`ஓபிஎஸ் செயலை எந்த தொண்டனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்'- ஜெயக்குமார் கொந்தளிக்க காரணம் என்ன?

`ஓபிஎஸ் செயலை எந்த தொண்டனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்'- ஜெயக்குமார் கொந்தளிக்க காரணம் என்ன?

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை உச்சம் அடைந்திருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர்களை சந்திப்பின் போது பேசிய ஜெயக்குமார், “அதிமுகவில் ஒற்றைத் தலைமைதான் வேண்டுமென்று நான் சொன்ன கருத்து நூறு சதவீதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என ஆணித்தரமாக சொல்கிறேன். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பவர், ஆதரவாளர்கள் மூலம் பேசுவதும், செல்போன் மூலம் பேசுவதும்தான் முறையானது. ஆனால் கடிதம் எழுதுவது என்பது அதிமுக வரலாற்றில் புது முறையாக இருக்கிறது. அதிமுகவில் இது வழக்கத்திற்கு மாறான முறை. அவர் எழுதிய கடிதத்திற்கு ஈபிஎஸ் பதில் அளித்துள்ளார்.

ஆனால் ஓபிஎஸ் எழுதிய கடிதம் எப்படி பத்திரிகையில் கசிந்தது? இங்கே கடிதத்தைக் கொடுத்துவிட்டு, கட்சியின் நலன் பாதிக்கும் வகையில் எப்படி ஊடகங்களுக்குக் கொடுக்கலாம்? இதன் மூலம் பத்திரிகையில் கடிதம் வெளியிடும் அளவிற்கு ஓபிஎஸ்ஸிற்கு உள்நோக்கம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஈபிஎஸ் தலைமையில் ஒற்றைத் தலைமை அமைய வேண்டும் என்ற எழுச்சி இருந்து வருகிறது. அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என நீதிமன்றம் செல்வதும், கடிதம் எழுதுவதையும் எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

அதிருப்தி கருத்துக்கள், கட்சியின் உள்விவகாரம் போன்றவற்றை நான் பொதுவெளியில் தெரிவித்தது கிடையாது. ஒற்றைத் தலைமை என்பது வெளிப்படைத் தலைமையானது. அப்படி வெளிப்படையாக நான் சொன்னதன் காரணமாகத்தானே எல்லோரும் ஒற்றைத் தலைமையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்சியின் வெளிப்படைத் தன்மை அடிமட்ட தொண்டனுக்குத் தெரியக் கூடாதா? தலைமைக் கழகச் செயலாளருக்கும், மாவட்ட செயலாளர்களுக்கு மட்டும்தான் இது தெரிய வேண்டுமா? ஒற்றைத் தலைமை குறித்து வெளியில் சொல்வது தவறு கிடையாது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தியை ஓபிஎஸ் சந்தித்திருக்கிறார். அவருக்குக் கட்சியின் சட்டதிட்டங்கள் பொருந்தாதா? பொதுக்குழுவைப் பொறுத்தவரை, திட்டமிட்டபடி நடைபெறும். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in