இலங்கை வர கோத்தபய ராஜபக்ச தயங்குவதற்குக் காரணம் இது தானா?

இலங்கை வர கோத்தபய ராஜபக்ச தயங்குவதற்குக் காரணம் இது தானா?

தாய்லாந்தில் தங்கியுள்ள இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவார் என்று நம்பப்படுகிறது. ஆனால், அவர் இலங்கை வந்தால் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக இல்லம் ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட கரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்தது. இதன் காரணமாக அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். இந்த நிலையில் அங்கிருந்து தப்பிய கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் தப்பிச்சென்றார். அங்கிருந்து தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் தங்கியிருந்த கோத்தபய ராஜபக்ச, தாய்லாந்து சென்றுள்ளார். அங்கிருந்து விரைவில் அவர் இலங்கை திரும்புவார் என்று கூறப்படுகிறது. அப்படி அவர் இலங்கை திரும்பினால், அரசு சார்பாக வழங்கப்படும் அதிகாரப்பூர்வ இல்லம் வழங்குவதற்கு சட்டத்தடைகள் இருப்பதாக உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

"கோத்தபய ராஜபக்ச தனது பதவிக்காலத்தை நிறைவு செய்தவரல்ல. போராட்டத்தின் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தவர். எனவே அவருக்கு முன்னாள் அதிபருக்குரிய சிறப்புரிமைகள் கிடையாது" என்ற சட்ட வாதத்தின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி அவருக்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வ இல்லம் வழங்கினால், அதனை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த நேரிடலாம். எனவே, அவருககு அதிகராப்பூர்வ இல்லத்தை வழங்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கூறியுள்ளார். இதன் காரணமாக கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது தாயக வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in