`ஏன் இப்படிச் செய்கிறீர்கள்; உண்மையிலேயே மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்கா?

முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கேள்வி
ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

மாநகராட்சி, நகராட்சிகள் தங்கள் மன்றத் தீர்மானங்களின் வழியே ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்த்திக்கொள்ளும் சட்டமுன்வடிவை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “கரோனாவால் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அது மீளும்வரை சொத்துவரி உயர்த்தப்படாது என வாக்குறுதி கொடுத்த திமுக அரசு, சொத்து வரியை உயர்த்தியது. அதிலும், தங்கள் மன்றத் தீர்மானங்களின் வழியாகவே மாநகராட்சி, நகராட்சிகள் சொத்துவரியை உயர்த்திக்கொள்ளலாம் என்னும் சட்ட முன்வடிவைக் கொண்டுவந்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்த சட்டமுன் வடிவு இயற்றப்பட்டதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச நிலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக அரசு, நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களால் சொத்துவரியை உயர்த்த சட்ட முன்வடிவைக் கொண்டுவருவது எந்த விதத்தில் நியாயம்? சொத்துவரிப் பற்றி மக்கள் கேள்வி கேட்டால் உள்ளாட்சி அமைப்புகளின் மீது பழியைப் போட்டுவிடலாம் என திமுக நினைக்கிறது. இதுதான் திராவிட மாடலா? இது வாடகை வீட்டில் இருக்கும் மக்களையும் வெகுவாகப் பாதிக்கும். அவர்களின் வாடகையும் உயரும். வணிக நோக்கத்தில் கடை மற்றும் நிறுவனங்களை வைத்திருப்போரும் தங்கள் பொருட்களுக்கான விலை, சேவைக் கட்டணத்தை உயர்த்த வேண்டிவரும்.

மக்கள் நலன் என அடிக்கடிப் பேசும் தமிழக முதல்வருக்கு உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருக்குமானால், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்தச் சட்டமுன் வடிவை திரும்பப்பெற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in