`மதிமுகவை திமுகவில் இணைப்பது காலத்தின் கட்டாயம்'

பரபரப்பைக் கிளப்பும் உயர்நிலைக்குழு உறுப்பினர்
சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு.
சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு.

திமுகவின் வாரிசு அரசியலுக்கு எதிராக மதிமுகவை துவங்கிய வைகோ, தனது வாரிசையும் எக்காரணம் கொண்டும் அரசியலுக்குக் கொண்டு வரக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தவர்களில் மிக முக்கியமானவர் மதிமுகவின் உயர்நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் க.அழகுசுந்தரம். அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்று வலியுறுத்திய சிலரால் தான் மதிமுகவில் இத்தனைப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று பல்வேறு புகார்களை வைகோ அடுக்கியுள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர் க.அழகுசுந்தரத்திடம் பேசினோம்.

அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்தினீர்களா?

இப்படிப்பட்ட அபாண்டமான பொய் மூலம் நாங்கள் அறிவாலயம் பக்கம் செல்லக்கூடாது என்பதற்காக வைகோ நகர்த்தும் சதுரங்க விளையாட்டு இது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பக்கம் வைகோ செல்வார் என்று நாங்கள் சொல்கிறோம். ஏனெனில் எதிரும், புதிருமாக இருந்து விட்டு அவர்களிடமே கூட்டணி சேருவது தானே வைகோவின் வழக்கம்!

மதிமுக பொதுக்குழுவில் போட்டியின்றி தானே துரை வைகோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்?

அக்டோபர் 20-ம் தேதி உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் கூட்டம் நடைபெறும் என வைகோ கூறினார். அதற்கு முன்பாக உயர்நிலைக்குழு கூட்டத்தை நடத்த வலியுறுத்தினோம். அந்த உயர்நிலைக்குழுவில் இருந்த 17 பேரில் துரைபாலகிருஷ்ணன், நாசரேத் துரை, டிஎன்.குருசாமி ஆகியோர் இறந்துவிட்டனர். மீதமுள்ள 14 பேரில் கட்சி பொருளாளராக உள்ள கணேசமூர்த்தி திமுக எம்பியாக உள்ளார். சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற பூமிநாதன், சின்னப்பா, சதன்திருமலை ஆகியோரும் இந்த உயர்நிலைக்குழுவில் பங்கேற்க முடியாது. மீதமுள்ள திருப்பூர் துரைசாமி, புலவர் செவந்தியப்பன், ஆர்.என்.சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் சந்திரசேகர், வழக்கறிஞர்கள் தேவதாஸ், வீரபாண்டி மற்றும் ஆர்.டி.மாரியப்பன், நான் உள்பட 11 பேர் துரை வைகோ நியமனத்தை எதிர்த்தோம். எனவே, உயர்நிலைக்குழு கூட்டம் நடந்தால், தனது மகனை போட்டியின்றி தேர்வு செய்ய முடியாது என்று தெரிந்த வைகோ நடத்திய போலி பொதுக்குழுவில் அவரது மகனுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது. மதிமுக கட்சி விதிப்படி காலியாக உள்ள பதவிக்கோ, ஒரு பதவியில் இருந்து மற்றொரு பதவிக்கோ தேர்தல் நடத்த மேலமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி பெறாமல் தான் துரை வைகோ நியமிக்கப்பட்டுள்ளார்.

வைகோவுடன் அழகுசுந்தரம்
வைகோவுடன் அழகுசுந்தரம்

முறையான தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு தானே துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

சட்டப்படி தலைமை கழக தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தவேண்டும். கடைசியாக 2012-ம் ஆண்டு நடந்தது. கடந்த 10 ஆண்டுகளாக தலைமை கழக தேர்தல் நடக்கவில்லை. மார்ச் 23-ம் தேதி கட்சி பொதுக்குழு நடக்குமென பொதுச்செயலாளர் வைகோ அறிவிக்கிறார். ஆனால், 2 துணைப் பொதுச் செயலாளர்கள், 1 தலைமை கழக செயலாளர், 1 தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கான மனு தாக்கல் செய்ய வேண்டும் என மார்ச் 20-ம் தேதி என்ற அறிவிப்பு தலைமை கழகம் மூலம் வெளியிடப்படுகிறது. ஒருவர் போட்டியிட முன்மொழிய 25 பேர், வழிமொழிய 25 பேர் வேண்டும். எனவே, அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் கேட்டு மார்ச் 14-ம் தேதி கடிதம் அனுப்புகிறோம். அதை 16-ம் தேதி தேர்தல் ஆணையர் பெரியகுமார் பெற்றுக்கொள்கிறார். 19-ம்தேதி அவர் எழுதிய கடிதம், எங்களுக்கு 22-ம் தேதி கிடைக்கிறது. ஆனால், 20-ம் தேதி கூட்டத்தில் துரை வைகோ வேட்புமனு தாக்கல் செய்து மார்ச் 23-ம் தேதி போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்படுகிறார். இது முறையாக நடத்தப்பட்ட தேர்தலா? 10 ஆண்டுகளாக தலைமை கழக தேர்தலே நடத்தாமல் யார் மூலம் இந்த வாக்கெடுப்பு நடந்தது?

எதிர்ப்பு தெரிவித்த சிலர் கூட்டங்களுக்கே வரவில்லையென்று வைகோ குற்றம்சாட்டியுள்ளாரே?

கலிங்கப்பட்டியில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்து விட்டு வந்த வைகோவிடம் ஒரு செய்தியாளர், 'துரை வைகோ அரசியலுக்கு வருவரா? அவருக்கு பதவி தரப்படுமா?' என்று கேட்டார். அதற்கு, '50 ஆண்டு காலத்தில் நான்பட்ட கஷ்டங்கள் என்னோடு போதும்' என்று கூறிய வைகோ, 'அக்டோபர் 20-ம் தேதி நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மெஜாரிட்டியின் படி அப்படி கருத்து வந்தால் ஏற்றுக் கொள்ளப்படும்' என்று பதிலளித்தார். அதனால் தான் காந்தியின் ஒத்துழையாமை இயக்கப்படி 7 உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், 4 மாவட்ட செயலாளர்கள், 2 அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் உள்பட 16 பேர் அக்டோபர்-20ம் தேதி நடந்த கூட்டத்திற்குப் போகவில்லை.

மதிமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

திமுகவின் வாரிசு அரசியல் எனச்சொல்லி 1994 மே 6-ம் தேதி மதிமுகவைத் தொடங்கியபோது 9 மாவட்டச் செயலாளர்களும், 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் வைகோவை நம்பி வந்தனர். ஆனால், இதன் பின் அவர் எடுத்த அரசியல் நிலைபாடுகள், சறுக்கல்கள் காரணமாக கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் மதிமுக மாறியுள்ளது. எனவே, தான் இந்திய திருநாடே திரும்பிப் பார்க்கும் வகையில் செயல்படும் ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் மதிமுகவை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்தியாவில் மதச்சார்ப்பற்ற சக்திகளை ஒன்று திரட்ட அவர் எடுக்கும் பெரும் முயற்சி 2024 நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தரும். திமுகவுடன் சேர மதிமுவிற்கு என்ன தயக்கம்? மதிமுக தலைவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற திமுக சின்னம் தேவைப்படுகிறது. ஆனால், தொண்டர்கள் மட்டும் பம்பரம் சின்னத்தில் நின்று தோற்க வேண்டுமா?. எனவே, தான் அனைவரும் திமுக சின்னத்தில் நிற்கலாம் என்று வலியுறுத்துகிறோம். திமுகவோடு மதிமுகவை இணைப்பது தான் காலத்தின் கட்டாயம். இந்த குரல் மதிமுகவில் தமிழக முழுவதும் எதிரொலிக்கிறது. அதை வைகோவால் தடுத்து நிறுத்த முடியாது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in