
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சி தான் வெற்றி பெரும். ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் தொகுதிக்கு ஏதாவது நடைபெறும் என மக்கள் நினைத்து வாக்களிக்கின்றனர். திமுக மேல் 21 மாதங்களிலேயே மக்கள் கடும் அதிப்தியில் இருக்கின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றாமல் பல வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 10 சதவீத ஊழல் நடைபெற்று இருந்தால், இப்போது விலைவாசி உயர்வு போல் இந்த ஆட்சியில் ஊழல் அதிகமாகிவிட்டது. திமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் காஞ்ச மாடு புல்வெளியில் மேய்ந்தது போல் மேய்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்து இந்த 20 மாதத்தில், மக்கள் எந்த அளவுக்கு அதிருப்தியில் உள்ளனர் என உளவுத்துறை மூலம் ஸ்டாலினுக்கு தெரியாமல் இருக்காது.
இதுவரை கேள்விப்படாத அளவுக்கு ஈரோடு இடைத்தேர்தலில் இலவசங்கள் எல்லாம் வாரி வழங்கினார்கள். ஒரு வாக்காளருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சேர்ந்து இருக்கிறது என்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு தவறான முன்மாதிரியாக இடைத்தேர்தல் நடந்திருக்கிறது. அதை சமாளிப்பதற்காக வெற்றியை வாங்கிவிட்டு அவர் பேசுகிறார். வெற்றி பெற்று விட்டீர்கள் என்று நான் சொல்லவில்லை. வெற்றியை வாங்கி விட்டீர்கள் என்று சொல்கிறேன். இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்று உள்ளது" என்றார்.