நான் ஒரு தமிழச்சி; கர்நாடகாவில் நின்று கர்ஜித்த ஜெயலலிதா!

பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு
ஜெயலலிதா
ஜெயலலிதா

‘சிங்கத்தின் குகையில் சென்று அதன் பிடரியை உலுக்கியது போல...’ என்பது வீரத்துக்கு உதாரணமாகக் கூறப்படும் சொலவடை. அப்படி, வாட்டாள் நாகராஜின் சொந்த மாநிலத்தில் அவரது சொந்த மாவட்டமான மைசூருக்கே சென்று பிடரியை பிடித்து உலுக்கினார் ஒரு பெண்... அவர் தான் ஜெயலலிதா!

‘‘வடமாநிலத்தவர் தமிழகம் வருவது ஒருவித போர்தொடுப்புதான்’’ அண்மையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எடுத்து இயம்பிய இந்தக் கருத்து சேனல்களிலும் சமூக ஊடகங்களிலும் ட்ரெண்ட் ஆனது. தங்கள் மாநிலத்தின் உரிமைகளைக் காப்பாற்ற போராடுகிறோம் என்று மற்ற மாநிலத்தவருக்கு எதிரான கருத்துகளைக் கூறும் கட்சிகள், அமைப்புகள் எல்லா மாநிலத்திலும் உண்டு. இது இன்றைக்கு நேற்றல்ல... காலங்காலமாகவே இருந்து வருகிறது.

மேகலா பிக்சர்ஸ் பேனரில் முரசொலி மாறன் தயாரித்து கதை, வசனம் எழுதி, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த படம் ‘எங்கள் தங்கம்’ 1970-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் மொட்டை அடித்துக் கொண்டு பாகவதர் போல எம்ஜிஆர் கதாகாலட்சேபம் எல்லாம் செய்வார்.

எங்கள் தங்கம் படத்தில் எம்ஜிஆர்...
எங்கள் தங்கம் படத்தில் எம்ஜிஆர்...

சந்திரனுக்கு இந்தியா ராக்கெட் அனுப்ப நடந்த நிகழ்ச்சியை கற்பனை கதையாக விவரிப்பார். அந்தக் கதையில் எந்த மாநிலத்தில் இருந்து ராக்கெட்டை அனுப்புவது என்று சீட்டுக் குலுக்கி போடுவார்கள். அதில் பம்பாய் (இப்போது மும்பை) என்று பெயர் வரும். அந்த ராக்கெட்டில் சந்திரனுக்கு விண்வெளி வீரராக செல்ல இருப்பவரின் பெயர் சுந்தர வரத சீனிவாச கோபால நரசிம்மன் என்று தமிழரின் பெயர் குறிப்பிடப்படும். அதற்கு மகாராஷ்டிராவில் எதிர்ப்பு.

“சுந்தர வரத சீனிவாச கோபால நரசிம்மன் போனா... பம்பாயில இருக்கற ‘சேனா’ (சிவசேனா) சும்மா இருப்பானா? மெட்ராஸி போற ராக்கெட்டுக்கு பம்பாய்தானா கிடைச்சுது, நஹி... நஹி... அலவ் பண்ண முடியாதுன்னான். உடனே அதிகாரி பார்த்தார் பூலோகத்துல சொர்க்கமா இருக்கற தமிழ்நாட்டுக்கு இடத்தை மாத்தினார்’’ என்று சொல்லி, ‘மகாராஷ்டிரா மராட்டியருக்கே’ என்ற கோஷத்தைத் தூக்கிப்பிடித்த சிவசேனா, தமிழருக்கு எதிராக செயல்படுவதை நாசுக்காக கதாகாலட்சேபத்தில் எம்ஜிஆர் பேசியிருப்பார்.

அதுமட்டுமல்ல, இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். அண்மையில், தமிழ்நாடா... தமிழகமா? என்ற வாதப் பிரதிவாதங்கள் தமிழகத்தில் அனலைக் கிளப்பிவிட்டு அடங்கியது. அண்ணா முதல்வராக வருவதற்கு முன், நமது மாநிலம் சென்னை மாகாணம், மெட்ராஸ் ஸ்டேட் என்றே அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டது. அண்ணா முதல்வரான பிறகு 1967 ஜூலை 18-ல் மாநிலத்துக்கு மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

‘எங்கள் தங்கம்’ படத்தில் காலட்சேப காட்சியில் தமிழ்நாடு என்றுதான் சொல்ல வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சுட்டிக் காட்டப்படும். ராக்கெட்டில் தமிழர் செல்ல சிவசேனா எதிர்ப்பு தெரிவித்த உடனே அதிகாரி, தமிழகத்துக்கு இடத்தை மாற்றினார் என்று எம்ஜிஆர் சொன்னதும் கூடப் பாடுபவர், ஏன்? என்று கேட்பார். அதற்கு எம்ஜிஆர் “ஏன்னா... மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்” என்பார். பின்பாட்டு பாடுபவர் எம்ஜிஆர் காதில் ரகசியமாக, “தமிழ்நாடுன்னு சொல்லுங்கோ” என்று கிசுகிசுப்பார்.

கூட்டத்தைப் பார்த்து அசடு வழிய சிரித்து சமாளித்து சுதாரித்துக்கொள்ளும் எம்ஜிஆர், உடனே மாற்றிக்கொண்டு, “தமிழ்நாடு நல்ல தமிழ்நாடு... ‘கேரோ’ இல்லாத தமிழ்நாடு... சட்டசபை அடிதடி காணாத நாடு... லா அண்டு ஆர்டர் கெடாத நாடு” என்று தமிழ்நாட்டுக்கு சர்டிஃபிகேட் கொடுப்பார். (இந்தப் படம் வந்த காலம் வரையில் தமிழக சட்டசபையில் அடிதடி காட்சிகள் அரங்கேறியது இல்லை. அடுத்த இரண்டே ஆண்டுகளில் தமிழக சட்டசபையில் அதுவும் அமர்க்களமாய் நடந்தது. எம்ஜிஆர் மீதே செருப்பு வீசப்பட்டது என்பதெல்லாம் தனிக்கதை). சரி, விஷயத்துக்கு வருவோம்.

வாட்டாள் நாகராஜ்
வாட்டாள் நாகராஜ்

மகாராஷ்டிராவுக்கு சிவசேனா, பால்தாக்கரே என்றால் கர்நாடகாவில் கன்னட சாலுவாலி அமைப்பு; அதன் தலைவர் வாட்டாள் நாகராஜ். கன்னடர்களின் உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறி மற்ற மாநிலத்தவர்களுக்கு எதிராக போராடுபவர். தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி பிரச்சினை தீவிரமாகும் சமயங்களில் எல்லாம் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது வழக்கம். அதன் பின்னணியில் கன்னட அமைப்பின் கைங்கர்யம் இருக்கும்.

வாட்டாள் என்பது மைசூரு பகுதியில் அமைந்துள்ள கிராமம். அந்த கிராமத்தில் பிறந்தவர் என்பதால் நாகராஜுக்கு முன்னாள் ‘வாட்டாள்’ ஒட்டிக்கொண்டது. அவரது சொந்த மாவட்டம் மைசூர். அந்த மைசூருக்கே போய் வாட்டாள் நாகராஜை உலுக்கினார் ஜெயலலிதா!

ஜெயலலிதாவின் முன்னோர்கள் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதாவின் தாய்வழி தாத்தா ரங்கசாமி ஐயங்கார், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து மைசூருக்குச் சென்றவர். ஜெயலலிதா பிறந்தது கர்நாடகா என்றாலும் அவரது பூர்விகம் ஸ்ரீரங்கம்தான். அதனால், ஜெயலலிதா எப்போதும் எங்கேயும் தன்னை தமிழச்சி என்றே பெருமையாகச் சொல்லிக்கொள்வார்.

புகழ்பெற்ற தயாரிப்பாளர் - இயக்குநர் பி.ஆர். பந்துலு. ஜெயலலிதா ஏற்கெனவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், பி.ஆர். பந்துலுவின் கன்னடப் படமான 1964-ல் வெளியான ‘சின்னத கொம்பே’ படத்தில் முக்கிய வேடத்தில் அறிமுகமானார். தமிழிலும் எம்ஜிஆர் - ஜெயலலிதா நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ரகசிய போலீஸ் 115’, ‘தேடிவந்த மாப்பிள்ளை’ ஆகிய வெற்றிப் படங்களை எடுத்தவர் பி.ஆர். பந்துலு. அவர் தயாரித்து இயக்கி 1973-ல் வெளியான ‘கங்கா கெளரி’ என்ற பக்திப் படத்தில் ஜெமினி கணேசனுடன் ஜெயலலிதா நடித்தார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு மைசூரில் பிரிமியர் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

கங்கா கௌரி படக்குழுவினருடன் எம்ஜிஆர்...
கங்கா கௌரி படக்குழுவினருடன் எம்ஜிஆர்...

படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஜெயலலிதா மைசூர் சென்றார். தமிழில் மட்டுமின்றி, கன்னடத்திலும் அவர் புகழ்பெற்ற நடிகை. படப்பிடிப்புக்கு நடுவில் பத்திரிகை ஒன்றுக்கு பேடியளித்தார் ஜெயலலிதா. அந்தப் பேட்டியில், ‘‘நான் மைசூரில் பிறந்திருந்தாலும் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவள். என் தாய்மொழி தமிழ். நான் ஒரு தமிழச்சி’’ என்று சொன்னார்.

‘மைசூரில் பிறந்தவர் தன்னை தமிழ்ப் பெண் என்று சொல்லிக்கொண்டு, மைசூருக்கே வருவதா?’ என்று கன்னட அமைப்பினருக்கு மூக்கில் வியர்த்தது. ஜெயலலிதா ஷூட்டில் இருந்த மைசூர் பிரிமியர் ஸ்டூடியோவைச் சுற்றி ஆயுதங்களுடன் திரண்டு வந்தவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக அதகளம் செய்தனர்.

தன்னைக் ‘கன்னடப் பெண்’ என்று ஜெயலலிதா ஒப்புக்கொள்ளாவிட்டால் ஸ்டூடியோவில் இருந்து யாரும் வெளியேற முடியாது என்று மிரட்டினர். பி.ஆர்.பந்துலு பயந்துவிட்டார். அவரும் கர்நாடகாவில் பிறந்தவர்தான். கன்னட மொழி உணர்வாளர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று அவருக்கு மிக நன்றாகவே தெரியும். நிலைமை மோசமாவதைத் தடுக்க கன்னடத்திலேயே பேசி போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார். அவர்கள் எதற்கும் மசியவில்லை.

பி.ஆர்.பந்துலு
பி.ஆர்.பந்துலு

அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்த பந்துலு வேறுவழியில்லாமல் ஜெயலலிதாவிடம் சென்று நிலைமையை விளக்கினார். “கன்னட உணர்வாளர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதனால், பேசாமல் மன்னிப்புக் கேட்டுவிடம்மா” என்று பதற்றத்தை மறைத்துக்கொண்டு பாந்தமாய் சொன்னார் பந்துலு.

இதைக் கெட்டதும் வந்ததே கோபம் ஜெயலலிதாவுக்கு... ”கன்னட உணர்வாளர்கள் மிரட்டுகிறார்கள் என்பதற்காக இல்லாததைச் சொல்லமாட்டேன். நான் தமிழ்பெண் என்பது உண்மை. இப்படி உண்மையைச் சொல்வதற்காக தாக்கப்பட்டு என் உயிரே போனாலும் கவலையில்லை” என்று உறுதியாகச் சொல்லிட்டார். அதற்குள் போராட்டக்காரர்கள் சிலர் ஸ்டூடியோவுக்குள் நுழைந்து, ‘ஜெயலலிதாவே மன்னிப்புக் கேள்’ என்று கோஷமிட்டு தாக்குதல் நடத்தவும் முயற்சித்தனர்.

தமிழகத்தில் இருந்து 'கங்கா கெளரி' படப்பிடிப்பு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் உள்ளிட்ட பத்திரிகையாளர்களும் படப்பிடிப்புக் குழுவினரும் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அரணாக நின்றனர். ஜெயலலிதா பிடிவாதம் பிடிக்கிறார் என்று தெரிந்து போராட்டக்காரர்களின் ஆத்திரமும் ஆர்ப்பாட்டமும் அதிகமானது. “ஜெயலலிதா மன்னிப்புக் கோராவிட்டால் ஸ்டூடியோவையே கொளுத்துவோம்” என்று கோஷங்கள் ஒலித்தன. அதனால் நிலைமை மிகவும் மோசமானது. அந்த சமயத்தில் பந்துலுவுக்கும் அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கும் நிலைமையை சமாளிக்க மனதில் தோன்றிய ஆபத்பாந்தவன் எம்ஜிஆர்!

சென்னையில் இருந்த எம்ஜிஆருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. எம்ஜிஆர் புகழ்பெற்ற நடிகர். கர்நாடகாவிலும் அவருக்கு ஏராளமாக ரசிகர்கள் உண்டு. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரையே ‘கன்னட எம்ஜிஆர்’ என்று பட்டம் சூட்டி புகழும் அளவுக்கு கர்நாடகாவிலும் எம்ஜிஆர் பிரபலம். தமிழகத்தில் அப்போது(ம்) ஆண்டு கொண்டிருந்த திமுகவின் முக்கிய தலைவரும் கூட! உடனடியாக செயலில் இறங்கினார் எம்ஜிஆர்.

அந்தச் சமயத்தில் கர்நாடக முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேவராஜ் அர்ஸ். அவருக்கு எம்ஜிஆரிடம் இருந்து போன் பறந்தது. அடுத்த சில நிமிடங்களில் மைசூர் பிரிமியர் ஸ்டூடியோ வாசலில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்கார்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பின்னர், மைசூரில் ‘கங்கா கெளரி’ படப்பிடிப்பு நடக்கும் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

எம்ஜிஆருடன் தேவராஜ் அர்ஸ்
எம்ஜிஆருடன் தேவராஜ் அர்ஸ்

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து ‘இதயவீணை’ படப்பிடிப்புக்காக மைசூர் சென்ற எம்ஜிஆர், ‘கங்கா கெளரி’ படப்பிடிப்புக் குழுவினரை சந்தித்து அவர்களுக்கு உற்சாகமும் தைரியமும் கொடுத்தார். கலவரக்காரர்கள் சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டபோதும் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையிலும், அவர்களிடம் மன்னிப்புக் கேட்காமல், “நான் தமிழ்பெண்தான், இதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்” என்று மார்தட்டி நின்ற ஜெயலலிதாவின் தைரியத்தையும் எம்ஜிஆர் பாராட்டினார்.

அதன்பிறகு ஜெயலலிதாவின் படப்பிடிப்பு முடியும் வரை மைசூரில் அவர் இருந்த பக்கமே கன்னட உணர்வாளர்கள் தலைவைத்துப் படுக்கவில்லை! எந்தச் சூழ்நிலையிலும் தன் உறுதியை விட்டுக்கொடுக்காத இரும்புப் பெண்மணி தமிழச்சி ஜெயலலிதாவுக்கு இன்று பிறந்த நாள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in