வி.பி.துரைசாமி சந்தர்ப்பவாதியா?

பாஜக ஆர்ப்பாட்டத்தில் நடந்த சம்பவத்தால் எழுந்த சர்ச்சை
சென்னையில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டம்.
சென்னையில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் வி.பி.துரைசாமி. திமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர். சட்டப்பேரவைத் துணைத்தலைவர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்தவர். கடந்த 2020 மே 22-ல் திமுகவிலிருந்து விலகி அவர் பாஜகவில் ஐக்கியமானார். தற்போது அக்கட்சியின் மாநிலத் துணைத்தலைவராக உள்ளார். இவர், பாஜகவால் சாதிய ரீதியாக அவமானப்படுத்தப்பட்டார் என்று தமிழகம் முழுவதும் இரண்டு காணொலிகள் வைரலாகி வருகின்றன. அப்படி என்ன சம்பவம் நடந்தது?

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மார்ச் 26-ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பாஜக மாநிலத் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேசத்துவங்கியதில் இருந்தே பிரச்சினை துவங்கி விட்டது. மைக் வைத்திருந்த பாஜக நிர்வாகி, 'பாரத் மாதா கீ ஜே' என்று தொடர்ந்து முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த வி.பி.துரைசாமி தனதுப் பேச்சைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்டார். இதைக் கண்ட அந்த நிர்வாகி முழக்கமிடுவதை நிறுத்தினார். இதனால், "மீண்டும் பேசுங்கள்" என்று அங்கிருந்த நிர்வாகிகள் வி.பி.துரைசாமியிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர், "இருப்பா... இடையில் வேற யாராவது வருவாங்க. அவங்க எல்லாம் வரட்டும். அப்பறம் பேசலாம். எனக்கு அசிங்கமா இருக்கு. அவர் வரட்டும். அவர் வந்ததும் பேசிக்கலாம்" என்று கூறினார். ஆனாலும் விடாமல் நிர்வாகிகள் வலியுறுத்திய போது, "அவர் வரட்டும். வந்ததும் பேசலாம். என்னை என்ன பேசச் சொல்லி மிரட்டுறீங்களா?" என்று வி.பி.துரைசாமி கோபமானார்.

வி.பி.துரைசாமி.
வி.பி.துரைசாமி.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தாமதமாக மேடைக்கு வந்தார். அவரிடம், " நீங்கள் அனுமதி கொடுத்தால் நான் பேசுவேன்" என்று வி.பி.துரைசாமி கூறினார். அவர் அனுமதி தந்த பின்பே வி.பி.துரைசாமி பேசினார். இந்த காணொலி தான் தற்போது வைரலாகி வருகிறது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வி.பி.துரைசாமியை பாஜகவினர் வேண்டும் என்ற பேசவிடாமல் தடுத்தனர் என்று அந்தக் காணொலிக்குப் பின்னூட்டங்கள் குவிந்து வருகின்றன. இதே ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன நடந்தது?

பாஜக ஆர்ப்பாட்ட மேடையில், நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தியின் வலதுதோள் பட்டை மீது வி.பி.துரைசாமியின் கை லேசாகப் பட்டது. உடனே எம்.ஆர்.காந்தி சட்டையைத் தூக்கி லேசாகத் தட்டி விடுவார். அதன் பின்னர் எம்.ஆர்.காந்தியின் இடது பக்கத் தோளில் வி.பி.துரைசாமி கை வைத்தார். உடனடியாக வி.பி.துரைசாமியின் கையை அடித்து காந்தித் தட்டிவிடுவார். இது தொடர்பான காணொலியும் வைரலாகி வருவதுடன், பாஜக தலைமைக்குக் கண்டனமும்ம் குவிய ஆரம்பித்துள்ளது. ஆனால், இதற்கு உடனடியாக வி.பி.துரைசாமி ஒரு செய்தி ஊடகம் மூலம் மறுப்பு தெரிவித்தார். அதில், "தெரியாமல் அவர் தோள் மீது என் கைபட்டது உண்மை. அவரும் ஏதோ பூச்சி உட்கார்ந்துருக்குன்னு நெனச்சு தட்டிவிட்டாரு. என் கையைத் தட்டி விடவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அப்படி செயல்படவில்லை" என்று வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.

அழகிய பெரியவன்.
அழகிய பெரியவன்.

இந்த சம்பவம் குறித்து எழுத்தாளர் அழகிய பெரியவனிடம் கேட்டதற்கு, " 'நாங்க ஜனநாயகபூர்வமாக இருக்கிறோம், சமத்துவத்தைக் கடைபிடிக்கிறோம், சாதி வேற்றுமையையோ, ஆண், பெண் பாலினப் பாகுபாட்டையோ பின்பற்றுவது கிடையாது' என்பதை வெளிக்காட்டிக் கொள்ள பாஜக தொடர்ந்து முயற்சி செய்துகிறது. அதற்காக வி.பி.துரைசாமி போன்று நாடி வருபவர்களைப் பாஜக பயன்படுத்திக் கொள்கிறது.

அப்படி வி.பி. துரைசாமி போன்றவர்களைப் பயன்படுத்திக் கொண்டாலும், பாஜவின் அடிப்படைச் சித்தாந்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் தான், வழக்கம் போல சாதியவாதியாகவே பாஜவினர் நடந்து கொள்கின்றனர். வி.பி.துரைசாமி போன்றவர்களைக் கட்சிக்கு அழைத்து வந்த பின்பு, 'இந்த நபர்களே இப்படித்தான் மோசமாக நடந்து கொள்வார்கள், இவர்களெல்லாம் தலைமைப் பதவிக்கு பொருத்தமானவர்கள் இல்லை' என்ற பிம்பத்தை பாஜக கட்டமைக்கப் பார்க்கிறது. இது காங்கிரஸ் கட்சியிலும் நடந்துள்ளது. ஆனால், பாஜகவில் தொடர்ந்து இது போன்ற வேலை நடந்து கொண்டே இருக்கிறது" என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள், பெண்கள் மீது சேற்றை வாரிப் பூசவும், நேரம் கிடைத்தால் அவர்களைச் சிக்க வைக்கவும் பாஜக தயாராகவே இருக்கிறது. ஆனால், அவர்களைப் புறக்கணிக்கக்கூடிய கருத்தியல் தளத்தில் இருந்து பேசுவதற்கு வி.பி. துரைசாமி தயாராக இல்லை. ஏனெனில், அவர் முழுக்க முழுக்கச் சந்தர்ப்பவாதியாக மாறிவிட்டார். எந்த அமைப்பு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பணி செய்கிறது, அவர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், தனிப்பட்ட சுயலாபம் கருதி இது போன்ற முகாமில் வி.பி.துரைசாமி தஞ்சமடைந்துள்ளார். குறைந்தபட்சம் சுயமரியாதை சார்ந்த சிந்தனையிருந்திருந்தால், அடிபட்டதற்கு வி.பி.துரைசாமி இப்படி எதிர்வினையாற்றி இருக்கமாட்டார். இது அவருக்கு இழைக்கப்பட்ட அவமானம்" என்று கூறினார்.

இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ் கூறுகையில், "தான் அவமானப்பட்டோம் என்று சொல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அதை விட அவமானம் இருக்கிறதா? கிராமப்புறங்களில் பண்ணைத்தனம் மிக்க வீடுகளில் சாதி ரீதியாக சிலரை வேலைக்கு அடிமையாக வைத்திருப்பார்கள். அங்குள்ளவர்கள் அடிமையாக இருப்பதை உணர முடியாமல் போவதும், அப்படி உணர்ந்தும் அடிமைப்படுத்தப்படுகிறோம், அவமானப்படுத்தப்படுகிறோம் என்று சொல்ல முடியாமல் போவதும் மிகப்பெரிய அவமானம். அந்த நிலை தான் வி.பி.துரைசாமிக்கு ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.

நாராயணன் திருப்பதி.
நாராயணன் திருப்பதி.

இப்புகார்கள் குறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம். அவர் கூறுகையில், "வி.பி.துரைசாமி மூத்த அரசியல்வாதி. மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். சட்டப்பேரவை துணைத்தலைவராக இருந்தவர். அவரது பேச்சுத்தடை ஏற்படுத்தப்படும் போது, 'இப்படிச் செய்கிறார்களே' என அவர் வருத்தம் கொண்டது சரியானது தான். அங்கு அவர் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இதே போல, அங்கு யாரும் வேண்டும் என்றும் எதையும் செய்யவில்லை. இதுகுறித்து அவரிடம் நான் பேசினேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால், சில கட்சிகளும், சில ஊடகங்களும் இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்திவிட்டன" என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in