அரசியல் நாகரிகத்தை குலைக்கிறாரா அண்ணாமலை?

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழக அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அனைவருமே அண்மைக்காலமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அரசியல் தரம் தாழ்ந்துவருவதாக பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி கூறுகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருப்பவர்கள் அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிப்பார்கள். அதேநேரத்தில் மற்ற கட்சிகளின் தலைவர்களை விமர்சிக்க இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களையும், நான்காம் தர பேச்சாளர்களையும் வைத்திருப்பார்கள். அவர்கள்தான் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பிற கட்சிகளின் தலைவர்கள் மீது விமர்சனங்களை முன்வைப்பார்களே தவிர கட்சித் தலைவர்கள் தரம்தாழ்ந்து பேசியதில்லை; நடந்துகொண்டதில்லை.

இதற்கு மாறாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரடி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். கருத்துரீதியான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைக்கலாம், என்றபோதும் அதைத்தாண்டி தனிமனித தாக்குதல்களை நடத்துகிறார் அண்ணாமலை. இதனால், ஐபிஎஸ் படித்த ஒரு அதிகாரியின் அரசியல் தரம் நான்காம் தர அரசியல்வாதியின் அளவுக்கு இறங்கியிருப்பதாக அரசியலில் விமர்சிக்கப்படுகிறது.

பாஜக தலைவராக நியமிக்கப்படும் முன்பே 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலைக்கு பல இடங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் அவர் நுழைய முடியாத நிலையும் ஏற்பட்டது. அதற்கெல்லாம் காரணம் கரூர் மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் செந்தில்பாலாஜி தான் என்று கருதிய அண்ணாமலை அப்போதே தனது நேரடி தாக்குதலை தொடுத்தார்.

“தூக்கிப் போட்டு மிதித்துவிடுவேன்... அடிச்சுப் பல்லையெல்லாம் உடைத்து விடுவேன்” என்று ஒரு பாமர மனிதராக அங்கே அவர் கோபப்பட்ட காட்சியை உலகமே காணொலி வழியாகக் கண்டது. ஆனால், இதுதான் அண்ணாமலையின் அதிரடி அரசியல்பாணி என்று அதை பாஜககாரர்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். அதற்கான விளைவை அந்த தேர்தலில் அறுவடை செய்தார் அண்ணாமலை. அந்தக் கோபத்தை மனதில் வைத்திருந்த அவர், அண்மையில் மின்சார வாரியத்தில் ஊழல் நடந்திருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராகக் குற்றம் சாட்டினார். அதற்கு, 24 மணி நேரத்தில் அதற்கான ஆதாரங்களைத் தருமாறு செந்தில் பாலாஜி கெடு விதித்தார். ஆனால், இதுவரை அண்ணாமலையால் அந்த ஆதாரத்தைக் கொடுக்கமுடியவில்லை.

திமுகவிடம் மட்டுமல்லாது பத்திரிகையாளர்களிடமும்கூட சில நேரங்களில் அதே பாணியைத்தான் கையாள்கிறார் அண்ணாமலை. கடந்த மே மாதத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி கேட்ட செய்தியாளரை, “உங்களுக்கு அறிவாலயத்தில் இருந்து 200 ரூபாய் வந்து விடும்” என்று நேரடியாகத் தாக்கினார். அந்த செய்தியாளர் விடாமல் தொடர்ந்து கேள்விகளை கேட்க, நானூறு, ஐநூறு, ஆயிரத்து ஐநூறு என்று ஏலம் போட்டுக்கொண்டே போனார். இறுதியில், “அறிவாலயத்தில் உங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து விடுவார்கள் கவலைப்படாதீர்கள்” என்று தரம்தாழ்ந்தார் அண்ணாமலை.

இன்னொரு முறை, “நீங்கள் எனக்கு பத்திரிகை சுதந்திரம் குறித்து பாடம் எடுக்க வேண்டியதில்லை” என்று தன்னிடம் கேள்விகேட்ட பத்திரிகையாளரைப் பார்த்து கையை நீட்டி ஆவேசத்துடன் அண்ணாமலை பேசியதையும் தமிழ் கூறும் நல்லுலகம் பார்த்தது. தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு மீதும் அவர் தாக்குதல் நடத்தத் தயங்கவில்லை. தமிழக சட்டம் - ஒழுங்கு குறித்து பேசியபோது, “போட்டோ எடுக்கத்தான் அவர் லாயக்கு” என்று சைலேந்திரபாபுவை அண்ணாமலை தனிப்பட்ட ரீதியில் விமர்சித்தார்.

அதற்கெல்லாம் உச்சமாகத்தான் தற்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விஷயத்தில் நடந்து கொள்கிறார் அண்ணாமலை. மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதை வைத்து அரசியலாக்க அவர் திட்டமிட்டிருந்ததாக பரவிய ஆடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதே சம்பவத்தை வைத்து அடுத்து நடந்தது அதைவிட அதிர்ச்சி தரக்கூடியது.

ட்விட்டரில் பழனிவேல் தியாகராஜன் செய்திருந்த ட்விட்டுக்கு அண்ணாமலை அளித்த பதில்தான் தற்போது மிகப்பெரிய அளவில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் ’வீரமரணம் அடைந்தவரின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசியக்கொடி இருந்த காரின் மீது செருப்பு வீச வைப்பது, அப்பட்டமாக பொய் சொல்வது, அரசியல் காரணத்துக்காக மக்கள் உணர்வுகளை தூண்டுவது, ஆடு போன்ற அற்பமானவர்களின் மனநிலை குறித்து உயர் நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது. இவர்கள் தமிழ் சமுதாயத்தின் சாபக்கேடு’ என்று பதிவிட்டிருந்தார்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

இதற்கு அண்ணாமலையின் பதில்தான் சீமானையும் அவருக்கு எதிராகக் கோபப்பட வைத்தது. ”தம்பி அண்ணாமலை அப்படியெல்லாம் பேசக்கூடாது” என்று அண்ணாமலைக்கு சீமான் அறிவுரை சொன்னார். அண்ணாமலையின் அந்த ட்விட்டர் பதிவில், 'முன்னோர்களின் இனிஷிலுடன் வாழும் உங்களாலும் உங்கள் கூட்டாளிகளாலும் சுயமாக உருவான விவசாயியின் மகனை ஒரு நபராக ஏற்கமுடியாது. அரசியலுக்கும் நமது மாநிலத்துக்கும் நீங்கள் சாபக்கேடாக உள்ளீர்கள். இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன். என்னுடைய செருப்புக்குக்கூட நீங்கள் பெருமானமில்லை’ என்று மிக காட்டமாகவே இருந்தது பதில்.

’’பொதுவாக செருப்போடு ஒப்பிட்டுப் பேசுவது மிகமிக அவமரியாதையான விஷயம் என்பது அண்ணாமலைக்கு தெரியாமல் இல்லை. ஆனால், செருப்பை வீசவைத்து அதில் அரசியல் செய்ய முயற்சிப்பதும், பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த தமிழக நிதியமைச்சரை செருப்புடன் ஒப்பிட்டு விமர்சிப்பதும் அவரது அரசியல் தரம் இவ்வளவுதான் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டது” என்கிறார்கள் திமுகவினர்.

இதுகுறித்து தருமபுரி திமுக எம்.பி-யான செந்தில்குமார் தனது ட்விட்டர் பதிவில், 'விரக்தியால் இப்படி கூறியுள்ளார் அண்ணாமலை. அவரது செயல்பாடுகள் அவர்களது கட்சித் தலைமைக்கு திருப்தியை தரவில்லை. எனவே, அவரை கண்காணிக்க மத்திய இணை அமைச்சரை நியமித்து அவருக்கான அதிகாரங்களை குறைத்துள்ளனர். எனவே, தன் மீது தலைமை கொண்டுள்ள அதிருப்தியை போக்கும் வேலையை செய்கிறார். கட்சியின் மூத்த தலைவர்கள் பெரிய குழியை அண்ணாமலைக்கு தோண்டி வருகின்றனர்’ என்று பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலையின் சொல்லும் செயலும் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பினாலும் அவர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘’ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவதற்கு நான் இயேசு கிடையாது. அதற்கான தக்க பதிலடி கொடுப்பேன். மரியாதையான அரசியலை திமுக செய்தால் நானும் இரட்டிப்பு மரியாதையை வழங்குவேன். பிடிஆருக்கு பதிலடி கொடுத்ததில் எந்தத் தவறும் கிடையாது” என்று தன்னை நியாயப்படுத்துகிறார்.

இதையெல்லாம் பார்த்தால், “நான் இதுவும் பேசுவேன்... இதற்கு மேலும் பேசுவேன்” என்று அண்ணாமலை சொல்வதாகத்தான் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in