பரிந்துரையின் அடிப்படையில் தான் பாரத ரத்னா வழங்கப்படுகிறதா ?

பரிந்துரையின் அடிப்படையில் தான் பாரத ரத்னா  வழங்கப்படுகிறதா ?
அண்ணாமலை

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இணையான சர்ச்சைக்குரிய பெயராக தமிழகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பெயரும் மாறியுள்ளது பெரிய ஆச்சரியம்தான். 'அம்பேத்கர் அன்ட் மோடி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அந்த முன்னுரையில் பிரதமர் மோடியை அவர் புகழ்ந்து பல இடங்களில் எழுதியுள்ளார். ஆனால், மோடியை அம்பேத்கருடன் இணைத்து அவர் எழுதியது தான் இவ்வளவு விமர்சனத்திற்கும் காரணமாக அமைந்து விட்டது.

அப்படி என்ன அவர் எழுதியிருக்கிறார் என்று நீங்கள் கேட்கலாம். " டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு அரிய தலைவர். அவர் தனது காலத்திலேயே சரித்திரம் படைத்தார், அவர் மறைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும் அவரது வாழ்க்கை பரவலாக வாசிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறார். சில ஆண்டுகளுக்கு முன், டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் நீர் மற்றும் ஆற்று வழிப்பாதை கொள்கையின் சிற்பி என்று குறிப்பிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. நீர் மற்றும் பாசனம் தொடர்பான சில முக்கிய நிறுவனங்களை உருவாக்குவதில் அம்பேத்கர் பங்கு வகித்துள்ளார் என்பதை அறிந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 2016-ம் ஆண்டு முதலீட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் இருந்தே இதைப் பற்றி தெரிந்து கொண்டது சிறப்பானது" என்று இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா
இளையராஜா

மேலும்," ஒருவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அவரது கொள்கைகளை உள்வாங்குவதும், அவரது யோசனைகளைச் செயல்படுத்துபவர்களை ஊக்குவிப்பதும் அதைவிட முக்கியம். ஒருவரது கற்பனைக்கு வரம்புகள் இல்லை என்றாலும், செயல்படுத்துவதில் பல தடைகள் உள்ளன. மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்பும் ஆர்வமும் கொண்ட ஒரு உண்மையான தலைவர் மட்டுமே, தனது அடையாளத்தை விட்டுவிட்டு, தர்க்கரீதியாகவும் கவனமாகவும் செயல்படுவதை உறுதி செய்ய முடியும். இந்த வகையில், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை ஆராய இந்த நூல் முயற்சிக்கிறது" என்று இளையராஜா எழுதியுள்ளார். அத்துடன் " அம்பேத்கர், நரேந்திர மோடி ஆகிய இரண்டு ஆளுமைகளுக்கும் இடையிலான ஆச்சரியமூட்டும் ஒற்றுமைகளையும் இந்த நூல் வெளிக்கொணர்ந்துள்ளது. இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்லர். இருவருமே செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள்" என்று இளையராஜா எழுதிய முன்னுரை தான், குடியரசு தலைவர் பதவிக்கு அவர் பெயர் அடிபடுகிறது என்ற பரப்புதலுக்கும் காரணமாக அமைந்து விட்டது.

இந்த முன்னுரை விவகாரம் வெளியான போதே, "ஆர்எஸ்எஸ்காரர்கள் இளையராஜாவை சுற்றி வளைத்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டிருந்தார். ஒருவர் கருத்துச் சொல்வதையே ஏற்க முடியாத மனநிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனரா என்ற கேள்வியும் இளையராஜா விஷயத்தில் எழுப்பப்படுகிறது. ஒருவரின் கருத்தை ஏற்கவோ, நிராகரிக்கவோ அனைவருக்கும் உரிமை உள்ளது. அவர் எந்த பிரச்சினையின் மீது கருத்து தெரவித்துள்ளார் என்பதை பொறுத்தே எதிர்வினைகள் அமைகின்றன என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டியதுள்ளது. தன் மீதான விமர்சனங்களுக்குப் பதில் அளிக்க தயார் என்று இளையராஜா கூறியதாக அவரது சகோதரரான பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப்பிரிவு மாநில நிர்வாகியான கங்கை அமரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியைக் குவிக்க நினைக்கும் பாஜக அதற்கு ஆதரவாளர்களைத் திரட்ட நினைக்கிறது. திராவிடப் பாரம்பரிய கருத்தியலைக் கொண்ட தமிழகத்தில், அதற்கான முன்னெடுப்புகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் ஆளுநர் மூலம் தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது. அத்துடன் 'இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்' என்ற திட்டத்தின் மூலம் மக்களை அந்த கட்சி சந்தித்தாலும், புகழ் வெளிச்சம் உள்ளவர்களின் மூலம் தமிழகத்தில் அழுத்தமானத் தடத்தைப் பதிக்க நினைக்கிறது.

அதற்காக மக்களின் மனதில் இடம் பிடித்த பிம்பங்களைத் தன்வயப்படுத்த முயற்சி செய்கிறது. இதனால் தான், "முன்பு நடிகர் ரஜினிகாந்தையும், தற்போது இளையராஜாவையும் அது பயன்படுத்த நினைக்கிறது" என்று கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம் சாட்டியிருந்தார். இளையராஜா குறித்த இணையங்களில் கொட்டிக் கிடக்கும் விமர்சனங்களில் இருந்து தங்கள் கட்சியினரை எட்டியிருக்கச் சொல்லி திமுக உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், இளையராஜா பிரச்சினையில் திமுகவைத் தொடர்ந்து பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

"இளையராஜா என்ன குற்றம் செய்தார்? அறிவாலயம் மற்றும் அதன் சுற்றத்துக்குப் பிடிக்காத கருத்து, குற்றமா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ளது. அதையே இளையராஜாவுக்கு மறுத்ததன் மூலம், திமுக தனது தலித் விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தன்மையைக் காட்டியுள்ளது” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்தைப் பதிவிடுகிறார். இதற்கு ஒருபடி மேலே போய் பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா கண்டன அறிக்கையையே வெளியிட்டுள்ளார். அதில்," தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள், இளையராஜா மீது எதிரான கருத்துகளைக் கூறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தங்களுக்கு ஆதரவாகப் பேசவில்லை என்பதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பது ஒரு சரியான அணுகுமுறை கிடையாது. இதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இப்படி இளையராஜாவிற்கு ஆதரவான பாஜகவின் குரல்களுக்கு மத்தியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து தான், தற்போது பொதுச்சமூகத்தில் செயல்படும் செயல்பாட்டாளர்களிடையே ஒருரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது. " இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதத் தயாராக இருக்கிறேன்'' என அண்ணாமலை சொன்ன கருத்து தான் அந்த கேள்விக்கான காரணம்.

கலை, அறிவியல், இலக்கியம், கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொதுச்சேவை உள்ளிட்டவைகளில் மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. ஒருவர் செய்யும் சாதனைக்காக வழங்கப்படும் விருதை, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வாங்கித்தர முடியுமா என்ற கேள்வியை அண்ணாமலை விதைத்துள்ளார். அப்படியென்றால், பாஜக ஆட்சியில் வழங்கப்பட்ட, வழங்கப்படும் பாரத ரத்னா விருதுகள் இப்படி பரிந்துரை கடிதங்கள் எழுதி தான் வழங்கப்படுகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

வன்னியரசு
வன்னியரசு

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு கூறுகையில், " பாரத ரத்னா வழங்குவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த வரையறையின் அடிப்படையில் தான் இந்த விருது வழங்கப்படுவதாக இதுவரை நினைத்திருந்தேன். ஆனால், பரிந்துரையின் அடிப்படையில் வழங்குகிறார்கள் என்பது அண்ணாமலை சொன்ன பிறகு தான் தெரிய வருகிறது. அவர் பரிந்துரை செய்யும் அளவிற்கோ, அவர் பரிந்துரை செய்யும் நிலையிலோ இளையராஜா அவ்வளவு தகுதி குறைவாக இருக்கிறாரா என்று தெரியவில்லை. இளையராஜா உலகம் போற்றும் மாமேதை. சிம்பொனி இசை அமைத்தவர். அப்படிப்பட்டவரை உலகம் முழுவதும் உள்ளவர்களுக்குத் தெரியும். பரிந்துரை செய்து அறிமுகப்படுத்தும் அளவிற்கு மோசமான நிலையில் இளையராஜாவை காட்டுவதே அண்ணாமலையின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. முழுக்க முழுக்க அரசியலுக்காக, ஏமாற்று வேலைக்காக இளையராஜா புகழை தங்கள் பக்கம் திருப்புவதற்காக அவரது ரசிகர்கள் மூலமாக அரசியல் லாபத்தை பெறுவதற்காக அண்ணாமலை முயற்சி செய்கிறார். பாரத ரத்னா வழங்க இளையராஜா எல்லாவிதத்திலும் தகுதியானவர். ஆனால், அதை பரிந்துரை செய்வதற்குத் தகுதி இல்லாத நபர் அண்ணாமலை" என்று வன்னியரசு கூறினார்.

Related Stories

No stories found.