‘பாஜக பெண்களுக்கு பாதுகாப்பானதா?’: குஷ்பூ, அலிஷா என்ன சொல்கிறார்கள்?

‘பாஜக பெண்களுக்கு பாதுகாப்பானதா?’: குஷ்பூ, அலிஷா என்ன சொல்கிறார்கள்?

அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக-வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற காயத்ரி ரகுராமின் குற்றச்சாட்டுக்கு, அக்கட்சியின் பெண் பிரபலங்களான குஷ்பூ மற்றும் அலிஷா ஆகியோர் இன்று விளக்கம் அளித்துள்ளனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடனான நேரடி மோதலில் கட்சியை விட்டு வெளியேறிய மற்றும் வெளியேற்றப்பட்ட காயத்ரி ரகுராம், தமிழக பாஜக மற்றும் தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். குறிப்பாக, அண்ணாமலை தலைமையின் கீழான தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது காயத்ரியின் முக்கிய குற்றச்சாட்டாக நீடிக்கிறது.

இதற்கான பதிலை, கட்சியின் பெண் நிர்வாகிகளான குஷ்பூ மற்றும் அலிஷா அப்துல்லா இன்று தனித்தனியாக வழங்கியுள்ளனர்.

கோவை வெள்ளலூரில் பாஜக சார்பிலான நம்ம ஊர் பொங்கல் திருவிழா நிகழ்வில் பங்கேற்ற கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் குஷ்பூ, பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், “பாஜகவில் இருந்து எல்லா பெண்களும் வெளியேறவில்லை. ஒரு சிலர் வெளியேறுவதால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்ல முடியாது. நானும் பாஜகவில்தான் இருக்கிறேன். பாதுகாப்பாகவே உள்ளேன். அண்ணாமலை துணிச்சலான தலைவர். பாராட்டுக்குரியவர்” என்று தெரிவித்தார்.

சென்னை பெரம்பூரில் மகளிர் கால்பந்து போட்டியினை தொடங்கி வைத்த, கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மா நில செயலரான அலிஷா அப்துல்லா பேசுகையில், “நான் பிஜேபியில் தான் இருக்கிறேன். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. காயத்திரி ரகுராம் தற்போது கட்சியில் இல்லை. கட்சியில் இல்லாத நபர் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in