ஆயிரக் கணக்கில் காலியாய் கிடக்கும் ஆசிரியர் பணியிடங்கள்!

என்ன செய்கிறது பள்ளிக் கல்வித்துறை?
பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறை

“பள்ளிக் கல்வித் துறையில் அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் திமுக ஆட்சியிலாவது சரியாகும் என நினைத்தால் ஏமாற்றமே மிச்சம்” என்று புலம்புகிறார்கள் கல்வியாளர்கள். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, தலைமையாசிரியர்கள் இல்லாத பள்ளிகள், தேர்வில் குளறுபடி, சரியான திட்டமிடல் இல்லாத நிலை என பள்ளிக்கல்வித்துறை தடுமாறிக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் பதவி நீக்கப்பட்டு இயக்குநருக்கான அதிகாரத்தையும் ஆணையருக்கே வழங்கப்பட்டது. அப்போதே இதை ஆட்சேபித்தவர்கள், “அனுபவம்மிக்கவர்களால் மட்டுமே பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க முடியும். இயக்குநரால் மட்டுமே அமைச்சருக்கும் ஆசிரியர்களுக்கும் பாலமாக விளங்க முடியும்” என வலியுறுத்தினர். இதை அப்போது காதில் வாங்காத அரசு, பள்ளிக் கல்வித் துறை பல தடுமாற்றங்களைச் சந்தித்த பின்னால் தற்போது மீண்டும் இயக்குநர் பொறுப்பைக் கொண்டு வந்துள்ளது என்கிறார்கள் கல்வியாளர்கள்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது ஆசிரியர் பற்றாக்குறை. அரசாணை எண்: 525/27.12.1997-ன் படி, பள்ளிகளில் 40 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மேல்நிலைப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 60 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற சூழல் இருக்கிறது.

குறைவான மாணவர் சேர்க்கை உள்ள சில அரசுப் பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருக்கிறார் என்றாலும், கூடுதல் மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்கிற எண்ணம் பள்ளிக்கல்வித்துறைக்கு இல்லை. குறிப்பாக, இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற முக்கியமான பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லாமல் வேறு பாட ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தும் அவலம் நடப்பதாக ஆசிரியர் சங்கங்களே குற்றம்சாட்டுகின்றன.

மேலும், தமிழகத்தில் 670 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் சுமார் 435 உயர்நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. நடுநிலைப் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் மேல்நிலை, உயர்நிலை, ஆரம்பப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அந்தச் சங்கங்கள் ஆதங்கப்படுகின்றன.

இது குறித்து ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸிடம் பேசினோம், ‘’இதே பிரச்சினை அதிமுக ஆட்சியிலும் இருந்தது. இதற்காக நாங்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்தோம்; எந்தப் பலனும் கிடைக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகாவது எங்களுக்கு விடியல் ஏற்படும் என நினைத்தோம். ஆனால், அதுவும் நடக்கவில்லை. பல பள்ளிகளில் ஒரு ஆசிரியரே பல பாடங்களை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. அந்த அளவுக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதுவும் பல பள்ளிகளில் தலைமையாசிரியர்களே இல்லாத நிலை நீடிக்கிறது.

இரா.தாஸ் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்
இரா.தாஸ் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்

இதுபற்றி அரசு தரப்பில் கேட்டால் நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டுகிறார்கள்; அது ஏற்புடையது கிடையாது. அரசாங்கம் இந்த விவகாரத்தில் கொள்கை முடிவெடுக்க வேண்டும். அப்போதுதான் இதற்குத் தீர்வு கிடைக்கும். அதிமுக ஆட்சியில் எங்களை அழைத்துப் பேசமாட்டார்கள். ஆனால், இவர்கள் அழைத்துப் பேசுகிறார்கள். பேசினால் மட்டும் போதாது. தேர்தலின் போது எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முன்னாள் கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கேட்டபோது, ‘’ தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துவிட்டது. எங்களது ஆட்சியில் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 52 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது, 48 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழ் பாடத்தில் மாணவர்கள் அதிகமாக தோல்வியைச் சந்திக்கிறார்கள் என்றால் என்ன காரணம் என்பதை கல்வி அமைச்சர் சிந்திக்க வேண்டும்.

கல்வி அமைச்சர் முழு நேர கல்வித்துறை அமைச்சராக இல்லை. முழு நேர உதயநிதி ரசிகர் மன்ற வேலைகளில் ஈடுபட்டுவிட்டு பகுதி நேரமாகத்தான் தனது துறையைக் கவனிக்கிறார். இவ்வளவு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், அமைச்சர் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. நாட்டிலேயே தமிழகம் தான் கல்வித்துறையில் பின்னோக்கிச் செல்வதாக பல்வேறு கள ஆய்வுகள் சொல்கின்றன. இனியாவது அமைச்சர் இதையெல்லாம் கருத்தில் கொள்ளவேண்டும்’’ என்றார்.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, “ மாணவர்களின் நலனே முக்கியம் என பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு முற்போக்குத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், சில நேரங்களில் அதற்கு நீதிமன்ற வழக்குகள் முட்டுக்கட்டையாக வந்துவிடுகின்றன. யாரோ சிலர் தங்களது சுயநலத்திற்காக போடப்பட்ட வழக்குகள் தான் தற்போது ஆசிரியர் நியமன விவகாரத்தில் வில்லங்கமாக வந்து நிற்கிறது.

கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011-ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஆசிரியர்கள் தரப்பில் நீதிமன்றத்தை நாடினார்கள். இந்த வழக்கில் அரசுக்கு ஆதரவாக தனி நீதிபதி தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்கள்.

அந்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, ’2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம்’ என உத்தரவிட்டது. அத்துடன், ‘ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை’ எனவும் தெரிவித்த நீதிபதிகள், ‘ஆனால், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்’ என தீர்ப்பளித்தனர். நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற தமிழக அரசின் விதியை ரத்து செய்த நீதிபதிகள், பதவி உயர்வுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் என தெளிவுபடுத்தியுள்ளனர். இதனை எதிர்த்து பள்ளிக்கல்வித் துறை மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளது.

எனினும் வழக்குகளால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் சட்டப் போராட்டங்களையும் நடத்தி வருகிறோம். தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14,019 காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்பப்பட்டது.  எனவே, இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த பழியையும் பள்ளிக் கல்வித்துறை மீது போடுவது நியாயமில்லை. மத்திய அரசின் சட்டதிட்டங்கள், அதனைத் தாண்டி நீதிமன்ற வழக்குகள் இத்தனையும் உள்ளன’’ என்றனர்.

தேசத்தின் மனித வளத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. எனவே, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் இருக்கும் சட்டச் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு உரிய தீர்வுகண்டு காலிப் பணியிடங்களில் உடனடியாக ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித்துறை செம்மையாக செயல்பட அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in