பாஜக ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகள் மூலம் தான் ஆட்சியே நடக்கிறது: வானதிக்கு அமைச்சர் பதிலடி

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜிபாஜக ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகள் மூலம் தான் ஆட்சியே நடக்கிறது: வானதிக்கு அமைச்சர் பதிலடி
Updated on
1 min read

டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு நிர்வாகம் இயங்குகிறது என்பது போல சித்தரிப்பது தவறானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து விமர்சனம் செய்தார்.

அப்போது,' டாஸ்மாக் கடைகளில் மதுவாங்கும் போது, ஆதார் எண்ணையும் பதிவு செய்து, யார் அதிகமாக மது குடிக்கிறார்களோ அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்' என கிண்டலாக அவர் பேசினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக இது தான் ’குஜராத் மாடலோ’ என சபாநாயகர் பேசியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

வானதி சீனிவாசன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, குஜராத்தில் மதுக்கடைகள் இல்லாத காரணத்தினால் தான் 20 பேர் உயிரிழந்தார்களா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர்," பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மதுக்கடைகள் மூலம் எவ்வளவு வருமானம் வருகிறது என்பதைத் தெரிந்து கொண்டு பேச வேண்டும். மதுக்கடைகள் மூலமாக வரும் வருமானத்தின் மூலமாகவே அரசு நிர்வாகம் செயல்படுவதாக கூறுவது தவறானது.

கொரோனா பரவல் காலத்தில் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் தான் மதுக்கடைகள் வருமானத்தின் மூலம் ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகிறது" என்று காட்டமாக பதிலளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in