அஸ்தமிக்கிறதா ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கை?

அதிமுகவின் தனிப்பெரும் தலைவராக உருவெடுக்கும் ஈபிஎஸ்!
ஓபிஎஸ்
ஓபிஎஸ்அதிமுகவில் ஓபிஎஸ் சகாப்தம் முடிந்ததா...?

“எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அதிமுக பொதுக்குழு செல்லும்” என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் சகாப்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக பழனிசாமி ஆதரவாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். உண்மையாகவே ஓபிஎஸ் சகாப்தம் முடிந்துவிட்டதா..?

ஜெயலலிதா மறைவை அடுத்து தன்னை அதிமுக பொதுச்செயலாளராக பிரகடனம் செய்துகொண்ட சசிகலாவுக்கு எதிராக பாஜக தயவுடன் தர்மயுத்தம் தொடங்கினார் ஓபிஎஸ். 2017 பிப்ரவரியில் தொடங்கிய அவரது தர்மயுத்தம் சசிகலா சிறை சென்றவுடன் நிறைவுக்கு வந்தது.

அடுத்ததாக அதிமுக அணிகள் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் அமர்ந்தார் ஓபிஎஸ். அதன் தொடர்ச்சியாக ‘அதிமுகவின் பரதன்’ என்றும் சொல்லும் அளவுக்கு அனைத்திலும் விட்டுக்கொடுத்தார். “கட்சியின் கட்டுக்கோப்பு கலைந்துவிடக் கூடாது என்பதற்காக அனைத்தையும் சகித்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி வந்த ஓபிஎஸ் அதைச் சொல்லிச் சொல்லியே, தர்மயுத்ததின் போது தன்னை நம்பி வந்தவர்களையும் கண்டுகொள்ளாமல் விட்டார். யார் நம்மைவிட்டு விலகிச் சென்றாலும் டெல்லியில் இருக்கும் பாஜக தலைவர்கள் தன்னைக் கைவிடமாட்டார்கள் என அவர் பெரிதும் நம்பினார். அந்த நம்பிக்கையும் இப்போது பொய்த்துப் போய்விட்டது.

ஒவ்வொரு கட்டத்திலும் ஓபிஎஸ்ஸின் இறங்குமுகத்தை தனக்கான ஏறுமுகமாக பயன்படுத்திக் கொண்ட ஈபிஎஸ், கடந்த ஜுலை மாதம் பொதுக்குழுவைக் கூட்டினார். அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அவர் தேர்வுசெய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றம் வரை சென்றார். ஒருவழியாக, ஈபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் இப்போது தீர்ப்பு வழங்கிவிட்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருக்கிறார் ஓபிஎஸ்.

இனி ஓபிஎஸ்ஸுக்கான எதிர்காலம் எப்படி இருக்கும் என அவரது விசுவாசிகளில் ஒருவரான மனோஜ் பாண்டியனிடம் பேசினோம். ‘’எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு மட்டுமே செல்லும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நீதிபதிகள் எதுவும் குறிப்பிடவில்லை. நாங்கள் நிச்சயம் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம். சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இன்னமும் எங்களுக்கான வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

அவரிடம் மேலும் சில கேள்விகளை முன் வைத்தோம்.

ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை முடிந்தது என்கிறார்களே..?

அவர்களுக்கெல்லாம் விரைவில் பதில் கூறுவோம்.

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய அவர்களால் கோரிக்கை வைக்க முடியுமா..?

சட்டப்படி அவர்களால் அது முடியாது. ஏனெனில், அவர்கள் கணக்குப்படி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் எங்களை நீக்கிவிட்டார்கள். அதனால் அதிமுக கொறடா உத்தரவு எங்களைக் கட்டுப்படுத்தாது. அவரும் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த முடியாது.

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர மற்றவர்கள் யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம் என ஈபிஎஸ் தரப்பில் சொல்கிறார்களே?

எம்ஜிஆர் வகுத்துக்கொடுத்த அதிமுக சட்ட விதிகளை காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அதனை செயல்படுத்தும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.

மனோஜ் பாண்டியன்
மனோஜ் பாண்டியன்அதிமுகவில் ஓபிஎஸ் சகாப்தம் முடிந்ததா...?

ஓபிஎஸ்ஸுக்கு இனி என்ன வழி இருக்கிறது என ஈபிஎஸ் ஆதரவாளரான வழக்கறிஞர் இன்பதுரையிடம் கேட்டதற்கு, “ஓபிஎஸ்ஸுக்கான வாய்ப்புகள் இனிமேல் அதிமுகவிலும் கிடையாது; அரசியலிலும் கிடையாது. எப்படி எடப்பாடி பழனிசாமி என்ற மலையுடன் மோதி டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் ஒதுங்கினார்களோ அதேபோல இவரும் ஒதுங்கி விட வேண்டியதுதான்.

அடுத்த கட்டமாக நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்போம். மூன்று மாதத்துக்குள் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முடிப்போம் என தெரிவித்து இருந்தோம். அதன்படி விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும். அதில் ஒருமனதாக அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக ஈபிஎஸ் தேர்வுசெய்யப்படுவார்’’ என்றார்.

சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து கேட்டதற்கு சலிப்பாக பதில் அளித்த அவர், “திரும்பவும் முதலிலிருந்து வர வேண்டும். அதற்கு 20 ஆண்டுகள் ஆகும். அதெல்லாம் இப்போதைக்கு ஆகிற கதையல்ல ‘’ என்றார்.

இன்பதுரை
இன்பதுரை

”தனக்கான அரசியல் எதிர்காலத்தை தக்கவைக்க டிடிவி தினகரனின் அமமுகவில் ஓபிஎஸ் ஐக்கியம் ஆகலாம் அல்லது சசிகலாவுடன் இணைந்து எம்எல்ஏ-க்களை விலைபேசி கட்சியை உடைக்கலாம். இல்லையெனில் தனிக்கட்சி தொடங்கலாம். எப்படி இருந்தாலும் அதிமுகவில் ஓபிஎஸ்ஸுக்கான பாதை அடைக்கப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது” என்கிறார்கள் பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள்.

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்கள். ஓபிஎஸ் விவகாரத்தில் என்னவெல்லாமோ நடந்துவிட்டது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in