அடையாளத்தை அழிக்கிறதா அறநிலையத்துறை?

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை

’கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு, கோயில்களுக்கு காணிக்கையாக கொடுத்த மாடுகளைக் காணவில்லை, கோயிலின் வைப்பு நிதி குறைந்துவிட்டது’ என தொடர் சர்ச்சைகளில் சிக்கி அல்லல்பட்ட தமிழக இந்து சமய அறநிலையத் துறை, தற்போது புதிதாக புராதன அடையாளத்தை தொலைக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளாகி இருக்கிறது.

இந்து அறநிலையத் துறையின் சின்னம் ( இடது)
இந்து அறநிலையத் துறையின் சின்னம் ( இடது)

அண்மையில் தெலங்கானாவில் பேசிய பிரதமர் மோடி, ’’தமிழகத்தில் உள்ள கோயில்கள் மீது அரசின் பிடி இருக்கிறது. அரசு அவற்றை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது. கோயில்களின் சொத்துகள் கூட்டு சதி மூலம் அபகரிக்கப்பட்டு வருகிறது. கோயில்கள் சூறையாடப்படுகின்றன. கோயில் சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன. நம்முடைய இந்து அடையாளங்கள் அழிக்கப்படுகிறது’’ என தமிழக அரசையும் இந்து சமய அறநிலையத் துறையையும் தாக்கிப் பேசினார்.

இந்த நிலையில், தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் போக்குவரத்துக் கழகம் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மொபைல் செயலியில் தமிழக அரசின் கோபுரம் சின்னம் மிஸ்ஸானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, போக்குவரத்துக் கழகத்தின் மொபைல் ஆப்பில் கோபுரம் சின்னம் மீண்டும் இடம் பெற்றது.

கோயிலில் வழங்கப்படும் ரசீது
கோயிலில் வழங்கப்படும் ரசீது

ஆனால், இந்து சமய அறநிலையத்துறை மொபைல் ஆப்பில் கோபுரம் சின்னம் இடம்பெற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேசமயம், அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் வழங்கப்படும் ரசீதுகளில் இடம் பெற்றிருந்த கோபுர சின்னம் நீக்கப்பட்டு புதிதாக இந்து அறநிலையத் துறையின் சின்னம் சேர்க்கப்பட்டது. இதற்கு பலரும் தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள இந்து அமைப்புகள், ‘’கோபுரத்துக்கு உரிமைப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை மட்டும் மொபைல் ஆப்பில் கோபுரம் சின்னம் வேண்டாம் என்ற எண்ணத்தில் மிகவும் அலட்சியமாக செயல்படுகிறது.

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் வரும் வருமானத்தை வைத்துத் தான் தமிழக அரசே இயங்குகிறது. தமிழக அரசு 1949ம் ஆண்டில் இருந்தே கோபுரம் சின்னத்தை அரசு சின்னமாக உபயோகித்து வருகிறது. அப்படி இருக்கையில், அறநிலையத் துறை ஆப்பில் கோபுரம் சின்னத்தை அகற்றி இருப்பது பல்வேறு சந்தேகங்களை உண்டாக்குகிறது’’ என கொந்தளிக்கின்றன.

ரமேஷ்
ரமேஷ்

இது தொடர்பாக ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ரமேஷிடம் பேசினோம்.

‘’ நான் தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். இந்து சமய அறநிலையத் துறை தன்னுடைய பாரம்பரியத்தை இழந்து வருகிறது. மக்களிடமிருந்து பணம் சுரண்டவே இந்த துறை இயங்குகிறது. ஆரம்பத்திலுருந்தே அரசின் அடையாளமாக இருக்கக்கூடிய கோபுரம் சின்னத்தையே தூக்கி இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

இவர்கள் தூக்கி வீசியுள்ளது கோபுரம் சின்னத்தை மட்டுமல்ல காலம் காலமாக இந்துக்கள் நம்பி வரும் நம்பிக்கையையும் சேர்த்துத்தான். கோயில் நகைகளை உருக்குகிறோம் என கொள்ளையடிக்க முயன்றவர்கள் தற்போது அடையாளத்தையே மாற்ற நினைப்பது வருத்தம் அளிக்கிறது. கோயில்களில் அர்ச்சனை ரசீதுகளில் கூட கோபுரம் சின்னத்தை நீக்கியுள்ளார்கள் என்றால் இவர்களின் உண்மையான நோக்கம் என்ன?

கோயில் நிலங்களை அபகரித்து வைத்துள்ளவர்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அதை ஏற்று, பட்டா வழங்க உயர்நீதிமன்றம் தடைபோட்டது. ஆனால், அந்த உத்தரவை மீறி தற்போது பட்டா வழங்கி வருகிறார்கள். ஆக, நீதிமன்றத்தையும் மதிக்கமாட்டோம் என இந்துசமய அறநிலையத்துறை அடாவடியாக செயல்படுகிறது.

கோபுரம் சின்னம் நீக்கப்பட்டது தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தின் கதவுகளை தட்ட உள்ளோம். இதேபோல, திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியிருக்கும் சமயத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தரிசனக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 100 ரூபாயாக இருந்த விஸ்வரூப தரிசனக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாளில் 500 ரூபாயாகவும், விசேஷ நாளில் 2 ஆயிரம் ரூபாயாக இருந்த அபிஷேக தரிசனக் கட்டணம், தற்போது ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்களிடம் இருந்து ஏன் இப்படி எல்லாம் கொள்ளையடிக்க வேண்டும்” என்றார் ஆவேசமாக.

சேகர்பாபு
சேகர்பாபு

இது தொடர்பாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் பேசினோம். “எந்த மதத்தின் அடையாளத்தையும் சிதைக்கவோ, புறக்கணிக்கவோ நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடுதான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். அதைத்தான் தற்போது செய்துகொண்டிருக்கிறோம். ஆன்மிகத்தை நாடும் மக்கள் எங்கள் ஆட்சியில் தான் மகிழ்ச்சியாக சுதந்திரமாக இருக்கிறார்கள்.

எல்லா மதத்திற்கும் பொதுவான ஆட்சிதான் திராவிடமாடல் ஆட்சி. அதன்மீது புழுதி வாரி வீச வேண்டும் என நினைத்தால் அதற்கான பலாபலன்களை அவர்கள் அனுபவிப்பார்கள். ஆத்திகர்கள், நாத்திகர்கள் ஒருசேர இருக்கும் நாடு நம் நாடு. மத ரீதியாக, சாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்தி அதில் ஆதாயம் காண வேண்டும் என்று துடிப்பவர்களால், இந்த ஆட்சியை எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் குற்றச்சாட்டுகளை வாரி வீசுகிறார்கள். அதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல.

மொபைல் ஆப்பில் இடம்பெற்றுள்ள சின்னம் இந்து சமய அறநிலையத் துறையின் சின்னம். தமிழக அரசின் கீழ் இயங்கக் கூடிய துறைகளில் இந்து சமய அறநிலையத் துறையும் ஒன்று. அப்படி இருக்கும் போது எங்கள் துறைக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென நினைத்தோம். அதனால் எங்கள் துறையின் சின்னம் அதில் இடம்பெற்றுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது.

கோயில்களில் வழங்கப்படும் டிக்கெட்களில் கோபுரம் சின்னம் இல்லை என்கிறார்கள். அந்த டிக்கெட்டின் சைஸ் பார்த்தீர்களா... எவ்வளவு சின்னதாக இருக்கிறது. அதில் எத்தனை சின்னங்களை அச்சடிக்க முடியும். உடனே, இவ்வளவு நாள் இருந்ததே என்பார்கள். இவ்வளவு நாள் இந்து சமய அறநிலையத்துறை என்ற ஒன்று இருந்ததே மக்களுக்குத் தெரியாமலே இருந்தது. எங்களுடைய திராவிட மாடல் ஆட்சியில் தான் இப்படி ஒரு துறை இருக்கிறது என்பது மக்களுக்குத் தெரிகிறது. அதனால் தான் சிலர் ஒரே கையெழுத்தில் அதற்கு முடிவு கட்டுவோம் என்கிறார்கள்.

எங்களுடைய துறை வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை அது. மற்ற துறைகள் மாற்றி உள்ளார்கள் என்றால் ஏன் மாற்றினீர்கள் என்று சம்பந்தப்பட்டவர் களைத்தான் கேட்க வேண்டும். எங்களை பொறுத்தவரை எந்தவிதமான பாரபட்சமும் இன்றி அனைவரும் சமம். எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கத்தோடு சென்று கொண்டிருக்கிறோம்.

திருச்செந்தூர் தரிசன கட்டண உயர்வு என்பது எங்கள் ஆட்சியில் செயல்படுத்தியது கிடையாது. அது 2018-ல் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. அது அப்படியே தொடர்கிறது. இருப்பினும் இந்த விவகாரத்தை தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். அவர் நிச்சயம் உரிய முடிவெடுப்பார்’’ என்றார்.

தங்களுடைய தனித்தன்மை வெளியே தெரிய வேண்டும் என நினைப்பதில் நிச்சயம் தவறில்லை. அதேவேளையில் எதிர்ப்பு வந்தவுடன் மற்றத்துறைகள் அதனை மாற்றியுள்ளது சம்பந்தப்பட்ட துறை மாற்றவில்லை என்றால் கேள்வி எழத்தான் செய்யும். அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளை சரிசெய்யவே நாங்கள் வந்துள்ளோம் என கூறியவர்கள், அதனை சரிசெய்யாமல் தொடர்ந்தால் நிலைமை என்னவாகும், இவர்களுக்கு அவர்களே மேல் என்றாகாதா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in