சசிகலாவை இணைக்க அதிமுகவை அச்சுறுத்துகிறதா பாஜக?

பிரதமருடன் ஈபிஎஸ், ஓபிஎஸ்
பிரதமருடன் ஈபிஎஸ், ஓபிஎஸ்

தமிழ்நாட்டில் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் சமீபகாலமாக எழுந்திருக்கும் வார்த்தைப் போருக்கு காரணம் அவற்றில் யார் பெரிய கட்சி அல்லது பலம் வாய்ந்த கட்சி என்ற போட்டியாகத்தான் வெளியில் பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அந்த சர்ச்சைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது சசிகலா விவகாரம்தான் என்கிறார்கள். நயினார் நாகேந்திரன் ஆரம்பித்து வைத்ததும், பொன்னையன், செல்லூரார் பொங்கியதும் எல்லாவற்றிற்குமே காரணமாக இருப்பது சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது என்ற விவகாரம்தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

சசிகலா
சசிகலா

இரண்டு கட்சிகளிலிருந்தும் கடுமையானத் தாக்குதல்கள் எழுந்தாலும், இரண்டு கட்சிகளின் தலைவர்களும் இதில் பட்டுக்கொள்ளாமல் ’அது அவரின் சொந்தக் கருத்து’ என்று சொல்லிவிட்டு வேறு எதுவும் பேசாமல் போய்விடுகிறார்கள். ஆனால் அவர்களைப் பேசவைத்திருப்பதே அந்தந்த கட்சிகளின் தலைமைதான். தங்களின் முடிவை ஏற்றுக்கொள்ள வைக்க அதிமுகவை பாஜகவின் அடுத்தகட்ட தலைவர்களை வைத்து விமர்சிக்கிறது பாஜக. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இரண்டாம் கட்ட தலைவர்களை பேசவைத்து மறுக்கிறது அதிமுக.

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தற்போதே வேகமாக தயாராகி வருகிறது பாஜக. அ்ண்மையில் குஜராத் சென்றிருந்த பிரதமர் மோடி இந்த எட்டு ஆண்டுகளில் இந்தியா சாதித்திருப்பது என்ன என்பதை அங்கே பட்டியலிட்டார். தமிழகம் வந்தபோதும் தனது அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்ல அவர் தவறவில்லை. பாஜகவின் மாநில தலைவர்களும் அந்தந்த மாநிலங்களில் எட்டாண்டு கால பாஜகவின் சாதனைகளை எடுத்துச் சொல்வதையே தங்கள் முக்கிய வேலையாக வைத்திருக்கிறார்கள். எட்டாண்டு கால சாதனைகளை விளக்க தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

பாஜக இரண்டாம் கட்ட தலைவர்களுடன் அண்ணாமலை
பாஜக இரண்டாம் கட்ட தலைவர்களுடன் அண்ணாமலை

2024 நாடாளுமன்றத் தேர்தலில் வடமாநிலங்களில் கடந்த தேர்தலில் கிடைத்த இடங்களைவிட தற்போது குறையலாம் என்று ஊகித்திருக்கும் பாஜக, அந்த இடங்களை தென் மாநிலங்களில் சரிகட்ட வேண்டும் என்று குறி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தற்போது பாஜக அக்கட்சி வேகமாக வளர்ந்து வந்தாலும் தனித்து நின்றால் ஓரிடத்தில்கூட வெல்லும் வலிமை அக்கட்சிக்கு இல்லை.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல பூத்களில் அக்கட்சிக்கான ஏஜெண்டுகள் இல்லாத நிலையே காணப்பட்டது. ஆனாலும் 25 இடங்களில் வெல்வோம் என்று அடித்துச் சொல்கிறார் அண்ணாமலை.

அப்படி அவர் கூறினாலும், அதிமுக பலமாக இருந்தால்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்து அதிமுகவுக்கென்று சில உறுப்பினர்களையும், தங்களுக்கான சில உறுப்பினர்களையும் வென்றெடுக்க முடியும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அதனால் தங்கள் கட்சியை வலுப்படுத்திக் கொண்டேவரும் பாஜக, அதிமுகவையும் வலுவாக்குவது என்ற இடத்திற்குத் தற்போது வந்திருக்கிறது. அதற்கு அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவை திரும்பவும் கட்சியில் இணைப்பது என்கிற அஜெண்டாவை பாஜக கையில் எடுத்திருக்கிறது.

இதுகுறித்து சசிகலாவுக்கும் சமிக்ஞைகள் கிடைத்திருக்கிறது. அதனால்தான் அவர் செல்லும் இடமெல்லாம் அதிமுக என்னுடைய தலைமையில் சிறப்பாக செயல்படும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருக்கான சமிக்ஞை நடிகை விஜயசாந்தி மூலமாக கிடைத்திருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சசிகலாவை ரகசியமாக சந்தித்திருக்கிறார் நடிகை விஜயசாந்தி. அவர் பாஜக தலைமைக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அதனால் தஞ்சை மாணவி மரணத்தில் உண்மை அறியும் குழுவிலும்கூட அவர் இடம்பெற்றார்.

அப்போதும் சென்னை சென்று சசிகலாவைச் சந்தித்துவிட்டே விஜயசாந்தி சென்றார். தன்னை சந்தித்த விஜயசாந்தியிடம் தலைமையிடமிருந்து தனக்கு உதவி கிடைக்கச் செய்யவேண்டும் என்று சசிகலா கேட்டுக் கொண்டிருந்தார். அதை விஜயசாந்தி தலைமையிடம் குறிப்பாக அமித்ஷாவின் காதில் போட்டு வைத்திருந்தார். அப்போது அதற்கான எந்த இசைவுகளும் இல்லை. ஆனால் இப்போது சசிகலாவுக்கான தேவை இருக்கிறது என்று பாஜக நினைக்கிறது.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் ஆதரவை ஒருமுகப்படுத்த நினைக்கும் அக்கட்சி தவிர்க்க முடியாத சமூகமாக இருக்கும் முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவுக்கு கடந்த தேர்தலில் கிடைக்கவில்லை என்பதால் அதை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு அறுவடைசெய்ய முடிவெடுத்திருக்கிறது. சசிகலாவை அதிமுகவில் இணைப்பதால் மட்டுமே அந்த சமூகத்தின் வாக்குகள் அதிமுகவுக்கு முழுமையாக கிடைக்கும், அதன்மூலம் பாஜகவும் பலன்பெற முடியும் என்று அக்கட்சி முடிவு செய்திருக்கிறது.

அதனையடுத்தே விஜயசாந்தி மூலமாக சசிகலாவிடம் பேச்சு நடத்தியிருக்கிறது. அதிமுகவில் இணைத்து அதிகாரமிக்க பதவியில் அமர்த்தினால் அதற்குப் பிரதிபலனாக கிட்டத்தட்ட சரிசமமான இடங்களைப் பாஜகவுக்கு ஒதுக்கவேண்டும் என்ற பாஜகவின் நிபந்தனைகள் அனைத்திற்கும் சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

கடந்த 5-ம் தேதியன்று விழுப்புரம் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ‘’அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்க வெகுநாட்கள் இல்லை. அதிமுகவிலிருந்து நீக்கப்படும் தொண்டர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம். நான் தலைமையேற்றதும் அவர்களுக்கு நல்ல பதவிகள் வழங்கப்படும்” என அழுத்தமாக கூறியிருப்பதைக் கொண்டு அவரின் மனவோட்டத்தையும், பாஜகவின் முடிவையும் உணர்ந்து கொள்ளலாம்.

அதனால் எடப்பாடி தரப்பில் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. ஒபிஎஸ்ஸுக்கு எந்த தயக்கமும் இல்லாத நிலையில் சசிகலாவை சேர்ப்பதில் எடப்பாடி மிகுந்த தயக்கம் காட்டிவரும் நிலையில்தான்அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான வேலைகளில் பாஜக இறங்கியிருக்கிறது. அண்மையில் சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்டவர்களை சந்தித்தபோது கட்சிக்குள் ஒற்றுமை குறித்து வலியுறுத்தியிருக்கிறார். அப்போது சசிகலா குறித்தும் பேசினார் என்கிறார்கள்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசியபோதும் இதுகுறித்த அவர்களது மனவோட்டத்தை அறிந்துகொண்டாராம். சசிகலா பேச்சையெடுத்ததை எடப்பாடி அவ்வளவாக விரும்பவில்லையாம். அதை பிரதமர் உணர்ந்து கொண்டிருக்கிறார். அதனையடுத்தே அமித்ஷா மூலமாக பல நகர்வுகள் நடக்க ஆரம்பித்தன. முதலில் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து பேசி ஆழம் பார்த்தார். ’’அதிமுகவில் சின்னம்மாவை சேர்ப்பதுதான் அக்கட்சிக்கு வலு சேர்க்கும் , அப்படி சேர்த்துக்கொள்ள அதிமுக தவறினால் சசிகலாவை நாங்கள் பாஜகவில் சேர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் வெளிப்படையாகச் சொன்னார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ்.
ஓபிஎஸ், ஈபிஎஸ்.

பிரதமர் மோடி நேரடியாகவே கூறியும், எடப்பாடி தரப்பினர் சசிகலா சேர்க்கை குறித்து வாய்திறக்காத நிலையில்தான் நீங்கள் சேர்க்கிறீர்களா? அல்லது நாங்கள் சேர்த்துக் கொள்ளட்டுமா என்று அதிமுகவை நேரடியாக மிரட்டினார் நயினார். பாஜகவின் இந்த அழுத்தத்திற்கு அதிமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் பொன்னையன் மூலமாக பதிலளிக்கப்பட்டது.

தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில உரிமைகளுக்காக போராடவில்லை என்பது நாடறிந்த உண்மை என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அழுத்தம் திருத்தமாக சொன்ன பொன்னையன் அதற்கான பட்டியலையும் அளித்தார். காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு விவகாரங்களில் தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜக குரல் எழுப்புவது கிடையாது. மக்கள் மத்தியில் இதை அம்பலப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் அதிமுகவின் இடத்தை பாஜக நிரப்ப பார்க்கிறது.

பொன்னையன்
பொன்னையன்

அப்படி தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல என்று வெளிப்படையாக உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். தொண்டர்களது உள்ளக்கருத்தை உள்ளது உள்ளவாறே அவர் சொல்லியிருப்பதை அதிமுக தொண்டர்கள் அனைவருமே வரவேற்கிறார்கள். அவரது கருத்துக்கு பாஜக தரப்பிலிருந்து வி.பி.துரைசாமி, எச்.ராஜா போன்றவர்கள் பதில் அளித்தார்கள். அதனால் கோபமடைந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்னும் ஒருபடி மேலேபோய் ’’பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம்” என்று விமர்சித்தவர், அதிமுக தனித்துப் போட்டியிடவும் தயார் என்று காட்டம் காட்டினார். அதற்கு பாஜக தரப்பில் கரு.நாகராஜன் பதிலடி கொடுத்தார்.

இந்த வார்த்தை மோதல்கள் அப்படியே வலுப்பெற்று, அதனால் அதிமுக, பாஜகவை விட்டு ஒதுங்கும் நிலை ஏற்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக உறுப்பினர்களை பெறுவது என்ற தங்கள் நிலைப்பாட்டிற்கு பாதகமாக ஆகிவிடும் என்பதால் அண்ணாமலை சுதாரித்துக் கொண்டார். "அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூறிய கருத்துக்கள் அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிஆகியோரின் கருத்துக்களே அதிகாரப்பூர்வமான கருத்து. எனவே, இரண்டாம் கட்டத் தலைவர்கள் கருத்துக்களுக்கு பாஜகவினர் யாரும் பதில் அளிக்க வேண்டாம்" என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். அதிலுள்ள உண்மையை புரிந்துகொண்ட பாஜகவினர் தற்போது வேகம் குறைந்து அமைதி காக்கிறார்கள். ஆனால் பாஜகவினரின் பேச்சுக்கள் அதிமுகவினரைப் புண்படுத்தியிருப்பதை சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அவர்களின் கருத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

இன்னொரு பக்கம் அதிமுகவை பலமில்லாத கட்சி என்பதாக காட்டவும் பாஜக முயல்கிறது. அறிக்கைகள், ஊழல் குற்றச்சாட்டுகள், போராட்டங்கள் என்று எப்போதும் பரபரப்பாக செயல்படுவதன் மூலம், அதிமுகவை ஒரம்கட்டி விடுவோம் என்றும் பாஜக எச்சரிக்கிறது. அதற்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது அதிமுக. எடப்பாடி உள்ளிட்டவர்களின் மீதான வழக்குகள் சிலவும் தூசி தட்டப்படுவதாக சொல்கிறார்கள்.

இப்படிசசிகலாவை சேர்க்கச் சொல்லி எடப்பாடிக்கு நாலாபக்கமிருந்தும் பாஜக அதிக நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதற்கு எதிர்வினையாகத்தான் இரண்டாம் கட்ட தலைவர்களான எடப்பாடியின் விசுவாசிகள் பாஜகவை விமர்சிக்கிறார்கள். ஆனால் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், எடப்பாடி எம்மாத்திரம் என்று கேட்கும் அரசியல் பார்வையாளர்கள் விரைவில் சசிகலா இணைப்புக்கான தேதி குறிக்கப்படும் என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in