
"நான் துபாய்க்கு பணத்தை எடுத்து வந்ததாக தவறாக பரப்புரை செய்யப்படுகிறது; நான் பணத்தை எடுத்து வரவில்லை, தமிழர்களின் மனங்களைத்தான் எடுத்து வந்தேன்" என்று நெகிழ்ச்சியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அபுதாபியில் நடைபெற்ற தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழர்களின் வரவேற்பில் திக்குமுக்காடிப்போனேன். துபாய், அபுதாபியில் இருப்பது தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். தமிழுக்கும், தமிழ் நலனுக்கும் எதிரானவர்களுக்கு நம்முடைய உணர்வுகள் புரியாது. நான் துபாய்க்கு பணத்தை எடுத்து வந்ததாக தவறாக பரப்புரை செய்யப்படுகிறது; நான் பணத்தை எடுத்து வரவில்லை, தமிழர்களின் மனங்களைத்தான் எடுத்து வந்தேன்.
துபாய், அபுதாபியில் இருப்பது தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. எத்தனையோ கடல் மைல்களைத் தாண்டி வந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் நீங்கள் வாழ்ந்து வருவதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல; உங்களில் ஒருவனாகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி என்பதே திராவிட மாடல். தமிழினத்தின் வரலாறு என்பது 3,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற வரலாற்றை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது. வெளிநாட்டுப் பயணத்தில் நான் பெற்ற வெற்றியை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதை திசைதிருப்ப வேண்டும் என்று சிலர் தவறான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள்" என்றார்.