காமராசர் பிறந்த ஊரிலா இப்படி? - கி.வீரமணி வேதனை

காமராசர் பிறந்த ஊரிலா இப்படி? - கி.வீரமணி வேதனை
கி.வீரமணை

அனைவருக்கும் கல்வி தந்த அருந்தலைவர் கல்வி வள்ளல் காமராசர் பிறந்த விருதுநகரில், எழுதப் பேனாவே ஒத்துழைக்க மறுக்கும் கொடுமையான நிகழ்வா? என்று கி.வீரமணி வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘முன்பு டில்லியில் நடைபெற்ற ‘நிர்பயா’ நிகழ்வுபோல பாலியல் வன்கொடுமை தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது என்று எழுதும் முன்பே, பொள்ளாச்சியில் நடந்த அருவருக்கத்தக்க நிகழ்வுகளும், அதில் பல பிரமுகர்களின் பிள்ளைகளும் ஈடுபட்டிருந்தார்கள் என்ற வெட்கக்கேடான அவலமும் நம் நினைவைவிட்டு இன்னமும் நீங்கவில்லை. நீதிமன்றங்களும் கடுமையாகத்தான் தண்டிக்கின்றன. காவல்துறையினரும் பெரிதும் அருமையாக கடமையாற்றுகின்றனர் - ஒரு சில நிகழ்வுகளைத் தவிர.

ரத்தக் கண்ணீர் பீறிடுகிறது!

இந்த நிலையில், அண்மையில் விருதுநகரில் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமைச் செய்தியைக் கேட்டாலே நம் நெஞ்சத்தில் இரத்தக் கண்ணீர் பீறிடுகிறது! இத்தகைய மனிதர்கள் ஏன் இப்படி மிருகங்களைவிடக் கேவலமாக நடந்துகொள்ளுகிறார்கள்? இந்த லட்சணத்தில் இந்தக் கூட்டுக் கிரிமினல் நடவடிக்கையில் மாணவர்களும் உண்டாம்! என்னே கொடுமை! என்னே இழிவு!!

விருதுநகர் பாரம்பரிய சுயமரியாதை மண். 1931-ல் மூன்றாவது சுயமரியாதை மாநாடு - பெண்கள் மாநாடெல்லாம் நடைபெற்று பெண்ணுரிமை, மண்ணுரிமையைவிட மகத்தானது என்று பிரகடனம் செய்த பூமி. அனைவருக்கும் கல்வி நீரோடையைப் பாய்ச்சி, அருந்தச் செய்த அருந்தலைவர் கல்வி வள்ளல் காமராசர் பிறந்த ஊர். அங்கே இப்படி ஒரு அருவருக்கத்தக்க செயல் - எழுதவே பேனாகூட ஒத்துழைக்க மறுக்கும் கொடுமையான நிகழ்வு!

ஒரே ஆறுதல், உடனடியாக நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மின்னல் வேகத்தில் காவல் துறைக்கு ஆணையிட்டு, திறமையும், நேர்மையும் உள்ள பல காவல்துறை அதிகாரிகளை அனுப்பி, குற்றவாளிகளை உடனே கைது செய்து, இந்த செயலுக்குக் கடுந்தண்டனை வழங்க ஏற்பாடு செய்திருப்பது சற்று புண்ணுக்கு மருந்திடுவதாக உள்ளது!

இந்த மனித மிருகங்களை நிரந்தர சமூக விரோதிகள் என்று கூறி, வாழ்நாள் தண்டனை தந்து, மற்றவர்கள் இதுபோன்று செய்ய நினைக்கும் எண்ணத்தை அறவே மனதிலிருந்து அழிக்கக் கூடிய புதிய சட்டங்களை நிறைவேற்றுவதும்கூட அவசர அவசியம்!

பெண்களை வெறும் பாலுறவுப் பண்டங்களாகப் பார்க்கும் எண்ணத்தையே வேரோடும், வேரடி மண்ணோடும் பெயர்த்தெறியும் வண்ணம் தந்தை பெரியாரின், திராவிடர் இயக்கத்தின் பெண்ணுரிமைச் சிந்தனைகளை ஒரு தீவிரப் பிரச்சார இயக்கமாகவே நாடு தழுவிய அளவில் நடத்திட, தமிழ்நாடு அரசே ஊக்கம் தந்து உந்தித் தள்ள திட்டமிடல் வேண்டும்.

ஆட்சியின் முன்னுரிமையே பெண்ணுரிமையாக இருக்கவேண்டும்! எந்தப் பிரச்சினையையும் வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் பாராமல், சமூகம் சார்ந்த பிரச்சினையாகவும் அணுகி, அதற்கேற்ப இளைஞர்களை அறிவுபூர்வமானவர்களாக ஆக்கவேண்டும்; காட்சி ஊடகங்களின் போக்கிலும் பெரிய மாற்றத்தை உருவாக்கி, இந்தப் பாலியல் வன்கொடுமையை பல கோணங்களில் ஆராய்ந்து தக்க தீர்வு காணவேண்டியது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமை தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முன்னுரிமையே பெண்ணுரிமையாக இருக்கவேண்டும்’

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in