`தலைவரை சந்தித்தேன்'- ரஜினிகாந்த் குறித்து நெகிழ்ந்த சந்திரபாபு நாயுடு

`தலைவரை சந்தித்தேன்'- ரஜினிகாந்த் குறித்து நெகிழ்ந்த சந்திரபாபு நாயுடு

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் இன்று ஹைதராபாத்தில் சந்தித்துப் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 'ஜெயிலர்' திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு உள்பட பலர் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை தமன்னாவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது ‘ஜெயிலர்’ படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்கின்றனர். ரஜினியின் ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஓரிரு தினங்களில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படக்குழுவினர் தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஜெயிலர் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு படப்படிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் இன்று ஹைதராபாத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். மேலும் தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. `தலைவரை சந்தித்தேன்' என்று ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

இந்த சந்திப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது அன்பு நண்பர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துப் பாராட்டி, மறக்க முடியாத நேரத்தைச் செலவிட்டேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன், அரசியல் வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்தினேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in