ஒருவர்கூட தமிழர் இல்லை... என்எல்சி மீது சந்தேகம்: பொறியாளர்கள் நியமனத்தில் எம்எல்ஏ அதிர்ச்சி தகவல்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தற்போது புதிதாக பணியமர்த்தப்பட இருக்கும் 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது கண்டிக்கத்தக்கது என்று புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி எம்.எல்.ஏ.வுமான ஆ. அருண்மொழிதேவன் இதுகுறித்து கூறுகையில், "என்.எல்.சி. இந்தியா நிறுவனம் பொறியியல் படித்த பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வை நடத்தி முடித்திருக்கிறது. எதிர்வரும் ஆகஸ்ட் 1-ம் தேதியன்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் மருத்துவ பரிசோதனையும் நடைபெற இருப்பதாக அறிவித்திருக்கிறது.

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை கடந்த 2022 ஜூலை 19-ம் தேதி என்.எல்.சி. நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்தப்பட்டியலில் மொத்தமுள்ள 299 நபர்களில் ஒருவர்கூட தமிழ் நாட்டை சேர்ந்தவர் இடம் பெறவில்லை. எனது புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கும், கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட குறிப்பாக என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலம், வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாரிசுகள் பொறியியல் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தும், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

அருண்மொழித் தேவன் எம்எல்ஏ
அருண்மொழித் தேவன் எம்எல்ஏ

இந்த என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு எடுக்கப்பட்ட நிலங்கள் மற்றும் எதிர்கால மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு எடுக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ள நிலங்கள் என் தொகுதிக்கு உட்பட்டவையாகும். அம்மக்கள் என்எல்சி நிறுவனத்தை எதிர்த்து தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நாள் தோறும் போராடிக் கொண்டுள்ளார்கள். எந்தவொரு நிரந்தர வேலை வாய்ப்பையோ, உரிய இழப்பீட்டையோ வழங்காத என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மண்ணின் மைந்தர்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது தமிழர்களையும் தமிழர்களின் உணர்வையும் கிள்ளுக்கீரையாக நிறுவனம் எண்ணிவருவதையே பிரதிபலிக்கிறது.

இந்த நிறுவனத்தை "நவரத்தினா" அந்தஸ்த்துக்கு கொண்டு சென்றுள்ள தொழிலாளர்களின் வாரிசுகளை வேலைக்கு தேர்வு செய்யாமல் வட இந்தியாவில் இருந்து எடுக்க வேண்டிய அவசியமும் என்ன?. அதோடு நிலம், வீடு கொடுத்த விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது எந்த வகையில் நியாயமானதாக இருக்கும்

நிர்வாகத்தின் செயல் கடுமையாக கண்டிக்கக்கூடிய கண்டனத்துக்குரிய செயலாகும். ஆகையால் என்.எல்.சி. நிறுவனம் நடந்து முடிந்த நேர்முகத்தேர்வை ரத்து செய்து அந்த பணியிடங்களுக்கு தமிழகத்தை சேர்ந்த தகுதியுள்ள நிலம் வீடு கொடுத்தவர்களின் வாரிசுகளையும், தொழிலாளர்களின் வாரிசுகளையும் முன்னுரிமை அளித்து புதிய பட்டியலை வெளியிட வேண்டும். கடலூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
ஆதீனங்களில் பிரச்சினை என்றால் உடனடியாக தலையிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இப்பகுதி மக்களுடைய வாழ்வாதார பிரச்சினையும் என்எல்சி இந்தியா நிறுவனத்தால் ஏற்படுகின்ற பாதிப்புக்ளையும் கவனத்தில் கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சினையில் அவரும், மத்திய அரசும் உடனடியாக தலையிட வேண்டும்.
இந்த பிரச்சினை குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தமிழர் விரோத என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை கண்டித்து தொடர் போராட்டங்களை அஇஅதிமுக நடத்தும்" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in