`அவர்களுக்கு ரயிலில் பயண சலுகை மறுப்பது நீதியல்ல'- பிரதமருக்கு வெங்கடேசன் எம்பி கடிதம்

`அவர்களுக்கு ரயிலில் பயண சலுகை மறுப்பது நீதியல்ல'- பிரதமருக்கு வெங்கடேசன் எம்பி கடிதம்

முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரையை அமல்படுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், "கரோனா காலத்தில் 2020-ல் நோய் பரவுவதை தடுப்பதற்காக முதியோர் பயணம் செய்வதை தவிர்க்க வழிகோலும் வகையில் முதியோர் பயண சலுகை ரத்து செய்யப்பட்டது. இப்போது 200 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் முதியோர் ரயில் பயண சலுகையை வழங்க வேண்டும் என்று பொதுமக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். ரயில்வே அமைச்சகம் இது சாத்தியமில்லை என்று பதில் அளித்தது. நாடாளுமன்றத்தில் என் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, பயணிகள் போக்குவரத்து இன்னும் பழைய நிலைமைக்கு திரும்பவில்லை என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் பயணிகள் வருமானம் 2019-20 காலகட்டத்தில் 45 ஆயிரம் கோடி வருமானத்தை மீண்டும் 21-22 எட்டியுள்ளது என்று பட்ஜெட் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த காரணம் நியாயமானது அல்ல. அத்துடன் எனது கேள்விக்கு அளித்த பதிலில் 6 கோடியே 18 லட்சம் பேர் 2019-20-ல் முதியோர் பயண சலுகை பெற்று முன்பதிவுடன் பயணம் செய்துள்ளனர். 5 கோடியே 86 லட்சம் முதியோர் முன்பதிவு என்று பயணம் செய்தனர். இந்த எண்ணிக்கை 2021-22-ல் முன்பதிவு வண்டிகளில் 63 லட்சம் குறைந்துள்ளது. ஏனெனில் சலுகை இல்லாததால் முதியோர் பயணத்தை தவிர்த்து உள்ளனர். இவர்களுக்கு பயண சலுகை அளித்ததால் 2019-20-ம் ஆண்டு 1,667 கோடி ரூபாய் ரயில்வேக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டதாக ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார்.

12 கோடிக்கும் மேலான முதியோர் இந்த சலுகையை பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை கவனிக்கும் போது இந்தத் தொகை பெரிய தொகை அல்ல என்பதை உணர முடியும். அதோடு சரக்கு போக்குவரத்தில் வழங்கப்படும் சலுகைகளை ஒப்பிடும்போது இது வெறும் குறைவான தொகை தான் என்பதை புரிந்து கொள்ளலாம். அத்துடன் விமான சேவையிலும் முதியோருக்கு ஒரு வகையான சலுகை அளிக்கப்படுகிறது. எனவே இந்த சலுகையை கொடுக்காமல் காலம் கடத்துவது நியாயமானது. இந்த நாட்டில் 14 கோடியே 43 லட்சம் முதியோர் உள்ளார்கள். இவர்களில் 12 சதமானம் பேருக்கு தான் ஏதேனும் ஒரு வகையான சமூக பாதுகாப்பு உள்ளது. மற்றவர்கள் 88 பேர் தங்கள் குழந்தைகளை நம்பி வாழ்கிறார்கள். கண்ணியமான வேலை என்று நிரந்தர வேலை என்று பணம் வீக்கத்தாலும் பாதிக்கப்பட்டு பெற்றோரை கவனிக்க முடியாத நிலையில் நிறைய பேர் உள்ளார்கள். இந்த நிலையில் மருத்துவ வசதிகளுக்காகவும் தீர்த்த யாத்திரைகளுக்காகவும் முதியோர் பயணிக்க வேண்டி உள்ளார்கள். அவர்களுக்கு பயணச்சலுகை மறுப்பது நீதியல்ல. மற்ற நாடுகளிலும் முதியோர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு சில நாடுகளில் பயணம் இலவசமாக அனுமதிக்கப்படுகிறது.

இந்தியாவில் ரயில்வேயில் பெண் பயணிகளுக்கு 58 வயது ஆனவர்களுக்கு 50 சத பயண சலுகையும் 60 வயதான ஆண் பயணிகளுக்கு 40 சத பயண சலுகையும் அளிக்கப்பட்டு வந்தது. இதனை திரும்ப அளிப்பது மிக தேவையாகும். இதனால்தான் சமீபத்தில் ஆகஸ்ட் 4-ம் தேதி நாடாளுமன்றத்தில் ரயில்வே நிலைய குழு தனது 12-வது அறிக்கையில் 14-வது பரிந்துரையில் கீழ்கண்டவாறு கூறியுள்ளது. "தொற்றுநோயின் காரணமாக முதியோர் பயண சலுகை நிறுத்தப்பட்டது. இந்த கமிட்டி ரயில்வே சாதாரண நிலைமையை மீண்டும் எட்டுவதை கணக்கில் கொண்டு இந்த சலுகையை திரும்ப வழங்க நியாயம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

இந்த சலுகையை குறைந்தபட்சம் ஸ்லீப்பர் கிளாஸ், குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டி ஆகியவற்றுக்கு உடனடியாக அவசரமாக திருப்பி அளிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்". இந்த கமிட்டியின் தலைவர் பாஜகவின் உதவி தலைவர் ராதா மோகன் சிங் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த பரிந்துரையை சுட்டிக்காட்டி நான் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். அதில் இந்த சலுகையை குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லா பயணங்கள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி, மூன்றாம் வகுப்பு குளிர்சாதன படுக்கை வசதி ஆகியவற்றுக்கு விரிவாக்கி பயண சலுகையை மீண்டும் வழங்கிட கோரி உள்ளேன். ரயில்வே அமைச்சகத்தையும் இதுகுறித்து விரைந்து முடிவெடுக்க கோரி உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in