மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறாரா தமிழக ஆளுநர்?

மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறாரா தமிழக ஆளுநர்?

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்குமான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. திமுக அரசை வெளிப்படையாகவே விமர்சனம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

"ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்ற வாசகம் அறிஞர் அண்ணாவின் கொள்கை முழக்கங்களில் ஒன்று. அன்று முதல் இன்று வரை ஆளுநர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுக இருந்து வருகிறது. காவல்துறை அதிகாரியாக இருந்து தமிழக ஆளுநரான பி.சி.அலெக்ஸாண்டருக்கும், முதல்வராக இருந்த கருணாநிதிக்கும் பெரும் மோதலே அப்போது வெடித்தது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியதை இன்னும் திமுகவினர் மறக்கவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்ய சென்றபோது, அதை எதிர்த்து திமுகவினர் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர். அன்று சென்னை ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலமாகச் சென்ற மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். அப்போது, "மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்" என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார். அதே குற்றச்சாட்டைத் தான் இன்றைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீதும் முதல்வர் ஸ்டாலினும், திமுகவினரும் முன் வைத்து வருகின்றனர்.

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் சிந்தனை கொண்டவர்களை ஆளுநர்களாக்கி அந்த மாநில ஆட்சிக்கு குடைச்சலைக் கொடுப்பதை பாஜக வாடிக்கையாக வைத்துள்ளது. புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, அதற்கு எதிராக துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி கொடுத்த குடைச்சலை உலகறியும். பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருவதுடன், மாற்று அரசை மத்தியில் கட்டியமைக்க முயற்சி செய்யும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தற்போது ஆளுநர் ஜெகதீப் தன்கர் மூலம் குடைச்சல், கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கு எதிராக ஆளுநர் ஆரிஃப் முகமது ஆரிப்கானை வைத்து ஆட்டம் என்ற பாஜகவின் அரசியல் தொடர்கிறது.

மாநிலங்களில் ஆளுநர் என்றால், யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநர் மூலம் மத்திய அரசு செக் வைத்து வருகிறது. இதற்காக மாநில அரசுகளைவிட துணை நிலை ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் மசோதாவை பாஜக நிறைவேற்றியுள்ளது. அதாவது, துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அங்கு முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலை என்பதே அந்த மசோதாவின் உள்ளடக்கம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்பட பல கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது.

மக்கள் மூலம் ஆதரவை பெற முடியாவிட்டால் ஆளுநர்கள் மூலம் தனக்கான காரியங்களைச் செய்வது பாஜகவின் வழக்கம். தமிழகத்திலும் அதற்கான காய் நகர்த்தலில்தான் பாஜக ஈடுபட்டுள்ளது. இதற்காக காவல்துறை அனுபவத்தைப் பின்புலமாக கொண்டவர்களை வைத்தே தமிழகத்தில் திமுகவை ஒடுக்க நினைக்கிறது என்ற குற்றச்சாட்டும் உண்டு. கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலை, தற்போது பாஜகவின் தமிழக தலைவராக உள்ளார். அதேபோல காவல்துறையில் உளவுப்பிரிவில் பணிபுரிந்த ஆர்.என்.ரவி தமிழகத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் மூலம்தான் தமிழக அரசுக்கு தற்போது நெருக்கடியே.

மருத்துவப் பட்டப்படிப்பில் சேருவதற்கு மத்திய அரசு கட்டாயமாக்கியிருக்கும் நீட் தேர்வு முறையில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற திமுகவின் நிலைபாட்டிற்கு பாஜக மட்டுமின்றி தமிழக ஆளுநர் ரவியும் எதிராகவே உள்ளார். நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கும் சட்ட முன்வடிவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி, இரண்டாவது முறையாக அனுப்பியும் அவர் இதுவரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உள்ளார். துவக்கத்தில் இருந்து நீட் தேர்விற்கு ஆதரவான கருத்தையே அவர் பதிவு செய்து வருகிறார். “ நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது” என்ற முதல் சட்டமன்ற முன்வடிவிற்கு ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பின் வாயிலாக பதில் சொன்னார். குடியரசு தின வாழ்த்துச் செய்தியிலும் நீட் தேர்விற்கு ஆதரவான கருத்தையே அவர் பதிவு செய்திருந்தார்.

இதன் காரணமாக நீட் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலதாமதம் செய்கிறார். எனவே அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்ற திமுகவின் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்குக் காரணம், பாஜகவின் குரலாகத்தான் தமிழக ஆளுநர் பேசி வருகிறார் என்பதுதான்.

இதுகுறித்து திமுகவினரிடம் கேட்டதற்கு, "மோடி தலைமையிலான அரசை ஒன்றிய அரசு என்றே முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு 'இந்தியா ஓர் ஒப்பந்தப் பிரிவின் ஒன்றியம் அல்ல' என பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி பதிலளிக்கிறார். திமுக பேசி வரும் திராவிட மாடல் என்ற கருத்தாக்கம் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இதற்கு எதிராக பாஜக தலைவர்கள் பேசுவது அரசியல் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அதையும் விமர்சனம் செய்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி பேசும்போது,' கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஏழைகள், கல்வியறிவு இல்லாதவர்கள், நோயுற்றவர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மாடல், உணவு, உறைவிடம், சுகாதாரம், கல்வி, மின்சாரம், சமையல் எரிவாயு என அடிப்படை வசதிகள் எந்த பாகுபாடும் இல்லாமல், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் சென்று அடைந்திருக்கிறது' என்று பேசியுள்ளார். தமிழகத்தில் திராவிட மாடலுக்கு எதிராக மோடி மாடலைப் பிரச்சாரம் செய்யும் வேலையை ஆளுநர் செய்வது மோசமான செயலாகும். எனவே, அவரை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in