9வது சம்மன்: மார்ச் 21ல் ஓபிஎஸ் ஆஜராக ஆணையம் உத்தரவு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அடுத்த கட்ட நகர்வு
9வது சம்மன்: மார்ச் 21ல் ஓபிஎஸ் ஆஜராக ஆணையம் உத்தரவு

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக் கோரிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சை வரும் 21ல் ஆஜராக வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே 8 முறை சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது 9வது முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சசிகலா தரப்பிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் முன்வைத்ததோடு, சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கூறினார். சசிகலா சிறை சென்ற பிறகு, அதிமுக இரு அணிகளும் ஒன்றாக இணைந்தபோது, ஆணையம் அமைத்து விசாரிக்கப்படும் என்று பழனிச்சாமி தரப்பு உறுதி அளித்தது. அதன் பின்னர், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த ஆணையத்தில் ஆஜராகுமாறு 8 முறை சம்மன் அனுப்பியும் ஒருமுறைகூட ஓபிஎஸ் ஆஜராகவில்லை.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவுபடி ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக நேற்று முதல் ஆறுமுகசாமி ஆணையம் நேரடி விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அப்போலோ மருத்துவர்கள் 4 பேர், தொழில்நுட்ப உதவியாளர் ஒருவரிடமும் நேற்று விசாரணை நடைபெற்றது. இன்று 3 மருத்துவர்கள் ஆஜராகினர். அவர்களிடம் ஆணைய தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜா செந்தூர்பாண்டியன், வரும் 15ம் தேதிக்கு பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் விசாரணைக்காக ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்ப இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து வரும் 21ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் வரும் 21ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in