அமைச்சரால் உளவு பார்க்கப்படுகிறாரா மேயர்?

மதுரை அரசியலில் பரபரப்பு
அமைச்சரால் உளவு பார்க்கப்படுகிறாரா மேயர்?
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியுடன் அர்ச்சனா.

மதுரை மேயர் இந்திராணியைக் கண்காணிக்க நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இளம்பெண் ஒருவரை நியமித்துள்ளதாக மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

மதுரை திமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலர் முட்டி மோதியும் மேயர் பதவி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சிபாரிசு செய்த இந்திராணிக்கு வழங்கப்பட்டது. இதனால் மேயர் பதவியேற்று விழாவை திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் பலர் புறக்கணித்தனர்.

இந்தவிழாவில் பேசிய மேயர் இந்திராணி,” நிதியமைச்சரின் வழிகாட்டுதலின் பேரிலும், மேற்பார்வையிலும் மட்டுமே எனது பணிகள் நடைபெறும்” என்று குறிப்பிட்டார். அவர் கூறியது உண்மை தான் என்பது போல, மேயரின் அனைத்து நடவடிக்கைகளையும் நிதியமைச்சர் கண்காணிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

மதுரை மாமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பயிலரங்கு நிகழ்வில் ஆணையாளர், மேயர், துணைமேயருடன் அர்ச்சனா.
மதுரை மாமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பயிலரங்கு நிகழ்வில் ஆணையாளர், மேயர், துணைமேயருடன் அர்ச்சனா.

மதுரை மாநகராட்சி வளர்ச்சித்திட்டப்பணிகளை மேயர் பார்வையிடச் செல்லும் போதும், ஆய்வு செய்யப்போகும் போதும் அர்ச்சனா என்ற இளம்பெண் இப்போது உடன் வருகிறார். அதிகாரிகளிடம் திட்ட விபரங்களைக்க கேட்டு அவர் குறிப்பெடுக்கிறார். ஆணையாளர், மேயர் கலந்துகொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளும் இவர் நீக்கமற நிறைந்திருக்கிறார். இதன் காரணமாக மாநகராட்சியில் அதிகாரமிக்க நபராக மாறி வருகிறார்.

யார் இவர் எனக்கேட்டால், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அலுவலகத்தில் பணியாற்றிய அர்ச்சனா தான், தற்போது மேயரின் தனி உதவியாளராக பணியாற்றுகிறார் என்று மாநகராட்சி அதிகாரிகள் பவ்யத்துடன் கூறுகின்றனர்.

டெல்லியில் நடைபெற்ற இந்திய அளவிலான கண்காட்சியில் மேயருடன் அர்ச்சனா மற்றும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள்.
டெல்லியில் நடைபெற்ற இந்திய அளவிலான கண்காட்சியில் மேயருடன் அர்ச்சனா மற்றும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள்.

இதுகுறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, " மேயர் தனது உதவியாளராக அர்ச்சனா என்பவரை நியமித்துள்ளார். மேயர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார். பங்கேற்கும் நிகழ்ச்சியில் நடக்கும் விபரங்களைத் திரட்டி மேயரிடம் வழங்குகிறார். மதுரையில் மட்டுமின்றி டெல்லியில் நடைபெற்ற இந்திய அளவிலான கண்காட்சி நிகழ்ச்சியிலும் மேயருடன் அவர் கலந்து கொண்டார்" என்றனர்.

"அரசுத்துறை சார்பாக நியமிக்கப்படும் உதவியாளர்கள் புகைப்படங்களில் இருப்பதை தவிர்ப்பார்கள். ஆனால், இவர் மேயர் இருக்கும் அனைத்துப் படங்களிலும் தவறாமல் இடம் பெறுகிறார். மாநகராட்சி சார்பில் அனுப்பப்படும் படங்களில் தவறாமல் இவரும் இருக்கிறார். கேட்டால், நிதியமைச்சர் ஏற்பாட்டில் வேலைக்கு சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள். இதற்கு முன்பாக மேயராக இருந்தவர்களின் உதவியாளர்கள் யாரும் இப்படி வெளிப்படையாக தங்களைக் காட்டிக் கொண்டதில்லை. ஆனால், மேயரின் தனி ஏற்பாட்டில் வேலைக்கு சேர்ந்தவர் என்பதால், அவருக்கு இந்த விஷயங்கள் பெரிதாக தெரியவில்லை" என்றும் மாநகராட்சி ஊழியர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக திமுக வட்டாரத்தில் விசாரித்த போது, " மதுரை மேயர், துணைமேயர், மண்டலத்தலைவர்கள், நிலைக்குழு ஆகியவற்றில் நிதியமைச்சரால் பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். நிதியமைச்சர் சிபாரிசில் மேயரான இந்திராணி ஏதாவது பிரச்சினையில் சிக்குவாரா என்று அவர்கள் கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக, மேயர் சிக்கலில் சிக்கக்கூடாது என்பதற்காக நிதியமைச்சர் அலுவலகத்தில் வேலை செய்தவரை மேயரின் தனி உதவியாளராக சேர்த்துள்ளனர். மேயர் யாரிடம் பேசுகிறார், அவரது அன்றாட நடவடிக்கை என்ன என்பது உள்ளிட்ட விபரங்களை இதன் மூலம் நிதியமைச்சர் அறிந்து கொள்கிறார். தனது பெயருக்கோ, தமிழக அரசிற்கோ மேயரால் கெட்டப் பெயர் வரக்கூடாது என்பதற்காக நிதியமைச்சர் செய்த ஏற்பாடு" என திமுகவினர் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.