`3 மாநிலங்களில் முஸ்லிம்கள் மீது போர் தொடுத்துள்ளது பாஜக'

மதச்சார்பற்ற சக்திகள் அணிதிரள ஜவாஹிருல்லா அழைப்பு
`3 மாநிலங்களில் முஸ்லிம்கள் மீது போர் தொடுத்துள்ளது பாஜக'

"கடந்த 15 நாட்களாக வடமாநிலங்களான உத்தர பிரதேசம், மத்தியபிரதேசம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை முஸ்லிம்கள் மீது பாஜக போர் தொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். முஸ்லிம்கள் மீது மதவாதப் போர் தொடுத்துவரும் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் அணிதிரள வேண்டும்" என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரில் உள்ள ஏழை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களின் வீடுகள் மற்றும் கடைகளை உச்சநீதிமன்றத் தடை உத்தரவிற்குப் பிறகும் இடிக்கப்பட்டுள்ளது. இது பாஜக ஆட்சியாளர்களின் வக்கிர புத்தியை அம்பலப்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியருகே ஜஹாங்கீர்பூரில் வங்காள மொழி பேசும் ஏழை முஸ்லிம்கள் 40 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறார்கள். இங்கு கடந்த 16ம் தேதி அன்று, அனுமன் ஜெயந்தி என்ற பெயரில் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் அப்பகுதிக்கு சம்பந்தமில்லாத பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் துப்பாக்கிகளையும், வாள்கள், கோடாரிகள், சூலாயுதங்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு சென்றுள்ளனர். இந்தக் காட்சிகள் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி உள்ளன.

இந்த ஊர்வலத்தினர் இரண்டு முறை அவ்வழியே சென்றுவிட்டு மூன்றாவது முறையாக ஜஹாங்கீர்பூர் மசூதிக்கு முன்பாக அதுவும் முஸ்லிம்கள் நோன்பு துறக்கும் நேரத்தில் திரண்டு நின்று முஸ்லிம்களுக்கு எதிராக வெறித்தனமாக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலவரம் பஜ்ரங் தள் அமைப்பினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது தெளிவாகிறது. டெல்லி காவல்துறை இதில் ஒருதலைப்பட்சமாக நடந்துள்ளது. காவல் நிலையத்திற்கு உள்ளேயே டெல்லி பாஜக தலைவர் அகிலேஷ் குப்தா செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளார். இந்தக் கலவரத்திற்குப் பிறகு காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக முஸ்லிம்களை மட்டும் கைது செய்திருக்கிறார்கள். ஊர்வலத்தில் சென்றவர்கள் துப்பாக்கிகள், வாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு சென்றும், பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷமான கோஷங்களை எழுப்பியும் கலவரத்தைத் தொடங்கியவர்கள் கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. காரணம் ஜஹாங்கீர்பூரில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளை புல்டோசர்களைக் கொண்டு இடிப்பதற்கான நடவடிக்கைகள் வடக்கு டெல்லி மாநகராட்சி சார்பாக எடுக்கப்படுகிறது. இதுசம்பந்தமான கடிதத்தில் டெல்லி கெஜ்ரிவால் அரசின் பொறுப்பில் இருக்கக்கூடிய பொதுப்பணித்துறையும், சுகாதாரத்துறையும் மற்றும் சில துறைகளும் இடிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் இந்தத் துறைகளும் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது.

இந்த இடிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும்கூட, உத்தரவு கைக்கு கிடைக்கவில்லை என்று கூறி தொடர்ச்சியாக முஸ்லிம்களின் வீடுகளையும், கடைகளையும் இடித்துத் தள்ளியுள்ளனர். கடந்த 15 நாட்களாக வடமாநிலங்களான உத்தர பிரதேசம், மத்தியபிரதேசம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை முஸ்லிம்கள் மீது பாஜக போர் தொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். ஒரு கட்டடம் ஆக்கிரமிப்பு என்றால் அதை அகற்றிட சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையான தாக்கீது வழங்கப்பட வேண்டும். ஆனால் தாக்கீது எதுவும் வழங்கப்படாமல் இடிப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவது உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்தை மீறக்கூடிய வகையிலும் அமைந்திருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

டெல்லி ஜஹாங்கீர்பூரில் நடைபெற்ற இடிப்பு நடவடிக்கைகளின் போது புல்டோசர்களுக்கு முன்பாக துணிச்சலாக நின்று, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் கூறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந்தா காரத்துக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற சூழல்களில் மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரண்டு களம்காண வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அரசமைப்புச் சட்டத்தையோ, உச்ச நீதிமன்றத்தையோ மதிக்காமல் சர்வாதிகாரத்தனமாக பாஜக நாட்டை ஆண்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு எடுக்காட்டாக இக்கலவரங்கள் அமைந்திருக்கின்றன. பாஜகவின் எதேச்சதிகாரப் போக்கை கண்டிக்கிறோம். முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை தடுத்து நிறுத்துவதற்கு மதச்சார்பின்மையில் நம்பிக்கை வைத்திருக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.