அதிரும் ஆளுநர் விவகாரம்: மு.க.ஸ்டாலின், பழனிசாமி நிலைப்பாடு சரியா?

ஒரு வரலாற்றுப் பார்வை
அதிரும் ஆளுநர் விவகாரம்:  மு.க.ஸ்டாலின், பழனிசாமி நிலைப்பாடு சரியா?

தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற திமுக எம்பி-க்களின் கோஷம், ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக அரசு புறக்கணித்தது போன்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டமும், அவரது காரை குறிவைத்து கொடி, கம்பு வீச்சும் நடந்திருப்பது இந்தப் பிரச்சினை பற்றி இந்த வாரமும் பேசவேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கிறது. பழைய வரலாறுகளையும் கிளறிப் பார்க்க வேண்டிய சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடும் ஆளுநர்களும்

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி (காங்கிரஸ்) ஆட்சிசெய்த காலத்தில், முரண்பாட்டுக்கு வேலையே இல்லாமல் இருந்தது. புதிதாக வளர்ந்த திமுகதான், ‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?’ என்று முதலில் கேட்டது. கருப்புக்கொடி காட்டியது. அதே திமுக ஆளுங்கட்சியான பிறகு, அரசியலமைப்புச் சட்டத்தை மதித்தாக வேண்டிய காரணத்தால், அந்த ஆளுநர் கையாலேயே பதவிப்பிரமாணமும் எடுத்துக்கொண்டது. அப்படி, அண்ணாவுக்கும், அவர் மறைவுக்குப் பிறகு கருணாநிதிக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தவர் உஜ்ஜல் சிங்.

தேசிய கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து இன்றுவரையில் தமிழ்நாடு 15 ஆளுநர்களையும், 6 பொறுப்பு, தற்காலிக ஆளுநர்களையும் பார்த்துவிட்டது. குடியரசுத் தலைவரின் பிரதிநிதி என்று சொல்லப்பட்டாலும், மத்தியில் ஆளும் கட்சியின் பிரதிநிதியாகவே அவர்கள் செயல்பட்டார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. ஆனால், ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் மாநில நிர்வாகத்தில் அதிகம் மூக்கை நுழைத்ததும் இல்லை, மாநில அரசின் விருப்பத்துக்கு மாறாக செயல்பட்டதும் இல்லை.

இன்னும் சொல்லப் போனால், சில ஆளுநர்கள் தமிழக முதல்வர்களுடன் ஒட்டி உறவாடியதும் உண்டு. 1971-ல் ஆளுநராகப் பொறுப்பேற்ற கே.கே.ஷா, தன்னுடைய இன்ஷியல்களின் (கே.கே.) விரிவாக்கம் கலைஞர் கருணாநிதியைக் குறிப்பது போலவே இருக்கிறது என்று பொதுமேடையில் பேசிய கூத்தெல்லாம் நடந்திருக்கிறது. அப்படிப் பேசிய அவரே பிற்பாடு இந்திரா காந்தியின் வலியுறுத்தலால், கருணாநிதியின் ஆட்சியை கலைப்பதற்கான பரிந்துரையில் கையெழுத்திட்ட கதையையும் நாடு பார்த்தது.

1980-ல் ஆளுநரான சாதிக் அலிக்கும், அப்போதைய முதல்வர் எம்ஜிஆருக்கும் கூட நல்ல உறவே இருந்தது. பொதுவாகவே மத்திய அரசுக்கு மரியாதை கொடுக்கும் எம்ஜிஆர், ஆளுநருக்கும் உரிய மரியாதை கொடுக்கவே செய்தார். ஆனாலும், அவரது ஆட்சியை கவிழ்க்கும் கோப்பில் கையெழுத்திட்டார் சாதிக் அலி.

பர்னாலாவுடன் கருணாநிதி...
பர்னாலாவுடன் கருணாநிதி...

1989-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மத்தியில் தேசிய முன்னணி வெற்றிபெற்று வி.பி.சிங் பிரதமரானதால், அந்தக் கூட்டணி தலைவர்களில் ஒருவரான அகாலிதளத்தைச் சேர்ந்த சுர்ஜித்சிங் பர்னாலா ஆளுநரானார். அவர்களுக்குள் நல்ல உறவும், தனிப்பட்ட நட்பும் இருந்தது. தேசிய முன்னணி குழப்பத்தில் சந்திரசேகர் பிரதமரானதும், தமிழகத்தில் ஆட்சியை கலைக்கச் சொன்னார். பர்னாலா மறுத்தார். ஆளுநரின் பரிந்துரை இல்லாமலேயே ஆட்சியை கலைக்க முடியும் என்று சட்டத்தில் ஒரு வழியைக் கண்டுபிடித்து ஜனாதிபதியே ஆட்சியை கலைத்துவிட்டுப் போய்விட்டார். பர்னாலாவின் அந்த உறுதியைப் போற்றும் வகையில், பிற்காலத்தில் ஐ.மு கூட்டணி அரசு அமைந்தபோது பர்னாலாவையே ஆளுநராக நியமிக்கும்படி கருணாநிதி கேட்டுக்கொண்டதும், அப்படியே அவர் நியமிக்கப்பட்டதும் வரலாறு.

ஆளுநர் வழி அரசியல்

பொதுவாக ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்ப்பாகத்தான் பாவிக்கப்படுகிறது என்றாலும், அது சர்வ அதிகாரம்பெற்ற பதவியாக மாறிய காலமும் உண்டு. இந்திரா காந்தியால் அவசர நிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்ட, நெருக்கடி நிலைக் காலத்தில் தமிழக ஆளுநராக இருந்த மோகன்லால் சுகாதியாவுக்கு அப்படியொரு அதிர்ஷ்டம் வாய்த்தது. இதேபோல எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்ட நேரத்தில், உடனே தேர்தலை நடத்தாத பிரதமர் ராஜீவ்காந்தி அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்க்கத் திட்டமிட்டார். விளைவாக, 6 மாதத்தில் முடிந்திருக்க வேண்டிய ஆளுநர் ஆட்சி, ஓராண்டு காலம் வரையில் நீட்டிக்கப்பட்டது.

பொதுவாகவே மாநிலத்தில் வலிமை குறைந்த அரசும், மத்தியில் மிருகபல ஆட்சியும் இருக்கிறபோது ஆளுநர்களின் தலையீடு அதிகமாக இருப்பதே கடந்தகால வரலாறாக இருந்திருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பன்வாரிலால் புரோகித் மாவட்டந்தோறும் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள முயன்றது அதன் ஒரு பகுதியே. இந்தச் சம்பவத்தை, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு காங்கிரசை வளர்ப்பதற்காக ராஜீவ்காந்தி முயன்ற நிகழ்வோடு ஒப்பிடலாம். ஆனால், எதிர்க்கட்சியான திமுகவின் கடும் எதிர்ப்புப் போராட்டங்கள் புரோகித்தைப் புறமுதுகிடச் செய்தது.

சென்னா ரெட்டியும், ஆர்.என்.ரவியும்...

தமிழக அரசியலில் முதல்வர்களுடன் கடுமையாக மல்லுக்கட்டிய ஆளுநர்கள் என்று இருவரைச் சொல்லலாம். ஒருவர் சென்னா ரெட்டி, மற்றொருவர் இன்றைய ஆர்.என்.ரவி. இன்றைய தமிழக அரசியல் சூழலில் மீண்டும் சென்னா ரெட்டி ஜெயலலிதா மோதல் விவகாரம் பேசப்படுகிறது. ஆனால், சென்னா ரெட்டியை, இன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஒப்பிடுவதே தவறு. இவரைப் போலவே அவரும் மேலிருந்து நியமிக்கப்பட்ட ஆளுநர்தான்தான் என்றாலும், அவர் சாதாரண நபரோ, ஓய்வுபெற்ற ஜால்ரா அதிகாரியோ கிடையாது. சுதந்திரப் போராட்ட காலத்திலேயே களத்தில் நின்ற போராளி அவர்.

ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் குரல் கொடுத்து, பிறகு ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்ததும் அந்தத் தொகுதியில் எம்பி, எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரெட்டி. ஆந்திரா உருவாகும்முன் தனி மாகாணமாக இருந்த ஹைதராபாத் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர் சென்னா ரெட்டி.

அதை ஆந்திராவுடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிய சென்னா ரெட்டியை, தொடர்ந்து இருமுறை ஆந்திர அமைச்சராக்கி அமைதிப்படுத்தியது காங்கிரஸ். கட்சியில் தன்னுடைய முக்கியத்துவம் குறையும் போதெல்லாம் தனி தெலங்கானா கோரிக்கையை கையில் எடுப்பார் என்பதால், இவருக்குரிய முக்கியத்துவம் குறையாமல் பார்த்துக்கொண்டது காங்கிரஸ் தலைமை.

1967-ல் இவரை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார் இந்திரா காந்தி. ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின்போது, மசூதி ஒன்றில் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் இவர் பேசியதை ஆதாரமாகக்கொண்டு ஆரிய சமாஜம் போட்ட வழக்கில் அந்த தேர்தலே செல்லாது என்று அறிவிக்கப்பட்டதுடன், 6 ஆண்டுகள் இவர் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தது உயர்நீதிமன்றம். அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

சென்னா ரெட்டி என்ன சசிகலாவா? வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதற்கு. மறுபடியும் தெலங்கானா பிரச்சினையை கையிலெடுத்தார். அதற்காக ‘தெலங்கானா பிரஜா ஸமிதி’ என்கிற அமைப்பையும் ஏற்படுத்தினார். இன்றைய தெலங்கானா பகுதியில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் 10-ல் வென்றது அவரது கட்சி. பார்த்தார், இந்திராகாந்தி. அவரை டெல்லிக்கே அழைத்து அவரது கட்சியை காங்கிரசுடன் இணைத்துக் கொண்டார். 6 வருடம் தேர்தலிலேயே போட்டியிடத் தடைவிதிக்கப்பட்ட நபருக்கு என்ன பதவியைக் கொடுப்பது என்று மண்டையைப் போட்டு உடைத்து, நியமனப் பதவிக்குத் தடையில்லை என்பதை கண்டுபிடித்தார் இந்திரா. உத்தர பிரதேச ஆளுநரானார் சென்னா ரெட்டி. அடுத்து பஞ்சாப் ஆளுநர், ஆந்திர முதல்வர், ராஜஸ்தான் ஆளுநர் என்று பல பதவிகளைப் பார்த்தவரை ஜெயலலிதாவை அடக்குவதற்காக சென்னைக்கு அனுப்பிவைத்தார் பிரதமர் நரசிம்மராவ்.

ஜெயலலிதாவிடம் முடியுமா? ஒரு கட்டத்தில் அதைப் புரிந்துகொண்டு பின்வாங்க நினைத்த சென்னா ரெட்டி, சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சைக் கேட்டு ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடர அனுமதி கொடுத்து பிரச்சினையில் மாட்டிக்கொண்டார். அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் போட்ட ஜெயலலிதா, “ஆளுநர் சம்பந்தப்பட்ட சில கசப்பான உண்மைகளை வெளியிடுவது மரபல்ல என்பதால் இவ்வளவு நாள் பேசாமல் இருந்தேன். இப்போது சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ஆளுநராக சென்னா ரெட்டி நியமிக்கப்பட்ட புதிதில் அவரை அடிக்கடி சந்தித்தேன். ஆனால், 1993 ஆகஸ்ட்டில் அவரைச் சந்திக்கச் சென்றபோது, என்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டார். தகாத வார்த்தைகளைப் பேசி என்னை அவமானப்படுத்தினார்” என்று ஒரு குண்டு போட்டார். சப்த நாடியும் ஒடுங்கிப்போனது சென்னா ரெட்டிக்கு. 50 ஆண்டு பொதுவாழ்வில் இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை அவர் எதிர்கொண்டதே இல்லை. உடைந்துபோனார். தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோதே இறந்தும் போனார் சென்னா ரெட்டி.

வரலாறு என்ன சொல்கிறது என்றால் சென்னா ரெட்டி சிங்கம் என்றால், ஆர்.என்.ரவி சிறு நரி.

ஸ்டாலின், பழனிசாமி நடைமுறை சரியா?

இன்றைய கதைக்கு வருவோம். தமிழக ஆளுநர் விஷயத்தில் மு.க.ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் நடந்துகொள்ளும் முறை சரிதானா? 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, முதல் முறையாக ஆளுநரைப் பார்த்த பார்வைக்கும், கடைசியாகப் பார்த்த பார்வைக்கும் நிறைய மாற்றங்கள் இருக்கிறது. ஆட்டுத் தாடியாகப் பார்த்தவர், தன் இறுதிக்காலத்தில் அரசியலமைப்பின் தவிர்க்க முடியாத அங்கம் ஆளுநர் என்பதைப் புரிந்துகொண்டே செயல்பட்டார். மூன்று முறை ஆட்சியை இழந்ததன் மூலம் கிடைத்த படிப்பினை அது. சமீபத்தில்கூட எச்.ராஜா ஒரு பதிவிட்டிருந்தார். மத்திய அரசின் அதிகார வரம்பு, எல்லை என்ன என்பதை திமுக உணர்ந்த ஆண்டுகள் 1976, 1991 என்று.

எச்.ராஜா பயமுறுத்தினாலும் ஸ்டாலின் பயப்படாததற்கு முதல் காரணம், அவர் முதல் முறை முதல்வராகியிருக்கிறார். அந்தக் காலம்போல இப்போது எடுத்தேன் கவிழ்தேன் என்று எந்த ஆட்சியையும் கவிழ்க்க முடியாது. அதைவிட முக்கியம், இப்போது ஆட்சியைக் கலைத்தாலும் அடுத்த தேர்தலில் நாம்தான் வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கை மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது. காரணம், ஜெயலலிதா போல தனிப்பட்ட காரணங்களுக்காக நாம் ஆளுநருடன் மல்லுக்கட்டவில்லை, மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக இருப்பதால்தான் ஆளுநருடன் மல்லுக்கட்ட வேண்டியதிருக்கிறது என்ற புரிதல் மக்களுக்கு இருப்பதாக அவர் நம்புகிறார். கூடுதலாக, பாஜகவுக்கு எதிரான கட்சிகள், முற்போக்கு சக்திகளின் ஆதரவு அவருக்கு முழுமையாக இருக்கிறது.

கருணாநிதி மத்திய அரசுக்கு பயந்ததைப் பார்த்து வளர்ந்த ஸ்டாலின் இன்று கர்ஜிக்கிறார். ஆனால், ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் ருத்ரதாண்டவம் ஆடிய ஜெயலலிதாவை அதே அவையில் உட்கார்ந்து பிரமிப்பாகப் பார்த்த எடப்பாடி பழனிசாமியோ, இன்று பயந்து நடுங்குகிறார். ஆளுங்கட்சியாக இருந்தபோதாவது பாஜகவின் தயவு தேவைப்பட்டது. எனவே, பன்வாரிலாலில் தலையீட்டைத் தடுக்கவில்லை என்று சொல்லலாம். ஆனால், இன்று இழப்பதற்கு ஏதுமில்லை என்கிறபோது எதற்காக பழனிசாமி பயப்படுகிறார்? பாஜகவுடன் அவர் ஒன்றும் அவ்வளவு நெருக்கமாக இல்லை என்பது ஊரறிந்த விஷயம்தானே? பிறகேன் மத்திய அரசு என்ன செய்தாலும் அதற்கு ஆமாம் போட வேண்டும்? ஆளுநர் வாகனம் மீது கல்லோ, கொடியோ படவில்லை என்று ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியே சொன்னாலும்கூட, தமிழ்நாட்டில் ஆளுநருக்கே பாதுகாப்பில்லை என்று சொல்லி எதற்காக வெளிநடப்பு செய்ய வேண்டும்? என்று நிறைய கேள்விகள் பழனிசாமியை நோக்கி விழுகின்றன.

வெறும் கவன ஈர்ப்புக்காகக்கூட பழனிசாமி இதைச் செய்யலாம். சென்னா ரெட்டியை ஜெயலலிதா எதிர்த்தபோது, கருணாநிதி சென்னா ரெட்டியின் பக்கம்தானே நின்றார்? அப்படியான அரசியல் நிலைப்பாடுதான் இது என்று அதிமுகவினர் சொல்லலாம். ஆனால், ஆளுநர் காலுக்குக் கீழே போட்டு வைத்திருக்கிற மசோதாக்களில் பல அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டவைதான் என்கிற புரிதலும், தன்மான உணர்ச்சியும் பழனிசாமிக்கு இருந்தால் அவர் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே ஆக வேண்டும். சிங்க நிகர் தலைவி வளர்த்த பிள்ளை, சிறு நரிக்குப் பயப்படுவது மலினமாகவே பார்க்கப்படும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in