சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி: அதிரடி காட்டப்போகிறார் கமல்ஹாசன்

சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி: அதிரடி காட்டப்போகிறார் கமல்ஹாசன்

“ஜல்லிக்கட்டை சென்னையில் நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதற்கு அனுமதி பெறுவது தொடர்பாக பேசி வருகிறோம்'' என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். இந்த நடைபயணத்தில் பங்கேற்ற தனது கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் சென்னையில் நடந்த விழாவில் கமல்ஹாசன் விருந்து வழங்கினார். அப்போது பேசிய கமல்ஹாசன், "பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. அதனை நாம் எதிர்க்க வேண்டும். அதன் காரணமாகவே நாம் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றோம்.

சென்னையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு உள்ளோம். விரைவில் அதற்கான இடம் அறிவிக்கப்படும். மெரினாவில் நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நீங்கள் செய்யும் நல்லது கெட்டது அனைத்தையும் நான் பார்த்துகொண்டு உள்ளேன். உங்களுக்கு பஞ்சாயத்து செய்ய என்னிடம் நேரமில்லை. எந்த கட்சியாக இருந்தாலும் மதத்தை வைத்து இங்கு அரசியல் செய்ய முடியாது. தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்வதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் வந்துள்ளது. இதை மாற்ற சொல்லுவதற்கு அவர் யார்? அவருடைய பெயரை ரவி என்பதை புவி என மாற்றி கொள்வாரா? மதத்தை அரசியலின் கருவியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “ஜல்லிக்கட்டை சென்னையில் நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதற்கு அனுமதி பெறுவது தொடர்பாக பேசி வருகிறோம். சென்னையில் ஜல்லிக்கட்டுகாக நடத்திய போராட்டத்தை நான் இன்னும் மறக்கவில்லை. போராட்டம் நடைபெற்ற அதே இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது. பல சிக்கல் உள்ளது. நகரத்தில் இருப்பவர்களுக்கும் ஜல்லிக்கட்டு புரிய வேண்டும். அதற்காக சென்னையில் நடத்த வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in