ஜெய் பீம் பிரச்சினையில் வன்முறை மூலம் நியாயம் தேடும் நிலையில் பாமக இல்லை!

ரூ.5 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய வழக்கறிஞர் கே.பாலு பேட்டி
ஜெய் பீம் பிரச்சினையில் வன்முறை மூலம் நியாயம் தேடும் நிலையில் பாமக இல்லை!

'ஜெய் பீம்' படம் தொடர்பாக, நடிகர் சூர்யாவுக்கும், பாமகவினருக்கும் இடையிலான கருத்து வேற்றுமை உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. வன்னியர்களை திட்டமிட்டு இழிவுபடுத்தியதாகக் கூறி, ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றன வன்னியர் சங்கமும், பாமகவும். இந்தச் சூழலில் நோட்டீஸ் அனுப்பிய பாமக வழக்கறிஞர் கே.பாலுவுடன் ஒரு பேட்டி.

அறிக்கைப் போர் நடந்துகொண்டிருக்கும்போதே, திடீரென ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பக் காரணம் என்ன?

ஏற்கெனவே நிறைய பேசியதுதான். ஒரு படத்தை உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுத்ததாகச் சொல்லிவிட்டு, சில விஷயங்களை மாற்றிக்காட்டியிருக்கிறார்கள். எலி வேட்டை என்று பெயர் சூட்டப்பட்ட படம், திடீரென ஜெய் பீமாக மாறுகிறது. ஐ.ஜி. பெருமாள்சாமி, வழக்கறிஞர் சந்துரு உள்ளிட்ட சிலரது கதாபாத்திரங்கள், அதே பெயரில் அதே கதாபாத்திரங்களாக வருகிறது. ஆனால், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமியின் பெயரை மட்டும், திட்டமிட்டு வன்னியராகக் காட்டுகிறார்கள். உண்மையில் அவர் வேறொரு சாதியைச் சேர்ந்த கிறிஸ்தவர். அவரது வீட்டில் 1995-ம் ஆண்டு வன்னியர் சங்க காலண்டரை மாட்டியிருக்கிறார்கள். அது படப்பிடிப்பின்போது, எதார்த்தமாகப் பிரேமுக்குள் வந்துவிட்டது என்று சொல்ல முடியாது. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட காலண்டர் என்பதை, அந்த 1995-ம் ஆண்டே காட்டிவிடுகிறது. அந்தக் காலண்டரை, அந்தப் படத்தில் ரொம்பக் கொடூரமான நபராகச் சித்தரிக்கப்படுகிற ஒரு எஸ்.ஐ. வீட்டில் கொண்டுபோய் மாட்டிவைப்பதன் மூலமாகவும், அந்தக் கதாபாத்திரத்துக்கு குருநாதன் என்று பெயர் வைத்து, படம் முழுக்க அவரை குரு.. குரு.. என்று அழைப்பதன் மூலமாகவும் இவர்கள் திட்டமிட்டு, பாமகவையும், வன்னியர்களையும் குறிவைப்பதை உணர்த்திவிடுகிறார்கள். ஆக, எலிவேட்டை ஜெய் பீமாக மாறி, அந்தோணிசாமி குருவாகி, அந்தக் காலண்டரையும் கொண்டுபோய் மாட்டியதன் மூலமாக அவர்கள் இல்லாத விஷயத்தை இட்டுக்கட்டிக் காட்டி, ஒரு சமூகத்தை களங்கப்படுத்த, சிறுமைப்படுத்த முயற்சித்திருக்கிறார்கள். அடுத்து, உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்ட, இந்த வழக்கிற்காக திருமணத்தையே 39 வயது வரையில் தள்ளிப்போட்ட கோவிந்தன் உண்மையில் வன்னியர். ஆனால், படத்தில் அவரது பெயரையும் மாற்றிவிட்டார்கள். அதாவது, கெட்டவனுக்கு வேண்டுமென்றே வன்னியர் அடையாளத்தைச் சூட்டி, நல்லவருக்கு வன்னியர் அடையாளத்தை நீக்கியிருக்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும்போது, இந்தச் சமூகத்தின் மீது தாழ்வான எண்ணம் வருவதற்கு இந்தப் படம் காரணமாக அமைந்திருக்கிறது. இதுகுறித்து வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி ஜனநாயக முறையில் அறிக்கை வெளியிட்டார். ஆனால், அது கண்டுகொள்ளப்படவே இல்லை. எனவே, நாங்கள் சட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறோம். உள்நோக்கத்தோடு இரு பிரிவினரிடையே பகைமையை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனவே, இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ, 505 ஆகியவை நேரடியாக இந்த வழக்கிற்குப் பொருந்தும். இந்தச் செயல் தொடரக்கூடாது என்பதற்காகவே சட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறோம். இந்தப் பிரச்சினை தொடர்பாக அன்புமணி ராமதாஸ் கேட்ட கேள்விகளுக்கு நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யாவின் விளக்கம் திருப்திகரமாக இல்லை. எனக்கு நிறைய ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது. நான் இப்படித்தான் செய்வேன், நான் சொல்றது புரியுதா? என்பது மாதிரியான தொணி அவரது அறிக்கையில் இருக்கிறது.

அன்புமணி ராமதாஸின் அறிக்கையும் காட்டமாகத்தானே இருந்தது?

தவறு சூர்யா செய்கிறார். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று அன்புமணி ராமதாஸ் விளக்கம் கேட்கிறார். இதில் எது தவறு? உங்கள் வீட்டில் ஒருவர் திருடுகிறார். உடனே அவரைப் பிடித்துத் திட்டுகிறீர்கள். தவறை ஒப்புக்கொண்டால் விட்டுவிடலாம் என்றுகூட நினைக்கிறீர்கள். அதற்குள்ளாக சிலர் வந்து, என்னங்க நீங்க அவரை இப்படித் திட்டுறீங்க. இப்ப என்ன திருடத்தானே செய்தார் என்று திருடியவருக்கா வக்காலத்து வாங்குவீர்கள்? சூர்யாவை அல்லவா கண்டித்திருக்க வேண்டும். ரொம்ப நல்ல படம். திட்டமிட்டு ஒரு சமூகத்தை இழிவுபடுத்தாவிட்டால், நாங்களும் சேர்ந்து கொண்டாடியிருப்போமே என்று சொல்வது தவறா? சூர்யாவின் சமூகத்தைச் சேர்ந்த சில தலைவர்களே இப்போது, சூர்யாவின் செயல் தவறானது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் புனையப்பட்ட கதை என்று டைட்டிலிலேயே சொல்லிவிட்டார்களே?

புனையப்பட்ட கதை என்று சொல்லிவிட்டு, அந்த உண்மைச் சம்பவத்துடன் தொடர்புடைய நீதிபதி சந்துருவின் கதாபாத்திரத்துக்கு அதே பெயரைச் சூட்டியதுடன், படத்தின் இறுதியில் சந்துருவின் புகைப்படத்தையும் காட்டி, அவரது பணிகளை மெச்சும்விதமான வாசகங்களையும் காட்டியிருக்கிறார்கள். இதன் நோக்கம் என்ன? இது உண்மைக்கதைதான் என்பதை நிறுவும் முயற்சி. கூடவே, பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு உதவுகிறோம் என்று இருளர் அறக்கட்டளைக்கு 1 கோடி கொடுத்திருப்பதன் மூலம், இது உண்மை, உண்மை என்று நிறுவவே முயன்றிருக்கிறார்கள். எனவே, இது கற்பனைப் படம் என்று இப்போது சொல்வது ஏற்புடையதாக இல்லை.

வன்னியர் சங்கம் வழக்குப் போடுவதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி மீது ஏற்கெனவே ஒரு சாதிக்கான கட்சி என்கிற முத்திரை விழுந்துள்ள நிலையில், உங்களது இந்தச் செயல் அதை உறுதிப்படுத்துவதாக ஆகிவிடாதா?

பாட்டாளி மக்கள் கட்சி வெறுமனே வன்னியர்களுக்கான கட்சி மட்டுல்ல, சமூக ரீதியாக யாருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்குக் குரல் கொடுக்கிற கட்சிதான். சிபிஎஸ்சி பாடப்புத்தகத்தில் நாடார்களை அவதூறாகச் சித்தரித்தபோது, அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு மட்டுமின்றி, வழக்குத் தொடுத்து பாடப்புத்தகத்தில் இருந்தே அந்தப் பகுதியை நீக்கவைத்த கட்சி பாமக. இதற்காக நாடார் சமுதாயத்தினர் மருத்துவர் அய்யாவுக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த வழக்கைப் போட்ட அதே பாலுதான் இந்த வழக்கையும் போட்டிருக்கிறேன். அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வேண்டும் என்று போராடி வாங்கிக்கொடுத்த கட்சியும் பாமகதான். எந்தச் சமூகம் பாதிக்கப்பட்டாலும் குரல்கொடுக்கிற பாமகவின் போராட்டங்களில் இதுவும் ஒன்று.

இயக்குநர்கள் பா.ரஞ்சித், மோகன்.ஜி போன்றோர் எடுத்த படங்களிலும் சில காட்சிகளும், வசனங்களும் ஆட்சேபிக்கப்பட்டன. ஜெய் பீமும் அப்படியான படம்தானே.. ஏன் இவ்வளவு கோபதாபம்?

ரஞ்சித் வரிசையாக நாலு படங்கள் எடுத்தார். பரியேறும் பெருமாள் படத்தையும் தயாரித்தார். அவர் ஒரு சமூகத்தைப் பெருமைப்படுத்தினார். படத்தில் அம்பேத்கரை காட்டினார், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்றார். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பறையடிக்கிற அடியில ஆண்டைகள் எல்லாம் ஓடணும் என்ற வசனத்தில்கூட, குறிப்பிட்டு எந்தச் சமூகத்தையும் அவர் சொல்லவில்லை. பட்டியலினத்தவர்கள், உயர் வகுப்பினர் என்றுதான் காட்டினாரே தவிர, அந்த உயர் வகுப்பினர் யார் என்று அவர் சுட்டிக்காட்டவில்லை. யார் வேண்டுமானலும், எந்தச் சாதியை வேண்டுமானாலும் புகழ்ந்து படம் எடுக்கட்டும். அதில் பிரச்சினையே இல்லை. ஆனால், அநாவசியமாக, எந்தவிதமான அடிப்படைத் தேவையும் இல்லாத ஒரு கதையில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி படமெடுத்தால் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?

மோகன்.ஜி படத்தில் பட்டியலின மக்களை இழிவுபடுத்துகிற, எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக எல்லாம் காட்சிகள் இல்லையா?

இல்லை. ஜெய் பீம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். மோகன்.ஜி எடுத்த படம் சமூகத்தில் இருக்கிற பிரச்சினையைச் சொல்கிற படம். அது சில சமூகங்களைப் பெருமைப்படுத்திய படம் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, எந்தக் குறிப்பிட்ட சமூகத்தையும் இழிவுபடுத்திய படமல்ல. இதற்கு முன்பு தேவர்மகன், சின்ன கவுண்டர், நாயகன் என்று எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. அவை எல்லாம் சில குறிப்பிட்ட சமூகங்களை பெருமைப்படுத்துகிற படம்தான் என்றாலும், ஊரே அந்தப் படங்களைக் கொண்டாடியது. அதுவே ஒரு சமூகத்தை குறிவைத்து இழிவுபடுத்தியிருந்தால், பிரச்சினை ஏற்பட்டிருக்கும்.

ஒரு சினிமா இயக்குநரின் படைப்பு, கருத்துச் சுதந்திரத்துக்குள் மூக்கை நுழைக்கிறோம் என்ற எண்ணமே பாமகவுக்கு வரவில்லையா?

கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான கட்சி அல்ல பாமக. ஆனால், கருத்துச் சுதந்திரமும் கூட நிபந்தனைக்கு உட்பட்டதுதான். தேவையற்ற அவதூறுகளைப் பரப்புகிற அளவுக்கு எல்லையற்ற கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்று அரசியல் சாசனத்தில் சொல்லப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு, சினிமா நடிகைகளைப் பற்றி ஒரு பத்திரிகையில் அவதூறான செய்தி வந்துவிட்டது. அதற்கு எதிராகப் பொங்கி எழுந்த சூர்யா, ஒட்டுமொத்தமாக பத்திரிகையாளர்களையே விமர்சித்தார். இது ஒரு பத்திரிகையின் கருத்துச் சுதந்திரம் என்று சூர்யா விட்டுவிட்டாரா என்ன?

தொடர்ந்து சூர்யாவுக்கு பாமகவும், வன்னியர்களும் கொடுக்கிற நெருக்கடியால், ‘ஸ்டேண்ட் வித் சூர்யா’ என்று இன்னொரு தரப்பினர் அணி திரள்கிறார்கள். நேற்று கூட விசிக தலைவர் திருமாவளவன் படத்தைப் பாராட்டியிருக்கிறாரே?

நாங்கள் எது நடந்திடக்கூடாது என்று சொன்னோமோ, அதை ரொம்ப சிறப்பாக சூர்யா செய்துவிட்டார். இந்தப் படத்துக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? வட மாவட்டங்களில் நிறைய ஊர்களில் இரு சமூகத்தினரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், வடமாவட்டம் என்று சொன்னாலே 2 சமூகங்கள் பகையோடு மோதிக்கொள்வதாகச் சொல்வதும், சித்தரிப்பதும்தான் முற்போக்குத்தனம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சில ஊடகங்களில் இந்தப் பிரச்சினை பற்றி விவாதிப்பதற்காக விசிகவைச் சேர்ந்த நிர்வாகி வன்னியரசுவையும், என்னையும் பேச அழைத்தார்கள். நான் ஆட்சேபித்தேன். இந்தப் பிரச்சினையில் எதற்காகத் தேவையே இல்லாமல் விசிகவுடன் நாங்கள் விவாதிக்க வேண்டும் என்று கேட்டு, அந்த நிகழ்ச்சியையே தவிர்த்தேன். பொதுத்தளத்தில் இத்தனை நாளாக விவாதம் நடக்கிறது. சூர்யா தரப்பில் இருந்தோ, இயக்குநர் தரப்பில் இருந்தோ, வாங்க சார், நாங்கள் விளக்கம் சொல்கிறோம். நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள் என்று பேசுவதற்கு இன்றைக்கு வரைக்கும் வரவில்லை. அவர்கள் பக்கம் நியாயமிருந்தால் அதைத்தானே செய்திருப்பார்கள். அதைவிட்டுவிட்டு, சவால் விடுக்கும் வகையில் பதில் அறிக்கை வெளியிடுவது எதைக் காட்டுகிறது?

ஆயிரம் இருந்தாலும், இந்தப் பிரச்சினையில் பாமக இவ்வளவு தீவிரம் காட்டத்தான் வேண்டுமா என்றொரு கருத்து தமிழகத்தில் வலுப்பெற்று வருகிறதே?

விமர்சனத்தை வெளியில் இருந்து செய்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், பாதிக்கப்பட்ட நபராகச் சிந்தித்துப் பாருங்கள். அந்தக் காலண்டரில் உள்ள அக்னி குண்டம் என்பது வன்னியர் சமூகத்தின் வரலாறு, புனிதத்துடன் தொடர்புடையது. வன்னியர்களுக்கென்று தனியாக ஒரு புராணக் கதையே இருக்கிறது. வாதாபி என்கிற ஒரு அரக்கன் மக்களைக் கொன்றுகுவித்து, சொல்லொண்ணாத் துயர்விளைவித்தபோது, சம்புமா மகரிஷி என்பவர் அவனை அழிப்பதற்காக ஒரு யாகம் செய்தார். அப்போது சிவபெருமான் தோன்றி தன் நெற்றியில் இருந்து ஆகுதி நீரை (வியர்வை) அந்த யாகத்தில் விட்டார். அப்போது உதித்தவன்தான் ருத்ர மகாராஜ வன்னியன். அந்த வம்சத்தில் வந்தவர்கள்தான் வன்னியர்கள் என்பதுதான் அந்தப் புராணம். இது வெறுமனே ஏட்டில் மட்டுமுள்ள புராணம் கிடையாது. இச்சமூக மக்கள் வாழ்கிற பகுதிகளில் எல்லாம், கிராமிய கோயில் விழாக்களில் பாரத நிகழ்ச்சியை நடத்துகிறபோது, இந்த ருத்ர மகாராஜ வன்னியன் புராணமும் கூத்தாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது ஒரு முழு இரவும் நடக்கும். அந்தக் கதையைக் கேட்டுக்கேட்டு வளர்ந்த ஒருவனின் மனநிலையில் இருந்து யோசியுங்கள். பிரச்சினையின் தீவிரம் உங்களுக்குப் புரியும். என்னுடைய சொந்த கிராமத்துக்குப் போகிறபோது கவனித்தேன், ஒவ்வொரு நபரிடமும் இந்த வலி இருக்கிறது. இப்படிச் சித்தரித்ததை படைப்புச் சுதந்திரம் என்று ஏற்றுக்கொள்கிற மனநிலை, இளைஞர்களுக்கு மட்டுமல்ல எந்த தனிமனிதருக்கும் இல்லை என்பதுதான் உண்மை.

தேர்தலுக்காக அவசர அவசரமாக கொண்டுவந்த வன்னியர் தனி இடஒதுக்கீட்டுச் சட்டம் ரத்தாகியிருப்பதால், அந்தப் பிரச்சினையில் இருந்து வன்னியர் சமூக மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே பாமக ஜெய் பீமை கையில் எடுத்திருக்கிறது என்கிறார்களே?

இப்படியொரு கேள்வியை எப்படிக் கேட்கிறீர்கள்? இப்படியொரு இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் வன்னியர் சமூக மக்கள் கவனம் செலுத்தக்கூடாது என்று அதை மடைமாற்றம் செய்வதற்குத்தான் 'ஜெய் பீம்' படம் எடுத்தார்களா என்று நான் கேட்கிறேன். ஏனென்றால், வன்னியர் இடஒதுக்கீட்டிற்காக 42 ஆண்டுகளாகப் போராடி அந்த உரிமையைப் பெற்ற நேரத்தில், அது தற்காலிகமாக பறிக்கப்பட்டிருப்பதால் நாங்கள் வெந்துபோய், நொந்துபோய் இருக்கிறோம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, இப்போது போய் அந்த சமூகத்தைச் சிறுமைப்படுத்துவதை எப்படி சார் ஏற்க முடியும்.

பாமகவின் தோற்றத்தின்போது அதன் வளர்ச்சிக்குத் துணை நின்ற முற்போக்காளர்களே, இப்போது பாமகவை விமர்சிக்கிறார்கள். குறிப்பாக சனாதன கட்சியான பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த பிறகு, பாமக ரொம்பவே மோசமாகிவிட்டது என்கிறார்களே?

எந்தெந்த விஷயங்களில் பாஜகவுடன் சேர்ந்து நாங்கள் செயல்படுகிறோம் என்பதை முதலில் சொல்லட்டும் பார்க்கலாம். எங்களுடைய சித்தாந்தம் வேறு, பாஜகவின் சித்தாந்தம் வேறு. நாங்கள் சமூகநீதி, இடஒதுக்கீட்டுக் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள். இந்த விஷயத்தில் பாஜகவின் நிலைப்பாடு வேறு.

ஏற்கெனவே பாபா படப்பெட்டியை தூக்கிய பாமகவினர், இப்போது சூர்யாவின் இன்னொரு படம் ஓடிய தியேட்டரை மிரட்டி படத்தை நிறுத்தியதாகத் தகவல் வருகிறது. அதேபோல சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு என்று உங்கள் மாவட்டச் செயலாளர் ஒருவர் பேசியதாகவும் தகவல் வருகிறது. வன்முறையைக் கையில் எடுக்கிறதா பாமக?

அந்த மாவட்டச் செயலாளர் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. வன்முறையின் மூலமாக ஒரு நியாயத்தை, ஒரு தர்மத்தை, எங்கள் சமூகத்தின் உரிமையைப் பெற வேண்டிய இடத்தில் நாங்கள் இல்லை. பெறவும் மாட்டோம். அதற்காக, "என்ன புரிஞ்சிடுச்சா?" என்கிற தொணியில் எங்கள் தலைவருக்கு ஒருவர் திறந்த கடிதம் எழுதுகிறார் என்றால், அவருக்குப் புரிய வைக்கவும் தயங்க மாட்டோம் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in