ஆரம்பமாகிறதா மோடி அதிருப்தி அலை? எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பும், எதார்த்தமும்!

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

கடந்த 2 தேர்தல்களிலும் காப்பாற்றிய மோடி அலை இம்முறையும் உதவுமா என்ற ஐயம் பாஜகவுக்கு இப்போது எழுந்திருப்பதை, அக்கட்சியின் அண்மை தடுமாற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த வாய்ப்புக்காக காத்திருந்தவர்களாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தடி தட்டுகின்றன. எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா, பாஜக அத்தனை எளிதில் அவற்றுக்கு இடமளித்துவிடுமா என்பதுதான் தற்போதைய கேள்விககள்.

மீண்டும் மோடி அலை?

குஜராத்தின் வளர்ச்சி நாயகனாக முன்னிறுத்திறுத்தப்பட்ட மோடி மீது 2014-ல் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அது அம்முறை தேர்தலுக்கும் பெரிதும் உதவியது. குஜராத் வளர்ச்சிப் பாதையில் ஒட்டுமொத்த தேசத்தையும் வழி நடத்தும் மோடியின் உத்தரவாதம் பாஜகவுக்கு கை கொடுத்தது. 2019 தேர்தலில் குஜராத் மோடியின் பிம்பத்தில் சற்றே பொத்தல் விழுந்தபோதும், தேசத்தின் பாதுகாப்பை முன்னிறுத்தியும், அதனைக் காக்கும் ஒப்பற்ற தலைமையாகவும் மோடிக்கு கிடைத்த இன்னொரு முகம் அவரைக் காப்பாற்றிக் கரைசேர்த்தது.

ஆனால் 2024 தேர்தலில் இந்த இரண்டுமே இல்லை. ஆளும் பாஜகவின் அசுர வளர்ச்சி, எதிர்க்கட்சிகளின் தள்ளாட்டம், மாநிலங்கள் தோறும் அரசியல் களேபரம் ஆகியவற்றை நம்பியே மோடி 3.0 பீடத்துக்கான முயற்சிகள் அரங்கேறி வருகின்றன. ராமர் கோயில் முதல் சிஏஏ அமல் வரை பெரும்பான்மை மக்களை தனி அடையாளத்துடன் திரட்டி வாக்குகளாக மாற்றும் தவிப்பும் பாஜகவிடம் தென்படுகிறது. இவையனைத்தும் இன்னொரு பக்கம் மோடியின் வழக்கமான அலை மீண்டும் எழாததை சுட்டிக்காட்டுகின்றன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அதிருப்தி அலை ஆரம்பமா?

ஆளும்கட்சிகள் மீண்டும் தேர்தலை சந்திக்கும்போது எழும் அதிருப்தி இயல்பானது. அதிலும் தொடர்ந்து 2 முறை ஆட்சியிலிருந்த பாஜக, மூன்றாவது முறை தேர்தலை சந்திப்பதில் பெரும் பதற்றம் தொனிக்கிறது. ’வெற்றி... மகத்தான வெற்றி...’ என பாஜகவினர் தாமாக உரக்க குரல் எழுப்புவதிலும், அதற்கான சகலத்தையும் கட்டமைப்பதன் பின்னணியிலும் அந்த பதற்றமே பிசிறடிக்கிறது.

வாக்காளர்களைக் கவர மோடி அளித்த வாக்குறுதிகள் பலதும் அப்படியே இருக்கின்றன. அதனால் ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்கமுடியாத சங்கடத்தில் பாஜகவினர் இருக்கிறார்கள். ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகள் வாய்ப்பந்தலாகவே நீடிக்கின்றன. விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட நடப்பு இடர்பாடுகள் சாமானியர்களை நசித்து வருகின்றன.

மீண்டும் கிளர்ந்தெழும் விவசாயிகளின் போராட்டமும், அவர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கையும் பொதுமக்களை முகம்சுளிக்கச் செய்திருக்கின்றன. மோடி அரசின் பெருமிதங்களில் ஒன்றான, விவசாயத்தில் ட்ரோன்களின் பயன்பாடு என்பதை, விவசாயிகள் மீதான ட்ரோன் தாக்குதலாக மாற்றியிருக்கிறது.

ஆட்சிக் காலத்தின் இறுதியில், மணிப்பூர் தவிர்த்து மாநிலங்கள் அனைத்துக்கும் முறைவைத்து பறக்கிறார் மோடி. அங்கெல்லாம் பல்லாயிரம் கோடிக்கான நலத்திட்டங்கள் அறிவிப்பு, புதிய திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு என, தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பெரும் பிரச்சார உத்தியை கையில் எடுத்திருக்கிறார். இவையும் மேற்படி அதிருப்தி அலையை தணிக்கும் முயற்சியாகவே தென்படுகிறது.

கூட்டணி கணக்கில் பிணக்கு

தேர்தல் நெருக்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சிகளை மீளக்கட்டமைக்க முயன்றபோதுதான் அவற்றுடனான உறவு வெகுவாக சீர்கெட்டிருப்பதை பாஜக உணர்ந்தது. மாநிலங்களில் கட்சியை வளர்த்தெடுப்பதன் முயற்சிகளின் பெயரால், எதிர்க்கட்சிகளைவிட கூட்டணி கட்சிகளையே பாஜக அதிகம் பதம் பார்த்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி சிதைந்ததே இதற்கு பிரதான உதாரணம். தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய கட்சியான அதிமுக, ஒட்டுமொத்தமாக பாஜகவை புறக்கணித்து கதவடைத்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான கூட்டணி பலம் மற்றும் சொந்த எம்பி-க்களின் வெற்றி என பாஜகவை வெகுவாக சேதாரம் செய்யும் சூழல் எழுந்திருப்பதும் அக்கட்சி எதிர்பாராதது. இதே போன்று பாஜகவின் அழுத்தத்துக்கு உடன்படாது ஹரியாணாவில் ஜேஜேபி, கூட்டணியை உடைத்துக்கொண்டு வெளியேறி இருப்பது இன்னொரு உதாரணம்.

பஞ்சாப்பில் விவசாயிகளின் போராட்டம் காரணமாக, பாஜகவுடன் நெருங்க சிரோமணி அகாலி தளம் தயங்குகிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என இரு முக்கிய கட்சிகளையும் செங்குத்துவாக்கில் பிளந்து தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக இறுமாந்திருந்த மகாராஷ்டிராவில், கூட்டணிகளுடனான சீட் பங்கீடு பிரச்சினை அமித் ஷா தலையிட்டும் ஆறியபாடில்லை.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

எதிர்க்கட்சிகளின் எழுச்சி

இந்தியா கூட்டணி கட்டமைக்கப்பட்டபோது பதற்றமடைந்த பாஜக, பின்னர் நிதிஷ்குமார் மூலம் அதற்கு முடிவுரை எழுதியதாக இறுமாந்திருந்தது. ஆனால், பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளம் தவிர்த்து, இந்தியா கூட்டணி கட்சிகள் சத்தமின்றி கூட்டணி ஒப்பந்தங்களில் முன்னேறி இருப்பது பாஜக எதிர்பாராதது. பஞ்சாப், கேரளா மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லாததோடு, எதிர்க்கட்சிகளில் எவர் வென்றாலும் அது இந்தியா கூட்டணியின் வெற்றி என்பதாகவே நிலவரம் இருக்கிறது. மேற்கு வங்கத்தின் நடப்பு சூழலில் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள தவிக்கும் மம்தா பானர்ஜியால் அங்கே கூட்டணி கைகூடாது போயிருக்கிறது.

பீகாரில் நிதிஷ்குமாரை பாஜக வளைத்தபோதும், அவருக்கு எதிரான தேஜஸ்வி யாதவின் எழுச்சி அதிகரித்து வருகிறது. மக்களவை தேர்தலுடன் பீகார் சட்டப்பேரவை தேர்தலையும் சேர்த்து நடத்துமாறு நச்சரிக்கும் நிதிஷ்குமாரை சமாளிப்பதும் பாஜகவின் தலைவலியாக மாறியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினாலும், அங்கே காங்கிரஸ் வாக்கு சதவீதம் அப்படியே இருப்பதும், கமல்நாத்தை வளைக்கும் முயற்சி முனைமுறிந்ததும் பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றன. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கான பாஜகவின் ஆபரேஷன் தாமரையும் வேலைக்கு ஆகவில்லை.

இவற்றுக்கு அப்பால், வாக்காளர்களின் மனநிலையை ஒட்டுமொத்தமாக மடைமாற்ற முயலும் காங்கிரஸ் கட்சியின் ரகசிய ஏற்பாடுகளையும், அவற்றை தேர்தல் நெருக்கத்தில் வெளிப்படுத்த காத்திருப்பதையும் பாஜக மோப்பம் பிடித்திருக்கிறது. மோடியின் இமேஜை டேமேஜ் செய்யும், பிபிசி ஆவணப்படம் பாணியிலான காங்கிரஸின் அதிரடியை எப்படி நீர்த்துப்போகச் செய்வது என்பதிலும் பாஜகவின் அடுத்த தலைவலி அதிகரித்திருக்கிறது.

உள்ளடிகள் செல்லுபடியாகுமா?

கடைசி நேரத்தில் ஏதேனும் அதிசயம் நடந்து, தமது கட்சி எம்பி-க்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே கூட்டணி கட்சிகள் உதவியோடு, பாஜகவின் மோடி 3.0 புறப்பாட்டை காங்கிரஸால் முறியடிக்க முடியும். மற்றபடி பாஜகவின் வெற்றி என்பது இறுதி செய்யப்பட்ட ஒன்றாகவே தற்போது வரை பார்க்கப்படுகிறது. அந்த வெற்றியை மோடியின் அசுர பலமாக குவியாது, அவற்றுக்கு பங்கம் சேர்க்கும் முயற்சியாகவே எதிர்க்கட்சிகளின் முனைப்புகளும் இருக்கின்றன.

இந்த எதிர்க்கட்சிகளின் முனைப்பில் பாஜக - ஆர்எஸ்எஸ் முகாம் அதிருப்திகளும் சேர்ந்திருப்பது, மோடியின் ஹாட்ரிக் வெற்றிக்கு வேகத்தடையாகின்றன. மோடி தலைமையிலான பாஜக வெல்லட்டும்; ஆனால், அசுர பலம் கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி பாஜக - ஆஎஸ்எஸ் தரப்பிலும் விரும்புவோர் உண்டு. பிஎம் கேர் தொடங்கி அதானி ஆதரவு மற்றும் தேர்தல் பத்திரங்கள் வரையிலான சர்ச்சைகளில், கட்சி மீது படிந்த கறைகள் பாஜக தலைவர்களை சங்கடத்தில் தள்ளி உள்ளன.

ராஜ்நாத் சிங் - மோடி - அமித் ஷா
ராஜ்நாத் சிங் - மோடி - அமித் ஷா

உள்ளபடி மோடியின் ஊதிப்பெருக்கப்பட்ட பிம்பத்துக்கு பாஜக மூத்த தலைவர்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவவே செய்கிறது. இதுவே நிதின் கட்கரி எப்போது கட்சி மாறுவார் என்ற விவாதம் எழும் அளவுக்கு போயிருக்கிறது. மோடியை முதலில் முன்மொழிந்த ராஜ்நாத் சிங் போன்றவர்கள், பாஜகவின் எதிர்காலத்துக்கு உகந்த மாற்று முகத்தை எதிர்பார்க்கிறார்கள்.

பாஜக என்பது சித்தாந்தத்தை முன்வைத்து நகர வேண்டுமே ஒழிய, மோடி என்ற ஒற்றை பிம்பத்தை பின்தொடர்வது உகந்ததல்ல என்பது உட்கட்சி அதிருப்தியாளர்களின் கருத்து. வாக்காளர்களை வசீகரிக்கும் ஒற்றை முகமாக மோடியை முன்னிறுத்துவதற்கு அப்பால், இந்த சித்தாந்த அடையாளத்தையே ஆர்எஸ்எஸ் முகாமும் வழிமொழிய விரும்புகிறது.

மோடி - அமித் ஷா இணையின் அசுர வளர்ச்சியை இவர்களும் விரும்புவதாக இல்லை. ஆனால், இந்த விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும் இடத்தில் மோடி - அமித் ஷா ஆகியோரே இருப்பது, இப்போதைக்கு காவி முகாம் அதிருப்தியாளர்களின் கைகளை கட்டிப்போட்டிருக்கிறது. எனவே, உள்ளடிகள் செல்லுபடியாகவும் தற்போதைக்கு வாய்ப்பில்லை.

இனி வரும் நாட்களில், மோடி அலை - அதிருப்தி அலை என இரண்டில் எது சுனாமியாய் உயரும் என்பதே இந்த விநாடியின் மில்லியன் டாலர் கேள்வி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in