முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தாமதப்படுத்துகிறதா தமிழக அரசு? : பரபரப்பூட்டும் பின்னணி தகவல்


முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தாமதப்படுத்துகிறதா தமிழக அரசு? : பரபரப்பூட்டும் பின்னணி தகவல்

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி வேண்டி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை அரசு தரப்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், எஸ்.பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்கள், அவருக்குத் தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது சுமார் 13 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் பல்வேறு சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும், எஸ்.பி.வேலுமணி செய்த டெண்டர் முறைகேடுகளில் அரசு அதிகாரிகள் அவருக்கு உடந்தையாக இருந்ததாகவும்,, 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட சென்னை மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தகுந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரிய வந்தது.

அதுமட்டுமன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டெண்டர் முறைகேட்டில் பங்கிருப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளதாகக் கூறியதுடன் அவர்களையும் வழக்கில் சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் என 2021 நவம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த கடிதத்திற்கு இதுவரை தமிழக அரசு சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அந்த கடிதத்தில் முன்னாள் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கோவை மாநகராட்சி ஆணையர் விஜய் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள் மதுசூதனன் ரெட்டி, கந்தசாமி உள்ளிட்டோரின் பெயர்களைச் சுட்டிக்காட்டி அவர்களுக்கு டெண்டர் முறைகேட்டில் உள்ள தொடர்பு என்ன என்பதை அக்கடிதத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கி கூறியுள்ளதாக தெரிகிறது.

மேலும் அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 7 சாலைகளின் சீரமைப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளுக்காக 13.6 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்ட நிலையில், மதிப்பிடப்பட்ட அளவிலிருந்து டெண்டர் மதிப்பு உயர்த்தப்பட்டதும், கட்டணங்கள் மற்றும் பணிகளின் அட்டவணையுடன் ஒப்பிடும்போது, அதிகப்படியான விகிதங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டு மாதங்களாகியும் எஸ்.பி.வேலுமணி டெண்டர் தொடர்பான முறைகேட்டில் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அரசு அனுமதி வழங்காதது அரசியல் வட்டாரத்தில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in