'உங்களுக்கு அரசு வழங்கிய வீடு தூரம்ல?': வெள்ளந்தி வேலம்மாள் பாட்டியிடம் வாயைப்பிடுங்கி வாட்ஸ் அப்பில் உலா விட்ட அதிமுக!

வேலம்மாள் பாட்டி
வேலம்மாள் பாட்டி படம்: ஜாக்சன் ஹெர்பி

ஒரே புன்னகையால் பிரசித்திபெற்ற வேலம்மாள் பாட்டிக்கு தமிழக அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு வழங்கியது. இந்த வீடு அவர் இப்போது இருக்கும் நாகர்கோவில் பகுதியில் இருந்து வெகுதொலைவில் இருப்பதால் வேலம்மாள் பாட்டி சங்கடத்தில் இருப்பதாக அதிமுக தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சியின் புகைப்படக் கலைஞராக இருந்தவர் ஜாக்சன் ஹெர்பி. இவர் தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு, 2000 ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு மலர்ந்த முகத்துடன் சென்ற வேலம்மாள் என்ற பாட்டியை எடுத்த படம் வைரலானது. இதன் மூலம் வேலம்மாள் பாட்டியும் பேமஸ் ஆனார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினே இந்தப் புகைப்படத்தை, 'இந்த ஏழைத்தாயின் சிரிப்பே... நம் ஆட்சியின் சிறப்பு' எனத் தன் சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவு செய்தார்.

அண்மையில் மழைப் பாதிப்பினைப் பார்வையிட குமரிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த வேலம்மாள் பாட்டி, வீடு இல்லாமல் கஷ்டப்படுவதாகத் தெரிவித்தார். அப்போதுகூட நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் வேலம்மாள் பாட்டிக்கு ஒரு சேர் போடப்பட்டிருந்தது. வயோதிகத்தால் அதில் அமர்ந்திருந்தபடியே வேலம்மாள் பாட்டி பேச, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரிடம் குனிந்தபடியே நின்றுகொண்டே பேசினார். வேலம்மாள் பாட்டி அப்போது தனக்கு வீடு இல்லை எனவும், முதியோர் பென்ஷன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைவைத்தார்.

இதில் முதலில் முதியோர் பென்ஷனும், நேற்று இரவு கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் நேரில்போய், பால்குளம் பகுதியில் வீடு வழங்கும் ஆணையும் வழங்கினார். இந்த வீட்டிற்கு குறைந்தபட்ச தொகையாக செலுத்த வேண்டிய 74 ஆயிரத்தையும் திமுகவினரே செலுத்தினர்.

தனக்கு வீடு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேலம்மாள் பாட்டி நன்றியும் சொல்லியிருந்தார். இந்நிலையில் வேலம்மாள் பாட்டி, அந்த வீடு தூரத்தில் இருக்கிறது. கொட்டாரம் தாண்டிச் செல்ல வேண்டும். அது பிடிக்கவில்லை என அவர் பேசும் காணொலி ஒன்று அதிமுக குழுக்களில் உலாவருகிறது.

இதைப்பற்றி வேலம்மாள் பாட்டியின் உறவினர்களிடம் கேட்டால், “பாட்டி வயதானவர். வெள்ளந்தியாகப் பேசுபவர். அவரிடம் நெருங்கிய தோழமை போல் உரையாடி அந்த வீடு தூரம் தெரியுமா? எனக் கேட்டு பதில் வாங்கியிருக்கிறார்கள். கூடவே, அந்த வீடு உங்களுக்குப் பிடிக்கலைல? அது தூரம்ல...எனத் திரும்ப, திரும்பச் சொல்லியே பதில் வாங்கியுள்ளனர். உண்மையில் வேலம்மாள் பாட்டி இன்னும் அவருக்கு ஒதுக்கியிருக்கும் வீட்டைக் கூடப் பார்க்கவில்லை”என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in