வலுக்கும் எதிர்ப்பால் பின்வாங்குகிறாரா தமிழக ஆளுநர்?

வலுக்கும் எதிர்ப்பால் பின்வாங்குகிறாரா தமிழக ஆளுநர்?

தமிழகத்தில் அதிகரித்து வரும் அரசியல் எதிர்ப்புகளால் நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி 2021 செப்டம்பர் 18- ம் தேதி பதவியேற்றார். தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்வதாக தொடர்ந்து தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. அதிமுக, திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு ரத்து உள்பட 11 மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்ட பிரச்சினை பொதுவெளியில் அவரை திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் விமர்சிக்கும் அளவிற்குத் தள்ளியது.

குறிப்பாக, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியை தமிழக மக்களிடையே திமுக தந்தது. அததுடன் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது பற்றி ஆராய நீதிபதி ராஜன் குழுவையும் நியமித்தும். அக்குழுவின் அறிக்கை அடிப்படையில் மாநில சட்டப்பேரவையில் சட்டமியற்றி 2021 செப்டம்பர் மாதம் ஆளுநருக்கும் அனுப்பி வைத்தது. ஆனால், நீட் மசோதாவை பரிசீலனை செய்வதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டார். இதன் பின் 142 நாட்களுக்குப் பிறகு அந்த மசோதாவில் ஆட்சேபங்கள் இருப்பதாக தமிழக சட்டப் பேரவைத்தலைவருக்கு திருப்பி அனுப்பினார். இப்பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக சட்டப்பேரவை சிறப்பு அமர்வில் நீட் விலக்கு கோரும் மசோதா மீண்டும் விவாதம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அததுடன் சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஆளுநரை சந்தித்து வலியுறுத்திப் பேசினார். இதே கருத்தையே திமுகவின் கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தின. ஆனாலும், அந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பாமல் காலதாமதம் செய்தது திமுகவிற்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தமிழக அரசுக்கு எதிராக, ஆளுநரை வைத்து பாஜக அரசியல் செய்வதாக திமுக குற்றம் சாட்டியதுடன், தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளதுடன், தனிநபர் மசோதாவையும் தாக்கல் செய்தது.

இந்த நிலையில் ஏப்ரல் 14-ம் தேதி ஆளுநர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சந்தித்து நிலுவையில் உள்ள மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தினர். ஆனால், தனது நிலைபாட்டில் இருந்து ஆளுநர் மாறவில்லை.

"சட்டப்பேரவையின் மாண்பு, ஏழை எளிய மக்களின் உணர்வு, கிராமப்புற மாணவர்களின் கனவு இவற்றை பிரதிபலிக்கும் இந்த மசோதாவைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது வருத்தத்தை தருகிறது. எனவே ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடக்க உள்ள நிகழ்ச்சிகளில் தமிழக அரசு கலந்து கொள்ள இயலாது" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இந்த நிலையில், " ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக புறக்கணித்ததால் செலவு மிச்சம்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ், " பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்று வர ஆகும் டீசல் செலவு மிச்சம்" என ட்விட்டரில் ஷாநவாஸின் பதிலடி கொடுத்தார். இந்த ட்விட்டை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரீட்விட் செய்திருந்தார்.அதில், " தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம். அண்ணாமலை கூறியதை போன்று நிதி சேமிப்பு இருந்ததா, இல்லையா என அறிய, உரிய கோப்புகள் வரும் வரை காத்திருப்போம்" என அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த சூழலில் ஆளுநர் செயலகம், ஆளுநர் இல்லமான ராஜ்பவனுக்காக இரண்டு வகையான செலவுகளை அரசு செய்கிறது என்றும், ஆளுநரின் செயலகத்திற்கு மட்டுமே ஒரு ஆண்டிற்கு 2 கோடியே 84 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டதாக விவரங்கள் வெளியாகின. தற்போது இந்த செய்தி தான், சமூக ஊடகங்களின் பரபரப்பு செய்தியாக பரவி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் ஏப்ரல் 19-ம் தேதி மயிலாடுதுறையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்பட 13 கட்சிகள் முடிவு செய்துள்ளன. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் ஆர்.என். ரவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், " சட்டப்பேரவையில் நிறைவேப்பட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது ஆளுநரின் கடமை. ஆனால், அவரின் கடமையைச் செய்ய தமிழக அரசு இந்த அளவு போராட வேண்டிய நிலை உள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை அமைப்பிற்கு சவால் விடுபவர்களை ஆளுநர்களாக இந்தியா முழுவதும் பாஜக நியமித்து வருகிறது. இது ஜனநாயக அமைப்பிற்கு விரோதமானது. ஆனால், மற்ற மாநிலங்களைப் போல அல்ல தமிழகம். 'ஆட்டுக்குத்தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை' என்ற கருத்தை முன் வைத்த மாநிலம் இது . எனவே, எதிர்ப்பு மனநிலையிலே ஆளுநர் பணி செய்ய முடியாது. தற்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்டமசோதாக்களை அவர் குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாக தெரிகிறது. ஆனால், ஆளுநர் இந்த மசோதா மீது தனது பரிசீலனை மற்றும் குறிப்புகளையும் சேர்த்து தான் எழுதியிருப்பார். அதில் என்ன உள்குத்து இருக்கிறது" என்று தெரியவில்லை என்று கூறினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in