அடுத்த 'ஆட்டத்திற்கு' தயாராகிறாரா ஆளுநர்?

அடுத்த 'ஆட்டத்திற்கு' தயாராகிறாரா ஆளுநர்?
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை, நேரில் சந்தித்து, ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு வளர்ச்சியை வலுப்படுத்துதல், தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்துதல், தேசிய கல்விக் கொள்கை 2022 குறித்து கலந்தாலோசித்ததாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. "மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கும், தமிழக அரசு செயல்படுத்தும் கல்விக் கொள்கைக்கும் தொடர்பு கிடையாது" என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும், "கல்வியில் மற்ற மாநிலங்களை விட முன்னேறியுள்ள தமிழகத்தில் புதிய தேசியக் கல்விக் கொள்கையை புகுத்த நினைப்பதே தவறு" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசும் தொடர்ந்து வலியுறுத்திப் பேசி வருகின்றனர்.

மத்திய அரசு சார்பில் தேசியக் கல்விக்கொள்கை 1968-ம் ஆண்டு முதன் முதலாக உருவாக்கப்பட்டது. இதன் பின் 1976-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன் பின் 1986-ம் ஆண்டும், 1992-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு மே 27-ம் தேதி டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. அதன் 2019-ம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீது நாடு முழுவதும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள், மாணவர் இயக்கங்கள், அரசியல் கட்சியினர்,மக்கள் இயக்கங்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்தன. இந்த அறிக்கைக்கு மாற்றாக பல்வேறு விஷயங்களையும் அவர்கள் முன் வைத்தனர். ஆனாலும், 2020-ம் ஆண்டுக்கான தேசியக் கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவையில் ஜூலை 29-ம் தேதி ஒப்புதல் அளித்தது. வருங்காலத் தலைமுறையினரின் கல்வியைத் தீர்மானிக்கக்கூடிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து, நாடாளுமன்றத்திலோ, நாடாளுமன்றக் குழுக்களிலோ விவாதம் நடத்தப்படவில்லை என்ற புகாரும் அப்போது எழுந்தது.

பள்ளிக்கல்வியில் இருந்து சம்ஸ்கிருதத்தைத் திணிப்பது, மூன்றாவது மொழி என்ற பெயரால் இந்தியைக் கொண்டு வருவது, கல்வித்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பது போன்ற மூன்று காரணங்களால் மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை தமிழகத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில் தான் தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அமைத்துள்ளார். இந்தக்குழு ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கையை திமுக மட்டுமல்ல, அதிமுக அரசும் கடுமையாக ஆட்சேபம் செய்துள்ளது. "மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, பொது நுழைவுத் தேர்வு, தொழிற்கல்வி உள்ளிட்டவற்றை தமிழகம் அனுமதிக்காது" என்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தேசியக் கல்விக்கொள்கையை எதிர்த்தார். அத்துடன் இந்தக் கொள்கையை ஆராய பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவையும் அமைத்தார்.

இப்படி அதிமுக, திமுக எதிர்ப்பிற்குள்ளான தேசியக் கல்விக்கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த பாஜக அரசு பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு மே மாதம் இணையவழியில் தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக அனைத்து மாநிலங்களின் கல்விச் செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது.

இந்த நிலையில், மத்தியக்கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்த விவகாரம் பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டில் நீட்தேர்வுக்கான காலம் நெருங்குவதால் தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சரிடம் ஆளுநர் வலியுறுத்திப் பேசியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதால் அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது. தற்போது தமிழக கல்வி விவகாரத்திலும் ஆளுநர் தலையிடுவதாக திமுகவினர் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து திமுகவினரிடம் கேட்ட போது, " கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ' புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல திட்டங்கள் உள்ளதால் அதைப் பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த முன்வரவேண்டும்' என அவர் கேட்டுக் கொண்டதாக தகவல் எழுந்தது. கடந்த ஆண்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும் போது கூட, 'தற்போதைய கல்வி அமைப்பில் உள்ள தடைகளை அகற்ற மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கை உதவி புரியும்' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளை ஆதரிக்கக்கூடிய தமிழக ஆளுநர், அதை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் பேசி வருகிறார். ஏற்கெனவே, திராவிட மாடலுக்கு எதிராக மோடி மாடல் குறித்துப் பேசியுள்ளார். தமிழக புதிய கல்விக்கொள்கையை வடிவமைக்க 13 பேர் கொண்ட குழுவை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கியுள்ள நிலையில், மத்தியக் கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழக ஆளுநர் சந்தித்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. குலக்கல்வி முறையைக் கொண்டு வரத்துடிக்கும் மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை யார் மூலம் தமிழகத்தில் மத்திய அரசு அமல்படுத்த நினைத்தாலும் அதை முறியடிப்போம்" என்று கூறினர்.

Related Stories

No stories found.