பொருளாளர் பதவியை பறிக்க திட்டம்: ஓபிஎஸ்-க்கு எதிராக ஈபிஎஸ் அடுத்த அஸ்திரம்

பொருளாளர் பதவியை பறிக்க திட்டம்: ஓபிஎஸ்-க்கு எதிராக ஈபிஎஸ் அடுத்த அஸ்திரம்

“துரோகத்தின் அடையாளமாக ஓபிஎஸ்சை சொல்லலாம். ஓபிஎஸ் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா, இல்லையா என்பது வரும் 11-ம் தேதிக்குப் பிறகு தெரிந்துவிடும்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்- ஈபிஎஸ் பெயர்களைக் குறிப்பிடாமல் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது, “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்களின் பொறுப்பு காலாவதியாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் அதிமுக சட்ட திட்ட விதிகளின் கீழ் கட்சியை வழிநடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக செயலாளரையும், தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரையும் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் தற்போது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். மேலும் 4 பேர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரவில்லை எனக் கடிதம் கொடுத்துள்ளனர்.

இதில் பெரும்பான்மையான கருத்துகளின் அடிப்படையில் வரும் 11.07.2011 அன்று பொதுக்குழுக் கூட்டம் நடத்தப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தபாலில் அழைப்பு விடுக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த கட்சி திமுக. இவர்கள் துரோகத்தைப் பற்றிப் பேசலாமா? துரோகத்தின் அடையாளமாக ஓபிஎஸ்சை சொல்லலாம். அவர் ஆரம்பக் கால கட்டத்திலிருந்தே தான் சார்ந்த இயக்கத்திற்கு எந்த அளவிற்கு துரோகம் செய்துள்ளார் என்பதை உதயகுமார் தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஓபிஎஸ் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா, இல்லையா என்பது 11ம் தேதிக்குப் பிறகு தெரிந்துவிடும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in