதிமுகவில் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைக் குறித்து விவாதிக்கக் கூடாது என எடப்பாடி பழனிச்சாமிக்கு பகிரங்க கடிதமே எழுதினார். இதனால் தமிழக அரசியல் களமே அதிமுகவின் பொதுக்குழுவை ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன், ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினாலும், அவ்வப்போது அனைவரும் ஒற்றுமையோடு இருந்து இந்த இயக்கத்தைப் பலப்படுத்த வேண்டும் என தன் முகநூல் பக்கத்தின் வழியாக வலியுறுத்தி வருபவர் ஆவார்.

அவர் இன்று தன் முகநூலில் வெளியிட்டிருக்கும் பதிவில், “அம்மா ஆன்மிகப் பேரவைத் தலைவராக உங்கள் ஆசியோடு இன்றுமுதல் செயல்பட ஆரம்பிக்கிறேன். அரசியல் இதில் இல்லை. தாயை நேசிக்கும் உங்கள் வாழ்த்துகளோடு பயணிக்க விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்போடு வெளியிட்டிருக்கும் படத்தில், பூங்குன்றன் கழுத்தில் அணிந்திருக்கும் மாலை கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணத்தில் அதிமுக நிறத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in