
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகழுக்கு பல்வேறு வகையிலும் பெருமை சேர்த்தவர் கலைஞர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு வந்தார். அங்கு தேவர் உருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி டி.ஆர்.பி.ராஜா, கே.ஆர்.பெரியகருப்பன் ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதன் பின்னர் தேவர் நினைவிடத்தை சுற்றிப் பார்த்த முதல்வர், தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாளைச் சந்தித்து உரையாடினார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சி உள்ளிட்டவற்றை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "1963-ல் தேவர் திருமகனார் மறைவின்போது அண்ணாவும், கலைஞரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 1969-ம் ஆண்டு பசும்பொன் வந்து தேவரின் நினைவிடத்தை பார்வையிட்டுத் தேவையான அரசு உதவிகளைச் செய்தவர்தான் தலைவர் கலைஞர்.
கடந்த 2007-ம் ஆண்டு பசும்பொன் தேவரின் நூற்றாண்டு விழாவை மாபெரும் அரசு விழாவாக நடத்தி பெருமை சேர்த்தவர் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த கலைஞர். அப்போது நினைவிடத்தில் அணையாவிளக்கு அமைத்துக் கொடுத்தவரும் அவர்தான். மேலும் 10 லட்ச ரூபாய் செலவில் தேவர் நினைவாலயத்தை புதுப்பித்தார். அத்துடன் 9 லட்ச ரூபாய் மதிப்பில் நூற்றாண்டு விழா வளைவு, 4 லட்ச ரூபாய் மதிப்பில் நூலகம் இப்படி எல்லாவற்றையும் அமைத்துக் கொடுத்தவர் கலைஞர்தான்.
தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பசும்பொன் கிராமத்தில் மட்டும் 2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் பல்வேறு பணிகளைச் செய்து கொடுத்தவர் முதல்வர் கலைஞர். அது மட்டுமில்லாமல் மதுரையில் கம்பீரமான தேவர் சிலை அமைந்திருக்கிறது. அந்த சிலை திறப்பு விழாவை அரசு விழாவாக நடத்தி குடியரசுத் தலைவரை அழைத்து வந்தவர் கலைஞர் தான்.
மதுரையில் உள்ள மேம்பாலத்திற்கும் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேவர் பெயரால் 25 லட்ச ரூபாய் மதிப்பில் அறக்கட்டளை உருவாக்கினார் கலைஞர். திமுக ஆட்சி முதன்முதலாக அமைந்த சமயத்தில் தேவர் சமூக மேம்பாட்டுக்காக கல்லூரிகள் தொடங்க திட்டமிட்டபோது அவற்றிற்கு அனுமதி வழங்கியவர் கலைஞர்.
பசும்பொன்னில் உள்ள தேவர் பெருமகனார் நினைவிடத்தில் பொதுமக்கள் சிரமமின்றி அஞ்சலி செலுத்த வசதியாக ஒன்றரை கோடி ரூபாய் செலவில் இரண்டு மண்டபங்கள் அமைக்கப்படும் என அண்மையில் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது" என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதையும் வாசிக்கலாமே...
என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு
நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!
சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து