`குடிகாரன் பற்றி பேசமுடியாது'- நாஞ்சில் சம்பத் குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் சீற்றம்

`குடிகாரன் பற்றி பேசமுடியாது'- நாஞ்சில் சம்பத் குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் சீற்றம்

``ஆளுநர் குறித்து நாஞ்சில் சம்பத் அவதூறு பரப்பும் வகையில் பேசி வருவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "குடிகாரன் பற்றி பேசமுடியாது" என கடுமையாக விமர்சித்தார்.

நில அபகரிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாரந்தோறும் திங்கட்கிழமையன்று வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று இரண்டாவது முறையாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மத்திய குற்றப்பிரிவில் கையெழுத்திட்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "எல்லாத் துறைகளிலும் நிர்வாக சீர்கேடு உள்ளது. அதன் வெளிப்பாடுதான் 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியாகி இருக்கிறது. வினாத்தாள் வெளியாவது தொடர்கதையாகி விட்டது. திமுக ஆட்சிகாலத்தில் திமுகவினருக்கும், பொதுமக்களுக்கும், ஏன் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. 2006-2011-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்திலேயே ஸ்டாலின் மதுரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியின்போது ஸ்டாலின் மதுரைக்கு தனியாக சென்று வர முடிந்தது.

மேலும் திமுக நிர்வாகிகள் தவறு செய்தால் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்காமல் பெயரளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதன் விளைவாக திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.சங்கர் மீண்டும் பார் உரிமையாளரை மிரட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. திமுக தலைமையின் கட்டுப்பாட்டில் கட்சி தொண்டர்கள் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு என அனைத்து பிரச்சினைகளும் தமிழ்நாட்டில் நிலவுவதால் பொதுமக்களே இலங்கையை போன்று இறங்கி போராட வேண்டிய நிலைமை உண்டாகும்'' என்று கூறினார்.

ஆளுநர் குறித்து நாஞ்சில் சம்பத் அவதூறு பரப்பும் வகையில் பேசி வருவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த ஜெயக்குமார், "குடிகாரன் பற்றி பேசமுடியாது" என கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், நிர்வாகத்தில் பெண்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் என எண்ணிய ஜெயலலிதா பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார். சொத்துவரி உயர்வு காரணமாக நாளை அதிமுக போராட்டத்தில் ஈடுபட இருக்கிறது. சென்னையில் ஓ.பி.எஸ் தலைமையிலும், திருச்சியில் ஈ.பி.எஸ் தலைமையிலும், நான் எங்கு கலந்து கொள்வது என்பது குறித்து தலைமைக் கழகம் முடிவு எடுக்கும். கரோனா முடிந்தவுடன் பொருளாதாரம் பெருகும், அப்போது சொத்து வரி முழுமையாக ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துவிட்டு, தற்போது சொத்து வரியை உயர்ந்திருப்பது கண்டனத்துக்குரியது. அம்மா உணவகம், லேப்டாப் உள்ளிட்ட அதிமுக திட்டங்களை அழிப்பதுபோல தாலிக்கு தங்கம் திட்டத்தை அழிக்கப்பட்டுவிட்டது. 14 லட்சம் பெண்கள் அத்திட்டத்தால் பயன்பெற்றனர்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in