பற்றி எரியும் பெட்ரோல் குண்டுகள்... பாஜகவின் பாதை சரிதானா?

பற்றி எரியும் பெட்ரோல் குண்டுகள்... பாஜகவின் பாதை சரிதானா?
கோவையில் பாஜகவினர் மறியல்...

எதிர்கட்சிகள் என்றால் ஆளும்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் அதன் மூலம் தங்களை வளர்த்துக் கொள்வதும் வழக்கம் தான். அப்படித்தான் தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் திமுக எதிர்கட்சியாக இருந்தபோது ஆளும்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி அரசியல் அரங்கில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டது. இதுகுறித்து அப்போது விமர்சனங்கள் வந்தபோது, “எதிர்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?” என்று கேட்டார் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின். 

தற்போது பிரதான எதிர்கட்சியான அதிமுக உட்கட்சி பிரச்சினையால் சோர்ந்து போயிருக்க, பாஜக தன்னை எதிர்கட்சியாக காட்டிக்கொள்ள கடும் பிரயத்தனம் செய்கிறது. அதற்காக, வடமாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கவும் கவிழ்க்கவும் தங்களுக்கு உதவிய மத துவேசம், மத மோதல்களை தமிழ்நாட்டிலும் தூண்டிவிட பாஜக வெளிப்படையான முயற்சிகளை மேற்கொண்டிருப்பது வேதனையளிப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.  

நாடு முழுவதும் ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பைக் குறிவைத்து என்ஐஏ நடத்திய ஆபரேஷனுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இந்து முன்னணி, பாஜகவினரின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தன. இது மேலும் பரவாமல் தடுக்க போலீஸார் கொடி அணிவகுப்பு, குண்டர் சட்ட எச்சரிக்கை உட்பட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். 

பொள்ளாச்சி உள்ளிட்ட சில இடங்களில் பெட்ரோல் குண்டு தாக்குதலில் ஈடுபட்டதாக முஸ்லிம்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால், பல இடங்களில் யார் இதைச் செய்தார்கள் என்பது இன்னும் புலப்படவில்லை.

இந்த இடத்தில்தான்  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்தைப் பொருத்திப்பார்க்க வேண்டியிருக்கிறது. ‘’தென் மாநிலங்களே தமது இலக்கென பாஜகவின் தலைவர்கள் கூறிவரும் நிலையில் அதற்கு அடித்தளமிடும் வகையில் தமிழ்நாட்டில் மதமோதல், கும்பல் வன்முறைகளை ஏற்படுத்த இந்துத்துவ இயக்கங்கள் முயல்கின்றனவோ என்ற ஐயம் வலுக்கிறது.

சீமான்
சீமான்

ஆங்காங்கே ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், வாகனம் எரிக்கப்பட்டதாகவும் வருகிற செய்திகள் கடந்த காலத்தையே நினைவூட்டுகின்றன. தாங்களே தங்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசி, தங்கள் வாகனத்தை எரித்து அரசியல் லாபம்பெற முயன்ற பாஜக நிர்வாகிகளின் முந்தைய செயல்பாடுகள் யாவும் சமகாலச் சான்றுகளாக இருக்க, அதன் தொடர்ச்சியாக இதுவும் இருக்கலாம் என்னும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை" என்று சீமான் கூறியிருக்கிறார். 

விசிக தலைவர் திருமாவளவனுக்கும் இதே ஐயம் எழுந்திருக்கிறது. ”தமிழகத்தில்  நடைபெற்றுவரும் பெட்ரோல் குண்டு வீச்சு ஏற்கத்தக்கது அல்ல. குற்றவாளிகள்  யாராக இருந்தாலும் அவர்களை கைதுசெய்து கடுமையான நடவடிக்கை எடுக்க  வேண்டும். பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் பாஜக  மற்றும் இந்து அமைப்புகள் இருக்க வாய்ப்புள்ளது. அதை காவல்துறை விசாரிக்க  வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார் திருமா. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட்டவர்களும் இதே ரீதியிலான கருத்தையே தெரிவித்திருக்கின்றனர்.

இவர்களின் இந்த சந்தேகத்துக்கு காரணமில்லாமல் இல்லை. திருப்பூர், திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் தாங்களே பெட்ரோல் குண்டுகளை வீசிக்கொண்டு பிறர் வீசியதாக கூறிய நிகழ்வுகள் கடந்தகாலங்களில் நடந்துள்ளன. அதே உத்தியை தற்போது பரவலாக்கி, இந்துக்கள் பிற மதத்தவரால் தாக்கப்படுகிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கி அதன்மூலம்  அரசியல் லாபம் பெற பாஜக முயற்சிப்பதாகவே இக்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 

அதற்கேற்றாற்போல்தான் அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களும் இருக்கின்றன. அண்ணாமலையின் பேச்சுகளும், செயல்களும் தமிழக அரசை குறைசொல்வதாகவும், ஆட்சிக் கலைப்பை நோக்கியதாகவுமே இருக்கிறது. ’’இது திமுக - பாஜக இடையேயான போர். ஒருத்தரையும் விடமாட்டோம். போலீஸ் தலையிட வேண்டாம்” என்று எச்சரிக்கும் அண்ணாமலை,  ”மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று பட்டவர்த்தனமாக பேசுகிறார். 

தமிழக ஆளுநரை சந்தித்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாகவும் சொன்னார் அண்ணாமலை.  இதனைத் தொடர்ந்து ஆளுநரும் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக நிலவரம் குறித்து ஆலோசித்து திரும்பினார்.  இவையெல்லாம் திமுக அரசை அச்சுறுத்தவும், தமிழ்நாட்டுக்கான தங்களின் அரசியல் அஜெண்டாவை நிறைவேற்றவும் பாஜக செய்துவரும் வேலைகளாக டீக்கடை வரைக்கும் பேசுகிறார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

பெட்ரோல் குண்டு வீச்சு சர்ச்சையைத் தொடர்ந்து தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தியும் அவமதித்தும் அடுத்தகட்ட பதற்றத்துக்கும் அடிப்போட்டிருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு,  முகத்தை சிவப்பு துணியால் மூடி அவமதிப்பு செய்யப்பட்டது. அத்துடன் செருப்பு மாலையுடன் ஆ.ராசா உருவப்படத்தில் கரும்புள்ளி வைத்து அண்ணா சிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னணியில்  கண்டமங்கலம் ஒன்றிய பாஜக செயலாளர் பிரகலாதன், பிரேம்குமார், அப்பு ஆகிய மூன்று பாஜகவினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கள்ளக்குறிச்சியில் கடை ஒன்றில் பிரதமரின் படத்தை வலுக்கட்டாயமாக ஒட்டிய பாஜகவினரை தட்டிக்கேட்ட கடைக்காரர் பாஜகவினரால் தாக்கப்பட்டார். மதுபாட்டில் வீசி அவரது கடை தாக்கப்பட்டது. இன்னும் சில இடங்களில் திக உள்ளிட்ட கட்சிகள் நடத்திய ஊர்வலங்களில்  இந்து அமைப்பினர் தலையிட்டு தகராறு செய்திருக்கிறார்கள். ஆ.ராசா உருவ படத்தை கொளுத்துகிறார்கள், ஊர்வலங்களையும், கூட்டங் களையும் இஷ்டத்துக்கு நடத்துகிறார்கள். “முடிந்தால் எங்கள் மீது கைவைத்துப் பாருங்கள்” என்று பகிரங்க சவால் விடுகிறார்கள்.

மொத்தத்தில், இவர்களது நோக்கம் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்ற தோற்றத்தை எப்படியாவது உருவாக்க வேண்டும் என்பதாகவே தெரிகிறது. ஆனால், அதற்கு திமுக அரசு இதுவரை இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் பாஜகவினரின் முயற்சிகள் தொடர்கின்றன.

வன்முறையை யார் கட்டவிழ்த்தாலும் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கி மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித்தர வேண்டியது ஆளும் கட்சியின் அதிகாரப் பொறுப்பு. அதேசமயம், சர்ச்சையான கருத்துகளை ஒரு கட்சியோ அதன் கூட்டணி தோழர்களோ கூறும்போது அதற்கு தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துவைக்க மாற்றுக் கட்சிகளுக்கு தார்மீக உரிமை இருக்கிறது. அப்படி பதில் கருத்துச் சொல்லாமல் வன்முறையைத் தூண்டிவிட்டு அதன் மூலம் மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடுவது எந்தக் கட்சிக்கும் அத்தனை நல்லதல்ல!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in