‘மருத்துவ மாணவர்கள் குறித்த பிரதமரின் கருத்து அபத்தமானது’ -ஜவாஹிருல்லா சாடல்!

‘மருத்துவ மாணவர்கள் குறித்த பிரதமரின் கருத்து அபத்தமானது’ -ஜவாஹிருல்லா சாடல்!
எம்.எச்.ஜவாஹிருல்லா

உக்ரைனில் மருத்துவம் பயிலச் சென்ற இந்திய மாணவர்கள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு பல தரப்பினரும், கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரான எம்.எச்.ஜவாஹிருல்லா, பிரதமரின் கருத்து படு அபத்தமானது என்றும், பிரதமர் பதவிக்கு தகுதியானதல்ல என்றும் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:

’மருத்துவக் கல்வி பயில சிறிய நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் செல்வதனால் கோடிக்கணக்கான பணம் நாட்டை விட்டு வெளியேறுகிறது என்றும், இதனைத் தடுக்க தனியார்த் துறையினர் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என்றும், இதற்கு உதவிட மாநில அரசுகள் நிலங்கள் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவக்கல்வி படிப்பதற்கு அடிப்படைக் காரணமே ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள நீட்தேர்வுதான்.

நீட் தேர்வு வந்த பிறகுதான் இந்தியாவிலிருந்து மிக அதிகமாக மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பிற்குச் சேர ஆரம்பித்தனர் என்பதை மறைத்துவிட்டு பிரதமர் பேசியிருப்பது அபத்தமானது.

மருத்துவ கல்வியைப் பெரு முதலாளி நிறுவனங்களுக்கு முற்றிலும் தாரைவாக்கும் நோக்கத்தில்தான் பிரதமரின் கருத்து அமைந்துள்ளது. இது இந்திய மாணவர்கள் இடையே பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. ஏற்கனவே நீட் தேர்வு குறுக்கிட்டால் மருத்துவ கனவு தகர்ந்து போன மாணவர்கள் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்று பயின்று வரும் சூழலில் கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்தியாவில் மருத்துவக்கல்லூரி தொடங்கினால் அடித்தட்டு மக்கள் மருத்துவராகும் வாய்ப்பு இல்லாமலே போகும்.

ஒன்றிய அரசு தமது நேரடி கட்டுப்பாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குகிறோம் என்று சொன்னால்கூட அதில் ஒரு நியாயமிருக்கிறது. தனியார்த் துறையினர் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு மாநில அரசுகள் நிலங்களை ஒதுக்க வேண்டுமென்று பிரதமர் கோரிக்கை விடுத்திருப்பது மிகப்பெரிய அபத்தம். இந்தத் தரகு வேலை பிரதமர் பதவிக்குத் தகுதியானதுமல்ல.

சிறிய நாடுகளுக்குச் சென்று கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றும் மிகப்பெரிய பொருளாதாரப் பின்புலம் உடையவர்கள் அல்லர். பெரும்பாலும் வங்கிக் கடன் பெற்றுதான் வெளிநாடுகளுக்கு சென்று மிகுந்த சிரமங்களுக்கிடையில் மருத்துவம் பயின்று வருகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

இதில் வேடிக்கை என்னவென்றால் தற்போது ஒன்றிய அரசியல் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முக்கிய பொறுப்பாளர்களின் குழந்தைகள், வெளிநாட்டில் பயின்றவர்கள் என்ற தகவல் இணையங்களின் வழியாகத் தெரியவருகிறது.

ஏழை மக்களுக்கு ஒரு நீதி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் நியாயம்? கல்வியை வணிகமாக பார்க்கின்ற பிரதமரின் இந்த பார்வை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.’

இவ்வாறு எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.