பொங்கலுக்கு முன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பது கடினம்: சொல்கிறார் அமைச்சர் சேகர்பாபு

பொங்கலுக்கு முன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பது கடினம்: சொல்கிறார் அமைச்சர் சேகர்பாபு

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு பேருந்து நிலையத்தை திறப்பது கடினம் எனவும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னை கோயம்பேட்டில் பேருந்து நிலையம் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 400 கோடியில் 40 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, இந்த பேருந்து நிலையம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதனிடையே, கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய பணிகளை அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பரசன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தில் மாநகரப் பேருந்துகள், வெளியூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் என 250க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்படவுள்ளது என்றார்.

புயலால் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேருந்து நிலைய பணிகளை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பது கடினம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்த அமைச்சர், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, கோயம்பேடு, கிளாம்பாக்கம் போன்ற பேருந்து நிலையங்கள் போல், இன்னும் மூன்று அமைத்தால் தான் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in