மெகா கூட்டணி: ஈபிஎஸ் நினைப்பது நடக்குமா?

மெகா கூட்டணி: ஈபிஎஸ் நினைப்பது நடக்குமா?

இதுவரை, உட்கட்சி பிரச்சினைகளை சமாளிப்பதற்கான உத்திகளை மேற்கொண்டு வந்த ஈபிஎஸ், தற்போது மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி வியூகம் குறித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்

ஆம், “நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. மெகா கூட்டணி அமைத்து அதிமுகவை பழையபடி வெற்றிபெற வைப்போம்” என்று நாமக்கல் கூட்டத்தில் உரக்கச் சொல்லி இருக்கிறார் ஈபிஎஸ்.

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தனி ஆவர்த்தனம் செய்வதாலும், எதிர்கொண்டு வரும் தொடர் தோல்விகளாலும் அதிமுக பலவீனப்பட்டுக் கிடக்கிறது என்று சொல்லப்படும் நிலையில், மெகா கூட்டணி அமைப்பது அதிமுகவுக்கு சாத்தியமா? அப்படி அமைந்தால் அதில் இடம்பெறும் கட்சிகள் எவையெவை? அதிலிருக்கும் சிக்கல்கள் என்ன என்பதெல்லாம் ஆராயப்பட வேண்டிய விஷயம். 

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்று ஈபிஎஸ் சொன்ன அடி மறைவதற்குள், “அதிமுக தலைமையில்தான் கூட்டணி” என்று பிரகடனம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி என பாஜக தரப்பில் பேசப்பட்டு வந்த நிலையில்... அதிமுகவை பாஜகதான் வழிநடத்துகிறது என்ற பேச்சுகள் மேலோங்கி இருக்கும் நிலையில், அதிமுக தலைமையில் கூட்டணி என்ற ஒத்திசைவுக்கு பாஜக வந்திருப்பதன் பின்னணியும் ஆராயத்தக்கது.

வெளிப்படையாக, அதிமுக தலைமையில் கூட்டணி என்று பாஜக தரப்பில் சொல்லப்பட்டாலும் உண்மையில் கூட்டணித் தலைமை என்பது பாஜகதான். அதற்கான வலுவும், செயலாக்கமும் அக்கட்சியிடம் தான் இப்போது இருக்கிறது. அதிமுக கூட்டணியை விட்டு 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக வெளியேறிய தேமுதிகவும்,  உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக விலகிய பாமகவும் அதிமுகவுக்கு இன்னமும் தூரத்தில் தான் இருக்கின்றன. மாறாக, இந்தக் கட்சிகள் இரண்டும் திமுகவுடன் இப்போது இணக்கம் பாராட்டுகின்றன. அதேசமயம் அவை பாஜகவிடம் பழைய நெருக்கம் குறையாமல் இருக்கின்றன. பாமகவையும், தேமுதிகவையும் மீண்டும் தங்கள் கூட்டணியில் நீட்டிக்க வைப்பது என்பது பாஜகவால் மட்டுமே முடியும் என்பது கடந்த காலம் கண்ட வரலாறு.   

இதுபோன்ற சூழலில் டி.டி.வி.தினகரனையும்  கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் அணி மேலும் வலுவாகும் என்று நம்பும் பாஜக, அதற்கான வேலைகளையும் முன்னெடுத்தே வருகிறது. எனினும், இதை இப்போதே பகிரங்கப்படுத்தினால் தேவையற்ற சலசலப்புகள் வரும் என்பதால் அடக்கிவாசிக்கிறது பாஜக. இப்போதைக்கு தினகரன் விஷயத்தில் அதிமுக தரப்பில் எதிர்ப்புகள் இருந்தாலும் கடைசி நேரத்தில் அதையெல்லாம் சரிசெய்து வழிக்குக் கொண்டுவரும் சூட்சுமமும் பாஜகவுக்கு தெரியும்.  

பாஜக எடுக்கும் இந்த முயற்சிக்கு ஆரம்ப நிலையிலேயே ஆதரவு தந்துவிட்ட தினகரன், ”திமுகவை வீழ்த்துவதற்காக அமைக்கப்படும் கூட்டணிக்கு நேசக்கரம் நீட்டத்தயார்” என்று இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார். இதுதவிர, தமாகா, புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவையும் பாஜகவுடன் நல்ல நட்பில் இருக்கின்றன. 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாரிவேந்தரின் ஐஜேகேயும் இம்முறை அங்கே நீடிக்க சாத்தியமில்லை. எனவே, வேந்தருக்கும் வேறு வழியில்லாததால் பாஜக அணியை நோக்கியே வரக்கூடும்.  

இதுதவிர, இன்னும் சில அமைப்புகளும் பாஜக - அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் மனநிலையில் இருக்கின்றன. ஆக, திமுக கூட்டணியைச் சமாளிக்க பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள், அமைப்புகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் பாஜகவும் அதிமுகவும் முழுமூச்சாய் இறங்கிவிட்டன. அதற்கான சமிக்ஞை தான் ஈபிஎஸ்ஸின் நாமக்கல் பேச்சு என்கிறார்கள்.  

பாஜக மெகா கூட்டணியைக் கட்டும் அதேநேரம், அவர்களையே பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் ஓபிஎஸ்ஸின் நிலை திரிசங்கில் நிற்கிறது. அவரையும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது பாஜக. ஆனால், அதற்குப் பிடிகொடுக்காமல் நழுவுகிறார் ஈபிஎஸ். அதனால், அந்தப் பிரச்சினையை தற்போதைக்குக் கிடப்பில் வைத்திருக்கிறது பாஜக. இந்த நிலையில், “டிடிவி தினகரனைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தால் சந்திக்கவும் தயார்” என்று ஓபிஎஸ் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. ஈபிஎஸ் ஏற்காவிட்டால் தினகரனின் அமமுகவிடன் கூட்டணி போட்டுக்கொள்ளவும் ஓபிஎஸ் தயாராய் இருப்பதையே இது காட்டுகிறது.

2019 மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளை தன்னிடம் வைத்துக் கொண்ட அதிமுக, பாமகவுக்கு 7 தொகுதிகளையும் பாஜகவுக்கு 5 தொகுதிகளையும்,  தேமுதிகவுக்கு 4 தொகுதி களையும் ஒதுக்கியது.  ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி. சண்முகம் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கிய அதிமுக, புதுச்சேரியை என்.ஆர்.காங்கிரஸுக்கு விட்டுக்கொடுத்தது. 

ஆக, கடந்த மக்களவைத் தேர்தலின்போதே அதிமுக கூட்டணி மெகா கூட்டணியாகத்தான் இருந்தது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தும் சில கட்சிகள் தங்கள் பக்கம் வரலாம் என்று நினைக்கிறது அதிமுக கூட்டணி.  அதற்கான வேலைகளையும் பாஜக பக்கா பிளான்போட்டுச் செய்து வருகிறது.

திமுக கூட்டணியில் இருந்து புதிய கட்சிகள் வரும்பட்சத்தில் அதிமுக தனக்கான இடங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டி இருக்கும். கடந்த முறையைப் போல் அல்லாமல் இம்முறை பாஜகவும் 5 இடங்களைவிட கூடுதல் இடங்களைக் கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்தால் பரிசீலிப்பதைத் தவிர வேறு வழியில்லை அதிமுகவுக்கு. அப்படி கூடுதலாகப் பெறும் தொகுதிகளை ஓபிஎஸ் மற்றும் தினகரன் தரப்புக்கு பங்குவைத்துக் கொடுக்கும் பிளானும் பாஜகவிடம் இருக்கலாம் என்கிறார்கள்.

டி.ஜெயக்குமார்
டி.ஜெயக்குமார்

அதிமுகவின் மெகா கூட்டணி சாத்தியம் குறித்து  முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் பேசினோம். ‘’நிச்சயமாக எதிர்வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைவது உறுதி.  அதிமுக கூட்டணியில் தற்போது இருக்கும் கட்சிகளுடன் திமுக கூட்டணியில் இருக்கும் மேலும் சில கட்சிகளும் இணையும். அந்தக் கட்சிகள் பலவும் திமுக மீது அதிருப்தியில் இருக்கின்றன.  கடந்த தேர்தலில் தங்களுக்கு உரிய இடங்களை திமுக வழங்கவில்லை என்ற ஆதங்கம் அந்தக் கட்சிகளுக்கு இருக்கிறது.  அவர்கள் எல்லாம் அங்கிருந்து வெளியேற வாய்ப்பிருக்கிறது. அப்படி வருபவர்களை எங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.  

விரும்பி எங்களை நோக்கி வரும் அனைத்துக் கட்சிகளையும் இணைப்போம்; அழைத்துப் பேசுவோம்.  மெகா கூட்டணி அமைத்து அனைத்துத் தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம். எங்களுக்கு பிரதான எதிரி திமுகதான். திமுகவை எதிர்க்க எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேர நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றவரிடம், எந்த கட்சியோடும் கூட்டணி என்றால்... அமமுக, சசிகலா,  ஓபிஎஸ் ஆகியோரோடும் கூட்டணி உண்டா? என்று கேட்டதற்கு, “அவர்களை எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் கட்சியில் இணைக்கவோ,  அவர்களுடன் கூட்டணி வைக்கவோ மாட்டோம்” என்றார். 

மெகா கூட்டணி விவகாரத்தில் அதிமுகவில் ஜெயக்குமார் மாதிரியான தலைவர்கள் இதுபோன்ற மாற்றுச் சிந்தனையில் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் சமாதானம் செய்துதான் மெகா கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு இருக்கிறது. ஆனாலும், பாஜக இந்த சவால்களை எல்லாம் எதிர்கொண்டு, நினைத்த் காரியத்தை நிச்சயம் முடிக்கும். ஏனென்றால், அதற்கான அத்தனை அஸ்திரங்களும் இப்போது அவர்களுக்கு அத்துபடியாயிற்றே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in